அலங்காநல்லூர் போராட்டம்: மலையாளப் பெண்ணும் நடிகையுமான அஞ்சனா கீர்த்தி தீவிர ஆதரவு!

பாரம்பரியமிக்க நமது கலாசாரத்தைக் காப்பாற்றுவோம். இந்தக் கலாசாரம் குறித்து நான் பெருமை கொள்கிறேன்...
அலங்காநல்லூர் போராட்டம்: மலையாளப் பெண்ணும் நடிகையுமான அஞ்சனா கீர்த்தி தீவிர ஆதரவு!

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வாடிவாசல் முன்பாக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று காலை 7 மணிமுதல் தொடங்கிய போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் நீடித்தது.

சென்னை 28-2 படத்தில் வடஇந்தியப் பெண்ணாக நடித்த அஞ்சனா கீர்த்தியின் தாய்மொழி மலையாளம். சென்னையில் வசித்துவரும் அஞ்சனா, சமூவலைத்தளம் மூலமாக ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருகிறார்.

நேற்று இரவு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மக்கள் போராட்டம் நடத்தியபோதும் ட்விட்டர் வழியாகத் தொடர்ந்து போராட்டத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துவந்தார். நியாயம் கிடைக்கும் வரை காத்திருப்போம் என்று அமைதியுடன் நடைபெற்ற அலங்காநல்லூர் போராட்டத்துக்கு ஆதரவான ட்வீட்களை வெளியிட்டுவந்தார்.

நான் மலையாளத்தை விடவும் தமிழில்தான் நன்றாகப் பேசுவேன். பாரம்பரியமிக்க நமது கலாசாரத்தைக் காப்பாற்றுவோம். இந்தக் கலாசாரம் குறித்து நான் பெருமை கொள்கிறேன் என்றும் ஃபேஸ்புக்கில் பதிவு எழுதியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ட்வீட்களை ரீட்வீட் செய்தும் தீவிர ஆதரவு தெரிவித்துவருகிறார். 

தமிழ்ப் பெண்ணாக இல்லாமல் போனாலும் தமிழ் உணர்வுடன் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்களைப் பற்றி சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து எழுதிவரும் அஞ்சனாவுக்கு ட்விட்டரில் ஆதரவு பெருகிவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com