முக்கியத்துவம் குறைக்கப்பட்ட ‘வேலைக்காரன்’ கதாபாத்திரம்: நடிகை சினேகா வேதனை!

நான் 15 நிமிடங்களாவது வருவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் ஐந்து நிமிடங்களே திரையில் வந்துள்ளேன்... 
முக்கியத்துவம் குறைக்கப்பட்ட ‘வேலைக்காரன்’ கதாபாத்திரம்: நடிகை சினேகா வேதனை!

2014-ல் உன் சமையலறையில் படத்தில் நடித்தார் சினேகா. அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள வேலைக்காரன் படத்தில் மீண்டும் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு இது சந்தோஷமான அனுபவமாக அமையவில்லை. ஏன்?

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சினேகா அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஒரு நல்ல கருத்து சொல்கிற படத்தில் நானும் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இதனால்தான் வேலைக்காரன் படத்தில் நடிக்கச் சம்மதித்தேன். 

மகன் விஹான் பிறந்தபிறகு அவனுக்குச் சரியாக இருக்கும் படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். அவனுக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் நான் கவனமாக இருப்பேன். அவனுக்கு உணவுப்பொருள் வாங்குவதற்கு முன்பு நூறு முறையாவது யோசிப்பேன். அவனுக்கு பாக்கெட் பால் கொடுப்பதற்குப் பதிலாக மாற்று உணவைக் கூட கண்டுபிடித்துவிட்டேன். இதனால்தான் வேலைக்காரன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். 

இந்தக் கதாபாத்திரத்துக்காக நான் எடை இழக்கவேண்டியிருந்தது. இதனால் டயட், உடற்பயிற்சிகள் மூலமாக 7 கிலோ குறைத்தேன். பிரசவத்துக்குப் பிறகு எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதல்ல. இவ்வளவு செய்தபிறகும் என் கதாபாத்திரத்துக்குக் குறைவான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது அதிருப்தியளிக்கிறது. என் கதாபாத்திரத்துக்கு 18 நாள்கள் படப்பிடிப்பு நடந்தது. எனவே நான் 15 நிமிடங்களாவது வருவேன் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் ஐந்து நிமிடங்களே திரையில் வந்துள்ளேன். எடையைக் குறைத்ததற்கும் படத்தில் சரியான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. படத்துக்காக நான் சிந்திய வியர்வைக்குச் சரியான மதிப்பு கிடைக்கவில்லை. எனக்கு வருத்தமாக உள்ளது.

படப்பிடிப்பு நடைபெற்றபோது இப்படியாகும் எனத் தெரியாது. என்னை வைத்து 3 நாள்கள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளே படத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்காக உழைத்ததில் நான் மிகவும் சோர்வானேன். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. அடிக்கடி உடைகள் மாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டது. சில காட்சிகளில் நான் மட்டுமே இருந்தேன். ஒரு வீட்டுக்குள் நான் அடைப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் ஒரு வாரம் படமாக்கப்பட்டன.

இந்தக் கதாபாத்திரத்துக்கு நான் ஒப்பனை செய்துகொள்ளவில்லை. முகத்தில் தடிப்புகள் உள்ளது போன்ற கதாபாத்திரம் எனக்கு வழங்கப்பட்டது. முதலில் கதை சொன்னபோது என் முகம் தடிப்புடன் இருக்கும் எனச் சொல்லவில்லை. அது படப்பிடிப்பில் முடிவு செய்யப்பட்டது. படத்தில் நல்ல கருத்துகள் இருந்ததால் அதற்கு ஒப்புக்கொண்டேன். ஒப்பனை இல்லாதது பற்றி கவலையில்லை. நான் நடித்த எல்லாப் படங்களிலும் குறைவான ஒப்பனைகளுடன்தான் நான் நடித்திருப்பேன். என்னுடைய சிறந்த காட்சிகள் இந்தப் படத்தில் வெளியாகவில்லை. 

இந்தப் படத்தின் ஆன்மா என் கதாபாத்திரம்தான் என்று சொல்லப்பட்டது. ஆனால் எதுமாதிரியான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து தவிர்த்தேனோ அதுபோன்ற ஒரு கதாபாத்திரம்தான் வேலைக்காரன் படத்தில் அமைந்துள்ளது. இதுபோன்ற கதாபாத்திரம்தான் தெலுங்கு சினிமா உள்பட எல்லா சமயங்களிலும் வருகிறது. எல்லோரும் செய்யக்கூடிய கதாபாத்திரத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. சினேகா செய்தால் நன்றாக இருக்கும் என இயக்குநர் நினைக்கவேண்டும். மீண்டும் திரையுலகில் நடிக்க வரும் எந்த நடிகையில் முகத்தில் தடிப்பு உள்ள கதாபாத்திரத்தில் நடிக்கச் சம்மதிக்கமாட்டார். நீங்கள் நிறைய செய்து, அதற்குரிய மதிப்பு கிடைக்காதபோது அது மனத்தை மிகவும் பாதிக்கிறது என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில், சினேகா நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் டிசம்பர் 22 அன்று வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com