தயாராகிறது மற்றுமொரு வீரப்பன் திரைப்படம்... செத்தும் ஓயாத ‘வீரப்ப வேட்டை’!

வீரப்பன் உயிருடன் இருக்கையிலேயே, தமிழில் இயக்குனர் ஆர்.செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தின் மைய இழை வீரப்பன் கதையாகத் தான் இருந்தது.
தயாராகிறது மற்றுமொரு வீரப்பன் திரைப்படம்... செத்தும் ஓயாத ‘வீரப்ப வேட்டை’!

சந்தனக் கடத்தல் வீரப்பன் இறந்திருக்கலாம். ஆனால் அவரைப் பற்றிய செவி வழிக் கதைகளுக்கும், திரைப்படங்களுக்கும் மட்டும் என்றுமே பஞ்சமிருந்ததில்லை. வீரப்பன் உயிருடன் இருக்கையிலேயே, தமிழில் இயக்குனர் ஆர்.செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தின் மைய இழை வீரப்பன் கதையாகத் தான் இருந்தது. அரசியல் மற்றும் அதிகார சக்திகளின் துணையுடன் சத்யமங்கல வனப்பகுதிகளில் வீரப்பன் எவ்விதம் யானைத்தந்த வேட்டைகளிலும், சந்தனமரக் கடத்தலிலும் ஈடுபட்டார் என்பதை முதன்முதலின் தமிழ் ரசிகர்களுக்கு காட்சி மொழியாக எடுத்துச் சென்றார் செல்வமணி.

அதன் பிறகு தனியார் புலனாய்வு இதழ் ஒன்று நேரடியாக சத்யமங்கலக் காட்டுக்குள் புகுந்து வீரப்பனைப் பேட்டி கண்டதும் அதை அப்போது சூரியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியதும் தமிழகம் அறிந்த செய்தி. நடுவில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை அவரது விருந்தினர் மாளிகை இல்லத்தில் இருந்து கடத்திச் சென்று காட்டுக்குள் பிணைக்கைதியாக வீரப்பன் வைத்திருந்ததெல்லாம் அன்றைய பரபரப்புச் செய்திகள். இதெல்லாம் நடந்து முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு பலகட்டப் போராட்டத்துக்குப் பின், தர்மபுரி மாவட்டம் பாப்பிரட்டிப்பட்டி என்ற இடத்தில், கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி, வீரப்பன் மற்றும் அவரது நெருங்கியக் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா மற்றும் சேதுமணி ஆகியோர், அதிரடிப்படையால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். 20 ஆண்டு காலமாகத் தமிழக, கர்நாடக, கேரள வனப்பகுதிகளை ஆட்சி செய்த வீரப்பன் என்கிற காட்டுராஜாவின் கதை அதோடு முடிவுற்றது.

வீரப்பன் கொல்லப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அப்போது அதிரடிப்படைத் தலைவராக இருந்த டிஜிபி விஜயகுமார். தற்போது ஓய்வு பெற்றுவிட்ட விஜயகுமார் ‛Chasing the Brigand’ என்ற பெயரில் வீரப்பனை பிடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆயிரம் பக்கங்கள் கொண்ட  ஆங்கில நூலை எழுதியுள்ளார். அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு வீரப்பனை மையமாக வைத்து மேலுமொரு திரைப்படம் மும்மொழித் திரைப்படமாக தயாராகவிருக்கிறதாம்.

முன்னதாக 2016 ஆம் ஆண்டில் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில், சிவராஜ்குமார் நடிப்பில் ‘கில்லிங் வீரப்பன்’ என்றொரு கன்னடத் திரைப்படம் வெளிவந்து அங்கே மாபெரும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டுமொரு முறை வீரப்பன் கதை திரைப்படமாகவிருப்பது புதிய செய்தி.

வீரப்பன் இறந்து விட்டாலும், அவரது வனவன்முறைச் சாகஷங்களை அறிந்து கொள்ளவும் தமிழக அதிரடிப்படையினர் நடத்திய வீரப்ப வேட்டை பிரதாபக் கதைகளைக் கேட்கவும், பார்க்கவும் மக்களிடத்தில் இன்னும் ஆர்வமிருக்கத்தான் செய்கிறது என்பதையே உணர்த்துகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழித் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்புதிய திரைப்படத்தை E- 4 என்டர்டெயின்மென்ட் பேனர் தயாரிக்கவிருக்கிறது. கதை முன்னாள் டிஜிபி கே.விஜயகுமார் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ள ‛Chasing the Brigand’ புத்தகத்தைத் தழுவியது என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com