ஒவ்வொரு மேடையும் முதல் மேடைதான்!

செவிக்கு மட்டும் உணவாக இல்லாமல், மனதிற்கும் இதத்தைத் தருவது எது என்றால்
ஒவ்வொரு மேடையும் முதல் மேடைதான்!

செவிக்கு மட்டும் உணவாக இல்லாமல், மனதிற்கும் இதத்தைத் தருவது எது என்றால், இனிமையான இசைதான். யாருக்குத்தான் இசை மழையில் நனையப் பிடிக்காது.

அதுவும் ஒரே குரலில் இசைக்காமல் (அதாவது தனக்கான சொந்தக் குரல் அல்லாமல்) மனோரமா ஆச்சி, கே.பி.சுந்தராம்பாள், பெங்களூர் ரமணி அம்மாள், எஸ்.ஜானகி என்று எட்டு கட்டை ஸ்ருதி முதல், குழந்தைகள் பாடும் குரல் வரை, சுமார் இருபத்தி ஐந்து சாயலில் தன் குரலை மாற்றிப் பாடும் திறமை கொண்ட ‘கவிதா கோபி’, தினமணி டாட் காம் இணையதளத்திற்காக நம்மோடு சிறிது நேரம் உரையாடினார்.

‘இதயம்’ நல்லெண்ணெய் அறிமுகமான போது, அதற்கு முதன் முதல் பிராண்ட் அம்பாஸிடராக இருந்தவர் கவிதா கோபி.

‘தாரை தப்பட்டை’ படத்தில் வரும், ‘வதனா வதனா’ பாடல் மூலம் உலகில் உள்ள பல நாடுகளில் பலராலும் பாடப்படும் இந்தப் பாடலுக்கான குரலின் சொந்தக்காரி. இளையராஜாவின் அபார இசைக்கு, தன் குரலின் மூலம் மேலும் மெருகேற்றியவர்.

இனி அவருடைய அனுபவங்களைப் பார்க்கலாம்…

என்னுடைய பால்ய வயதில் என் பெற்றோரின் குடும்ப நண்பர் வீட்டு கல்யாணம் அன்று நான் மேடையேறி பாட்டுப் பாடினேன். அதுதான் என்னுடைய முதல் மேடை அரங்கேற்றம். என் பெற்றோருக்கே பெரிய ஆச்சரியம். இப்படித்தான் என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது.

பிறகு ‘ஜிங்கிள்ஸ்’ எனத் தொடங்கி, 2000 வருடத்திலிருந்து, ரெக்கார்டிங்கில் நுழைந்து விட்டேன். முதல் நான் பாடியது இசையமைப்பாளர் சபேஷ் முரளியின் படத்திற்குத் தான்.

படங்களிலும் சின்ன சின்ன ரோல்களில் செய்திருக்கிறேன் என்றாலும், எனக்கு இனிமையான இசைப் பயணம்தான் மனதிற்குப் பிடித்திருக்கிறது. கடவுள் என்கிற சூத்திரதாரி நான் எப்படி பரிமளிக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அந்தப் பாதையை எனக்கு காட்டியிருக்கிறார்.

என்னை ரசிகர்களுக்கு மத்தியில் அடையாளம் காட்டி, எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்த படம் என்றால், ‘தாரை, தப்பட்டை’ படம் தான். அதே போல் விளம்பரத்திலும் எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. ‘தி சென்னை சில்க்ஸ்’ இன் ஆடி ஸ்பெஷல்தான். சுமார் இரண்டு லட்சம் மக்களுக்கு மேல் அதை யூட்யூபில் கண்டு களித்திருக்கிறார்கள்.

’தாரை தப்பட்டை’க்குப் பிறகு சுமார் இருபத்து ஐந்து படங்களுக்கு பாடி இருக்கிறேன். என்னுடைய காட்ஃபாதர் என்றே சொல்லக் கூடிய, இசையமைப்பாளரான பால் ஜேக்கப் என்பவர், என்னை ‘இண்டஸ் பான்டிட்’ குழுவிற்கு அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் இன்டர்நேஷனல் டீமுடன் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டானது. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாத்தியத்தை வாசிப்பர்களாக இருந்ததால், சங்கீதத்தைப் பற்றிய சிந்தனையையும், அறிவையும் மேலும் நன்கு வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

நான் பல நாடுகளுக்குச் சென்று, பல மேடைகளில் பாடி வருகிறேன். இருந்தாலும், ஒவ்வொரு முறை மேடை ஏறும் போதும், எனக்கு முதல் அனுபவம் போலவே ஒரு டென்ஷன் இருக்கும். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் உதைப்பு வெளியில் தெரியாமல் ஜமாய்த்து விடுவேன்.

