நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்: நடிகை நயன்தாரா உணர்வுபூர்வமான அறிக்கை!

நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம்: நடிகை நயன்தாரா உணர்வுபூர்வமான அறிக்கை!

தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எனக்கு அங்கீகாரமும் அடையாளமும் தந்தது தமிழ் மக்கள்தான்...

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றம் மூலம் தடை பெற்றுள்ளது. இந்த தடையை மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்களும், சமூக நல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஜல்லிக்கட்டுக்குரிய தடையை நீக்கக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ் நடிகைகள் சிலரே ஆதரவு தெரிவித்திருந்தார்கள். முக்கியமாக பிரபல நடிகைகள் பலரும் இதுகுறித்த கருத்தை வெளிப்படுத்தாமலேயே இருந்த நிலையில், பிரபல நடிகை சமந்தா முதல்முறையாக ஜல்லிக்கட்டு ஆதரவாகப் பதிவுகளை வெளியிட்டார். தற்போது மற்றொரு பிரபல நடிகை நயன்தாராவும் ஜல்லிக்கட்டு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கடந்த சிலநாள்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இந்தத் தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும் உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவள் என்னும் பெருமை என்னைத் தலைநிமிர வைக்கிறது. 

தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எனக்கு அங்கீகாரமும் அடையாளமும் தந்தது தமிழ் மக்கள்தான். இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தில் அவர்களோடு நான் உறுதுணையாக இருப்பேன். அவர்களுடன் என்னுடைய குரலும் இணைந்து நம் கலாசாரத்துக்கு எதிரான அந்த அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு நம் பலத்தைக் காட்டும் என எண்ணுகிறேன்.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் இந்த உணர்ச்சிகரமான நடவடிக்கை நிச்சயமாகத் தமிழ்க் கலாசாரத்தின் பெருமையை உலகெங்கும் ஒலிக்கச் செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர்களின் இந்த முயற்சி தமிழ்நாட்டின் கலாசார அடையாளமான ஜல்லிக்கட்டை எந்தவித காலதாமதமும் இன்றி மீண்டும் தமிழகத்தில் நிலைநிறுத்தும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது நாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com