முகத்தை மூடியபடி இனி கேள்வி கேட்கவேண்டியதில்லை: ஆர்ஜே பாலாஜியின் உணர்ச்சிகரமான பேச்சு (வீடியோ)

இத்தனை நாளாக ஒரு நல்ல தலைவருக்காக ஏங்கிக்கொண்டிருந்தோம்... 
முகத்தை மூடியபடி இனி கேள்வி கேட்கவேண்டியதில்லை: ஆர்ஜே பாலாஜியின் உணர்ச்சிகரமான பேச்சு (வீடியோ)

சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் பிரச்னை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் ஆர்ஜே பாலாஜி உணர்வுபூர்வமாகப் பேசியதாவது:

இந்தியாவில் சுதந்தரத்துக்குப் பிறகு ஒரு பெரிய புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. இப்போது அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு விரைவில் வாடிவாசல் திறக்கும். இதற்கு இளைஞர்களாகிய நீங்கள்தான் காரணம். நம்முடைய எம்.பி.க்கள் அல்ல. 

இங்கு யாருமே தலைவர் கிடையாது. இத்தனை நாளாக ஒரு நல்ல தலைவருக்காக ஏங்கிக்கொண்டிருந்தோம். இதுவரை யாருமே அப்படி வரவில்லை. இப்போது இங்குள்ளவர்களில் யாராவது தேர்தலில் நின்றால் நாங்கள் வாக்களிப்போம். இங்கு நான்கு நாள்களாக உட்காந்திருக்கும் அனைவருமே தலைவர்கள்தான். எத்தனை பேர் வேண்டுமானாலும் தேர்தலில் நில்லுங்கள்.

நிரந்தர தீர்வை நம்மால் சாதிக்கமுடியும். அதற்கு யாரையும் மிரட்டவேண்டியதில்லை. பிச்சையெடுக்கவேண்டியதில்லை. 

அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படத்தை காரின் முன்பு வைத்துக்கொண்டு சிக்னலை மதிக்காமல் செல்வார்கள். இனிமேல் அப்படிப் போனால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்கிற பயம் வரும். இலங்கை பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, மீனவர்கள் பிரச்னை, கல்லூரியில் கொள்ளையடிக்கிறார்கள் எனப் பல பிரச்னைகள் உள்ளன. முன்பு ஒரு பிரச்னை என்றால் முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு கேள்வி கேட்டோம். இனிமேல் தைரியமாகப் போய்க் கேட்போம்.

ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, எந்தப் பிரச்னை என்றாலும் நாம் சாலைக்கு வரவேண்டும். அப்போது சட்டங்கள் மாறும். நமக்காக சட்டங்கள் இயற்றுவார்கள். இனிமேல் எந்த மாநிலத்தில் பிரச்னை என்றாலும் சாலைக்கு வருவார்கள். நம்முடைய போராட்டம் அவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. 

எந்தத் தலைவனும் இல்லாமல் ஒரு போராட்டம் கடந்த 50 வருடங்களில் நடந்ததில்லை. முதலில் முடியாது என்று சொன்னவர்கள் நாம் போராடியவுடன் முடியும் என்கிறார்கள். இவ்வளவு நாள்கள் கேட்காமல் இருந்தோம். இனிமேல் துணிச்சலுடன் கேட்போம்.

படிப்பதற்கு நன்கொடை கேட்டால் சாலைக்கு வருவோம். நம் மீது எப்போதும் பயம் இருக்கவேண்டும் என்கிற ஆர்.ஜே. பாலாஜியின் பேச்சுக்கு இளைஞர்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளார்கள். இதன் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பாலாஜி, என் வாழ்வின் மிகச்சிறந்த நாள் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com