கேரள நடிகை துன்புறுத்தல்: கோவையில் 2 பேர் கைது

கேரள நடிகையை காருடன் கடத்திச் சென்று துன்புறுத்தியது தொடர்பாக கோவையில் 2 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

கேரள நடிகை காருடன் கடத்திச் சென்று துன்புறுத்தியது தொடர்பாக கோவையில் 2 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் பிரபல கேரள நடிகை தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரது கார் எர்ணாகுளத்தை அடுத்த அங்கமாலி அருகே வந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்மக் கும்பல் அந்த நடிகையின் காரை வழிமறித்தது. வேனில் இருந்த மர்ம நபர்கள், கார் ஓட்டுநரைத் தாக்கி நடிகையை காருடன் கடத்திச் சென்றனர்.

அப்போது நடிகையை துன்புறுத்தி, அந்த காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் அவர்கள் பதிவு செய்தனர். பிறகு, காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறி அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.

இதையடுத்து, காக்கநாடு பகுதியில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று அந்த நடிகை உதவி கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், நடிகை துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கோவையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் கேரள தனிப்படை ஐ.ஜி. தினேஷ் காஷ்யப் உத்தரவின் பேரில், எர்ணாகுளம் ரூரல் எஸ்.பி. சி.விக்ரம் தலைமையிலான காவல் துறையினர் கோவை வந்தனர். பின்னர், கோவையில் பதுங்கி இருந்த இருவரைக் கைது செய்தனர். அவர்கள், ஆலப்புழையைச் சேர்ந்த சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் என்று கூறப்படுகிறது.

மேலும் 7 பேரிடம் விசாரணை: இதனிடையே, நடிகை துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கார் ஓட்டுநர் மார்ட்டின் உள்பட 7 பேரிடம் கேரள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கேரள காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, சிலரைப் பிடித்து விசாரித்து வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகே அவர்களுக்கு இந்தச் சம்பவத்தில் இருக்கும் தொடர்பு குறித்து தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில், மலையாள நடிகர்-நடிகையர்களிடம் முன்பு கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த பல்சர் சுனி என்பவர் உள்பட மேலும் 6 பேருக்குத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதைத் தொடர்ந்து, அவர்களைப் பிடிப்பதற்கு கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு போலீஸார் விரைந்துள்ளனர்.

நடிகையின் வாக்குமூலம் பதிவு: இதனிடையே, நடிகையின் வாக்குமூலத்தை பெண் நீதிபதி ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தார். கொச்சி அருகே உள்ள மருத்துவமனைக்கு பாவனா அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அரசியல் கட்சிகள், மலையாளத் திரையுலகினர் கண்டனம்: இந்நிலையில், நடிகை கடத்திச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவத்துக்கு கேரள அரசியல் கட்சித் தலைவர்களும், மலையாள நடிகர்கள் மோகன்லால், சுரேஷ் கோபி, பிருத்விராஜ் உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com