பைரவா படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்களின் வரிகள்!

இப்படத்தில் கவிஞர் வைரமுத்து 4 பாடல்களை எழுதியுள்ளார். அதன் பாடல் வரிகளை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பைரவா படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்களின் வரிகள்!

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் - பைரவா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தயாரிப்புகளில் தனித்துவம் பெற்ற விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிட உள்ளது. 

பொங்கல் பண்டிகை வெளியீடாக திரைக்கு வரும் விஜய்யின் பைரவா படத்துக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

இப்படத்தில் கவிஞர் வைரமுத்து 4 பாடல்களை எழுதியுள்ளார். அதன் பாடல் வரிகளை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பைரவா - பாடல் 1

பட்டையக் கெளப்பு
குட்டையக் குழப்பு
பட்டையக் கெளப்பு
பட்டி தொட்டி எல்லாம்
பட்டையக் கெளப்பு

குரவ மீனப் புடிக்கக்
குட்டையக் குழப்பு

கட்டுக் கட்டா – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டுப் போட்டுக் கெடக்கு

பறவைக் கெல்லாம்
ஒரு வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?

**
காசை எடு
காத்தும் திசையை மாத்தும்
காசை எடு

ஓ... கடலில் ரயிலும் போகும்
காசை எடு

இமயம் 
கொஞ்சம் குனியும்
காசை எடு

பூட்டி வச்சு என்ன பண்ணப் போற? ... ஓ
அள்ளிக் கொடு – இல்ல
ஆட்டம் போடு

சிங்கம் எல்லாம்
சேமிக்காது
ஜில்லென்று கொண்டாடு

கட்டு கட்டாச் – சேத்த
நோட்டுக் கட்டு – பெரும்
பூட்டு போட்டுக் கெடக்கு

பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?
**
வாழணுமே
ஏழை பாளை நம்மை
வாழ்த்தணுமே

எதிரி வந்தால் 
மோதிப் பாக்கணுமே

ஏய்க்கும் கூட்டம் என்றால்
சாய்க்கணுமே

நீதி கேட்டு – தம்பி
நீயே நில்லு 

தப்பாதப்பா
விஜயன் வில்லு

ரெண்டாயிரம் – ஆண்டா
வாழப்போற? – சும்மா
பூட்டிவச்சு எதுக்கு?

பறவைக் கெல்லாம் – ஒரு
வங்கி இல்ல – அது
பட்டினியா கெடக்கு?

பைரவா - பாடல் 2

மஞ்சள் மேகம் – ஒரு
மஞ்சள் மேகம் – சிறு
பெண்ணாகி முன்னே போகும்

பதறும் உடலும் – என்
கதறும் உயிரும் – அவள்
பேர்கேட்டுப் பின்னே போகும்

செல்லப் பூவே – நான்
உன்னைக் கண்டேன்
சில்லுச் சில்லாய் – உயிர்
சிதறக் கண்டேன்

நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே 
என்பேர் என்ன

*

கனவா கனவா – நான்
காண்பது கனவா – என்
கண்முன்னே கடவுள் துகளா

காற்றின் உடலா – கம்பன்
கவிதை மடலா – இவள்
தென்னாட்டின் நான்காம் கடலா

சிலிக்கான் சிலையோ
சிறுவாய் மலரோ
வெள்ளை நதியோ
வெளியூர் நிலவோ

நில்லாயோ நில்லாயோ
உன்பேர் என்ன
உன்னாலே மறந்தேனே
என்பேர் என்ன

*

செம்பொன் சிலையோ – இவள்
ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ – இவள்
பெண்பால் வெயிலோ

நான் உன்னைப் போன்ற
பெண்ணைக் கண்டதில்லை
என் உயிரில் பாதி
யாரும் கொன்றதில்லை

முன்னழகால் முட்டி
மோட்சம் கொடு – இல்லை
பின் முடியால்
என்னைத் தூக்கிலிடு

பைரவா - பாடல் 3 : விஜய் – கீர்த்திசுரேஷ் பாடும் இருகுரல் காதல் பாடல்

பூ பூ 
புன்னகையில் நீ 
புரோட்டீன் தருவாய்

வா வா
வார்த்தைகளால் நீ 
வைட்டமின் தருவாய்

நீயோ 
சாதனைச் செல்வன் – பெண்ணின்
கண்களின் கள்வன் – நீ
காதலின் கொம்பன் – ஆனால்
கடவுளின் நண்பன் – உந்தன்
வேகமே கண்டேன் – நீயோ
மின்னலின் பிள்ளை – அட
மின்னலை வெட்ட – ஒரு
வெட்டுக் கத்தி இல்லையே