எல்லோருமே கூறும் விஷயம் என்னவென்றால், எனக்கு யூனிக்காக குரல் இருப்பது என்பதைத்தான். ஆனால் அதற்காக எந்தவித குரல் பயிற்சியோ, ஆகார நியதிகளோ வைத்துக் கொள்வதில்லை. தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப உணவுப் பழக்கத்தை சரிகட்டிக் கொள்வேன். போகும் இடங்களில் எதை எதிர்பார்க்க முடியும்? இயற்கையோடு ஒத்துப் போவதுதான் என்னுடைய பழக்கம்.

மனதில் சஞ்சலமோ, டென்ஷனோ இருந்தால் மெளன விரதம் இருப்பது தான் மிகவும் நல்லது. நான் அந்த முறையைத் தான் கையாண்டு வருகிறேன். உலக சாதனை செய்த போது, நாற்பத்தி எட்டு மணி நேரங்கள் தொடர்ந்து பாட வேண்டும் என்பது மேற்கொண்ட எண்ணமாக இருந்தது. இரண்டு நாட்கள் கண்ணோடு கண் கொட்டவில்லை. உறக்கம் மறந்துவிட்டது. என்னால் எப்படி கட்டுப்பாட்டுடன் இருக்க முடிந்தது என்றால் கம்பிளீட் சைலன்ஸ், அதாவது நிகழ்ச்சிக்கு முன்பு மெளன விரதத்தைக் கடைபிடித்து மனதை ஒருநிலைப்படுத்தப் பழகிக் கொண்டதுதான் எனக்கு கை கொடுத்தது. ஈஸியாக, ஃப்ரீயாக, பாட முடிந்தது.

ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற வேண்டும். திருக்குறளை இசை வடிவில் தாஜ் நூர் அவர்கள் கொண்டு வருகிறார். பாலகிருஷ்ணன் அவர்கள் எல்லோரும் புரிந்து கொள்ளும்படியாக எளிய நடையில் லிரிக்ஸ் கொடுத்திருக்கிறார். மதன் கார்க்கி இந்த நாட்டு குறள் வடிவத்தை மெற்கொண்டுஇருக்கிறார். இதையொட்டி இன்னும் நிறைய செய்ய இருக்கிறார்கள். வெளிவர இருக்கிறது.

திருக்குறளில் பிரிவாற்றாமை அதிகாரத்தில் வரும் 1157வது திருக்குறளை நான் பாடியிருக்கிறேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். (நம்மிடம் பாடியும் காட்டினார்) எளிய நடை, புரியும்படியாக, ரசித்து அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.

எத்தனையோ நாடுகள், பல மேடைகள் என்று நான் இசைத்திருக்கிறேன். எங்கு சென்றாலும், வீட்டுக்கு வந்து அம்மாவின் கைமணத்தோடு ருசித்து சாப்பிடுவது பிடிக்கும்.

சிலர் சாமி என்றால், தண்டிப்பவர் என்கிற பய உணர்வோடு பகவானை வேண்டிக் கொள்வார்கள். நான் அப்படியில்லை. ஒரு ஃபிரண்ட் மாதிரிதான் நினைத்துக் கொள்கிறேன். எதற்காக நாம் பயப்படவேண்டும்? அனதில் உள்ளதைக் கொட்டி தீர்த்துவிட அவரைவிட நெருங்கிய தோழமையோடு யார் இருக்க முடியும்?

எனக்கு தெரிந்ததெல்லாம். Be happy, be bold, enjoy life. இதுதான் மனதை லேசாக வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் சந்தோஷம்.

ரெக்கார்டிங்கிற்கு கிளம்பும் நேரத்திலும் தினமணிக்காக நேரம் ஒதுக்கிய கவிதா கோபி மேன்மேலும் உயர வாழ்த்தினோம்.

பேட்டி – மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com