விஜய்யின் முதல் படத்தைப் புறக்கணித்திருந்தால் இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியுமா?: அபிராமி ராமநாதன் கேள்வி!

இன்றைக்கு விஜய் பெரிய கதாநாயகனாக இருந்தாலும் அவர் முதல்முதலாக நடித்தபோது அது சிறிய படம்தான்...
விஜய்யின் முதல் படத்தைப் புறக்கணித்திருந்தால் இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியுமா?: அபிராமி ராமநாதன் கேள்வி!

நயன்தாரா படத்துக்கு அதிகமான கூட்டம் வருவதற்கான காரணத்தை தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான அபிராமி ராமநாதன் விளக்கியுள்ளார். 

எம்ஆர்கேவிஎஸ் சினி மீடியா சார்பாக ஆர். முத்துகிருஷ்ணன், வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் -  ‘ஆறாம் திணை’. அருண்.சி இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக நடித்திருப்பவர் மொட்ட ராஜேந்திரன்.  

ராஜ் கே .சோழன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர்கள் கே. பாக்யராஜ், பேரரசு, திரையரங்குகள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, கவிஞர் சிநேகன், மறைந்த அப்துல் கலாம் அவர்களின் உதவியாளரான பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இசைத்தகட்டை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட அபிராமி ராமநாதன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் பேசியதாவது: 

பேய் இருக்கா இல்லையான்னு கேட்டா இருக்குன்னுதான் சொல்வேன்.. அமானுஷ்யம்னா அது பேயா, இல்ல முனியா ஏதோ ஒண்ணு இருக்குங்க. மனிதனால் எது ஒன்றை பார்க்க முடியாதோ அதை பார்க்கத்தான் ஆசைப்படுவான். இல்லையென்றால் நயன்தாரா படத்துக்கு எதுக்கு இவ்வளவு கூட்டம் வருகிறது! 

அப்துல் கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் பேசும்போது தியேட்டர்காரர்கள் கொளையடிக்கிறார்கள், அதனால் சின்ன படங்கள் சாகிறது எனக் குற்றம் சாட்டினார். கடந்த வருடத்தில் நான் ஐம்பது படங்கள் விநியோகம் செய்தேன். அதில் 45 படங்கள் சிறிய படங்கள்தான். இன்றைக்கு விஜய் பெரிய கதாநாயகனாக இருந்தாலும் அவர் முதல்முதலாக நடித்தபோது அது சிறிய படம்தான். எங்களைப் போன்ற திரையரங்கு உரிமையாளர்கள் சிறிய படம் என விஜய்யின் முதல் படத்தைப் புறக்கணித்திருந்தால் அவர் இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியுமா? 

திரையரங்குகளில் சிறிய படங்களுக்கு 15 பேர் கூட வருவதில்லை. இதுனால் எங்களுக்கு ஏசி போடுகிற காசு கூட கிடைக்காது. எனில் அந்தப் படத்தை நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்ல.. இதோ இப்போது அருவி என்கிற சிறிய படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதற்கு முதல்நாளில் இருந்து நல்ல கூட்டம்.. அந்தப் படத்துக்கு மட்டும் கூட்டம் எப்படி வந்தது? மக்களுக்கு மட்டும் எப்படியோ அது தெரியுது. அந்த வித்தை மட்டும் எங்களுக்கு தெரிந்திருந்தால் அத்தனை சிறிய படங்களையும் ஓட வைத்திருப்போம். அந்த வெற்றி வழிமுறையைக் கண்டுபிடியுங்கள். 

முதல்ல திருட்டு விசிடி பிரச்னை இருந்தது. இப்போது படம் வெளியாகி ரிலீஸாகி 15 நாள்களில் அமேஸானில் படம் வருகிறது. இது அதிகாரபூர்வமாக வெளிவருகிறது என்றாலும் குறைந்தது ஒரு மாதத்திற்காவது படங்களை அமேஸானில் கொடுக்காமல் இருங்கள். திரையரங்குகளால்தான் வசூலை மொத்தமாக அள்ளிக்கொடுக்க முடியும். அமேஸானால் அப்படி அள்ளிக்கொடுக்க முடியாது. திரையரங்குகள் பொன் முட்டையிடும் வாத்து. அதை நீங்கள் அழித்து விடாதீர்கள் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com