நான் பார்த்த முதல் பெண் பாடலாசிரியர்: கவிஞர் தாமரைக்கு இயக்குநர் பிரியதர்ஷன் பாராட்டு!

உதயநிதியை இப்படம் வேறு தளத்திற்கு இட்டுச் செல்லும் என நினைக்கிறேன். பொங்கலுக்கு திரைக்கு வரக்கூடும்...
நான் பார்த்த முதல் பெண் பாடலாசிரியர்: கவிஞர் தாமரைக்கு இயக்குநர் பிரியதர்ஷன் பாராட்டு!

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நிமிர் படம் அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. மகேஷிண்ட பிரதிகாரம் (Maheshinte Prathikaram) என்கிற மலையாளப் படத்தின் ரீமேக் இது. 

இசை - தர்புகா சிவா, அஜ்னீஷ் லோக்நாத். இப்படத்துக்காக கவிஞர் தாமரை எழுதிய இரு பாடல்களுக்கு அஜ்னீஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கவிஞர் தாமரை இப்படப்பாடல்கள் குறித்து ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

27.12.17. 'நிமிர்' படப்பாடல் ' நெஞ்சில் மாமழை ' வெளியீடு.

சில தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் 'நிமிர்' திரைப்படத்தின் ஒரு பாடல் திரு ரஹ்மான் அவர்களால் வெளியிடப்பட்டது. இயக்குநர் பிரியதர்ஷன். இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் தமிழுக்குப் புதியவர்.

உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும் இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற 'மகேஷிண்ட பிரதிகாரம்' படத்தின் தமிழ்ப் பதிப்பு !. மலையாளத்தில் பகத் ஃபாசில் செய்த பாத்திரம் உதயநிதி ஸ்டாலின் ஏற்றிருக்கிறார். அனைவரும் வியக்கும் ஒரு உதயநிதியைக் காணலாம். நான் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். இரண்டுமே, ஏற்கெனவே எடுக்கப்பட்ட காட்சித் துண்டுகளை ஓரளவு பார்த்து எழுதியது. முழுக்க முழுக்க மெட்டுக்கானது. படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள். இன்னொருவர் தர்பூகா சிவா. நான் எழுதிய இரண்டு பாடல்களுமே அஜ்னீஷுக்கு எழுதியது. பாடல் பதிவின்போது முழுமையாக உடனிருந்தேன்.

இயக்குநர் பிரியதர்சன் அவர்களை சந்தித்தபோது, தன் முப்பதாண்டு திரையுலக வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு பெண் பாடலாசிரியரைப் பார்ப்பதாக வியந்தார். 

படம் தமிழுக்கேற்ப மாற்றம் செய்யப் பட்டுள்ளது. உதயநிதியை இப்படம் வேறு தளத்திற்கு இட்டுச் செல்லும் என நினைக்கிறேன். பொங்கலுக்கு திரைக்கு வரக்கூடும் என்று எழுதி பாடல் வரிகளையும் வெளியிட்டுள்ளார்.

இனி...பாடல் வரிகள்...

படம் : நிமிர்
இயக்கம் : பிரியதர்சன்
இசை : அஜ்னீஷ் லோக்நாத்
பாடல் : தாமரை
பாடியவர்கள் : ஹரிசரண், ஸ்வேதா மேனன்
நடிப்பு : உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத்
காட்சி : காதல், முதல்முறையாக வெளிப்படுத்திக் கொள்வது, தொடரும் சந்திப்புகள்...

பல்லவி.

ஆ :
நெஞ்சில் மாமழை... நெஞ்சில் மாமழை... தந்து வானம் கூத்தாட...

கொஞ்சும் தாமரை... கொஞ்சும் தாமரை... வந்து எங்கும் பூத்தாட...

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது ...!
எட்டி நின்று எட்டி நின்று காய்வது... !
கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது ...
கண்மூடி.. கண்மூடி... காதோரம் பாடுது...!

சரணம் 1.

பெ :

வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது.... அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது ...
வாராமல் போகும் நாட்கள்
வீண் என
வம்பாக சண்டை போட வாய்க்குது...

ஆ :

சொல்லப்போனால்
என் நாட்களை...
வண்ணம் பூசித் தந்தவளும் நீதான்...! துள்ளல் இல்லா
என் பார்வையில்
தூண்டில் மீனாய்
வந்தவளும் நீதான்...!

சரணம் 2.

பெ :

பாசாங்கு செய்ததெல்லாம்
போதுமே..!
ராசாவைத் தேடிக்
கண்கள் ஓடுமே..!

ரோசாப்பூ மாலை ரெண்டு
வேண்டுமே..!
பேசாமல் மாற்றிக்கொள்ளத் தோன்றுமே..!

ஆ :

பெண்கள் இல்லா என் வீட்டிலே....
பாதம் வைத்து
நீயும் வர வேண்டும் ...
தென்றல் இல்லா என் தோட்டத்தில் ...
உன்னால் தானே
காற்று வரும் மீண்டும்..!

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது...
எட்டி நின்று எட்டி நின்று காய்வது..!
கள்ளக் குரல் பாடல் உள்ளே ஓடுது ...
கண் மூடி... கண்மூடி... காதோரம் பாடுது...

நெஞ்சில் மாமழை...
நெஞ்சில் மாமழை...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com