நாங்கள் பீட்டாவில் உறுப்பினர்களாக இல்லை: தனுஷ், ஐஸ்வர்யா, செளந்தர்யா அறிவிப்பு

பீட்டா அமைப்பு என்னைச் சிறப்பித்தது. இப்போது அதைப் பெரும் அவமானமாகக் கருதுகிறேன்.
நாங்கள் பீட்டாவில் உறுப்பினர்களாக இல்லை: தனுஷ், ஐஸ்வர்யா, செளந்தர்யா அறிவிப்பு

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன

இந்நிலையில் ரஜினி குடும்பத்தைச் சேர்ந்த தனுஷ், ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகிய மூவரும் பீட்டா அமைப்பில் உள்ளார்கள். எனவே அவர்கள் உடனே அந்த அமைப்பிலிருந்து விலகவேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் சிலர் கோரிக்கை வைத்தார்கள். இதையடுத்து மூவரும் இதுகுறித்து தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்கள்.

தனுஷ்: பீட்டா அமைப்பு, சைவ உணவு சாப்பிடுகிறவன் என்கிற முறையில் என்னைச் சிறப்பித்தது. இப்போது அதைப் பெரும் அவமானமாகக் கருதுகிறேன். என்னுடைய குடும்பத்தினர் யாரும் பீட்டா அமைப்பில் உறுப்பினர்களாக இல்லை. எங்களைப் பீட்டாவுடன் இணைத்துப் பேசுவது வதந்தியே. எந்தவொரு அரசியல் பின்னணியும் இன்றி தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கண்ணியமான முறையில் போராடுகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்த இளைஞர்களின் மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன். சுதந்தரப் போராட்டத்தை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால், இளைஞர்களின் புரட்சிகரமான இயக்கத்தை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

ஐஸ்வர்யா தனுஷ்: எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பீட்டாவில் உறுப்பினராக இல்லை. இந்த மகத்தான இயக்கத்தில் கலந்துகொண்ட ஒவ்வொரு தமிழரையும் கண்டு எங்கள் குடும்பம் பெருமை கொள்கிறது. அவர்களுக்கு முழு ஆதரவை அளிக்கிறோம். 

செளந்தர்யா: நம் கலாசாரத்தை எங்கள் குடும்பம் மதிக்கிறது. நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். நான் பீட்டாவில் இருப்பதாக எண்ணுபவர்களுக்கு ஒரு விளக்கம் - அது தவறு. நான் பீட்டா உறுப்பினர் அல்ல. நான் ஜல்லிக்கட்டை மனபூர்வமாக ஆதரிக்கிறேன். மாணவர்கள் இயக்கத்துக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com