அழகிய சூடான பூவே – என் 
சொந்தமான தீவே
உன்னைப் பார்த்த போதே – என்
உயரம் கூடிப் போனேன்

இதுவரை காணாத பெண்ணே – இலக்கியக்
கவிதை காட்டும் கண்ணே – உனை
தோள்மீது ஏற்றி - புது
கோள்கொண்டு சேர்ப்பேன்
*
தொடத் தூண்டுதே தூண்டுதே – நிலா
உனைத் தீண்டினால் ஏனடி தடா

என் நெஞ்சிலே முட்டுதே கிடா
என் அச்சமும் நாணமும் விடா

வெள்ளைப் பொன் மேனியை
கொள்ளை கொள்ளப் போகிறேன்
மெல்லப் போய் தீண்டினால் – நானே
கொள்ளை போகிறேன்

முன்னே நீ வந்ததும்
முதுகுத் தண்டில் மழையடா
இன்பத் தலைவா இடைதொட
இடைவெளி ஏன் – உன் அணைப்பினில்
நரம்புகள் நொறுங்கட்டும்
*

எனை மத்தளம் மத்தளம் அடி 
இதழ் புத்தகம் புத்தகம் படி

விழும் முத்தமோ முத்தமோ இடி
அதை மொத்தமாய்த் தாங்குமோ கொடி

நாட்டுக்குள் வன்முறை வேண்டாம்
என்பது உண்மையே
கட்டில்மேல் வன்முறை வேண்டும்
என்பது பெண்மையே

இன்பம் போல் ஒரு துன்பமா
துன்பம் போல் ஒரு இன்பமா

ஏழேழ் பிறவியின் சுகங்களை 
இன்றே வழங்கிடு
உயிரைத் தட்டித் தட்டித் திறந்திடு


பைரவா-4: உச்சகட்டத்தில் எதிரியோடு மோதுவதற்கு முன்னால் ஊர்கூடிப் பாடும் பாட்டு

பாப்பா பாப்பா
பப்பரப் பப்பா – சும்மா
வாப்பா வாப்பா
வந்தாடப்பா – நான்
ஒன் ஆளப்பா

டாப்பா டாப்பா
டான்ஸாடப்பா – இன்னும்
டீப்பா டீப்பா
லவ் பண்ணப்பா – நீ
என் ஆளப்பா

அன்பு கொடுத்தா – சொந்த
ஆவி கொடுப்பேன் – சும்மா
வம்பு வளத்தா – அட
ஆவி எடுப்பேண்டா
கத்தி எடுத்து – புத்தி
தீட்டி முடிப்பேன் – பகை
கொத்தி முடிப்பேன்

எங்காளப்பா – நீ
எங்காளப்பா – இங்க
எல்லாருமே – இனி
ஒங்காளப்பா

கெட்டவன
வெட்டிச் சாய்க்கவந்த – புதுக்
கட்ட பொம்மன் நீயா
*
நரிக நாட்டாமை
நடத்தும் உள்ளூரில்
புயல்போல் வந்தாயே புலியே புலியே

அறிவு ஒருகையில்
அருவா மறுகையில்
அதுதான் என்பாணி கிளியே கிளியே

ஊருக்குப் பத்துப்பேர்
ஒம்போல வந்தாலே
யாருக்கும் தீங்கில்ல
வெற்றிச் செல்வா வா வா

பொது எதிரி யாருங்க
போராடிப் பாருங்க
வேரோட வீழ்த்துங்க
உறுதி எடுங்க உருமி அடிங்க    
*
கிழக்கே இல்லாம
திசைகள் மூணாச்சு
எமக்கு நீதானே கிழக்கு கிழக்கு

வெளிச்சம் வருமட்டும்
கிழக்கும் கறுப்புத்தான்
இருட்டத் தீ வச்சுக் கொளுத்து கொளுத்து

ஒரு வார்த்த சொன்னாலே
ஊரே ஒம் பின்னாலே
நீவாய்யா முன்னாலே
யுத்தம் செய்ய வா வா

யுத்தங்கள் இல்லாம
இதிகாசம் நிக்காது
ரத்தங்கள் சிந்தாம
உலகத் தீமை ஒழிவதேது?

பைரவா பாடல்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com