அவசர சட்டத்தின் நகலில் கையெழுத்து இல்லாததால் போராட்டம் தொடர்ந்தது: நடிகர் லாரன்ஸ் விளக்கம்

மாணவர்கள் கையில் போராட்டம் இருந்தவரை நிலைமை அமைதியாக இருந்தது...
அவசர சட்டத்தின் நகலில் கையெழுத்து இல்லாததால் போராட்டம் தொடர்ந்தது: நடிகர் லாரன்ஸ் விளக்கம்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் இன்று காலை வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. 

இந்தச் சூழலில் மெரினாவுக்குச் சென்று மாணவர்களிடையே சமாதானம் ஏற்படுத்த இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷும் நடிகர் லாரன்ஸும் முயற்சி செய்தார்கள். ஆனால் மெரினா கடற்கரையைச் சுற்றி காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் அந்தப் பகுதியின் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு காவல்துறையின் அனுமதி பெற்று, மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்களிடம் லாரன்ஸ் பேசினார். 

செய்தியாளர்களிடம் லாரன்ஸ் கூறியதாவது:

ஆரம்பத்தில் முதலில் ஆயிரம் பேருக்குச் சாப்பாடு கொடுத்தேன். பிறகு அந்தக் கூட்டம் லட்சம் ஆனது. நான் மட்டுமல்ல பலரும் அந்தக் கூட்டத்துக்கு உணவு வழங்கினார்கள். மகத்தான போராட்டம் இது.

நேற்று இரவுவரை மாணவர்கள் கையில் போராட்டம் இருந்தவரை நிலைமை அமைதியாக இருந்தது. மக்களுக்கும் அதுதான் நோக்கம். இதற்கு நிரந்தத் தீர்வு வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமாக இருந்தது. நேற்று இரவு வரை இப்படித்தான் இருந்த்து.

பிறகு போராட்டத்தில் சில அமைப்பினர் சம்பந்தம் இல்லாமல் வேறு விஷயங்களைத் திணித்தார்கள். சம்பந்தம் இல்லாதவர்கள் அது வேண்டும் இது வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்கள். இது மாணவர்கள் செய்யக்கூடிய விஷயம் இல்லை. வேறு சில அமைப்பினர் பிரச்னை செய்தார்கள்.

நேற்று இரவு எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். காலையில் தொலைக்காட்சியில் பார்த்தால் எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். என்னை மெரினா பகுதியில் உள்ளே நுழையவிடல்லை. நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டதாக ஆளுநர் சொன்னதை மாணவர்களிடம் சொல்ல ஆசையாக இருந்தேன். போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் 500
கிலோ கேக்கை ஆர்டர் செய்தார்கள்.  

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நிரந்தரத் தீர்வை அளித்த முதல்வருக்கும் பிரதமருக்கும் நன்றி. யாரையும் புண்படுத்தும்படி விமரிசனம் செய்யாதீர்கள் என்று மாணவர்களிடம் சொன்னோம். தொடர்ந்து அறிவுரை சொல்லிக்கொண்டு இருந்தோம். 

முதலில் எங்களுக்கு கொடுத்த அரசாணையில் ஆளுநரின் கையெழுத்து இல்லை. மாணவர்கள் ஆதாரம் கேட்டார்கள். அவசர சட்டத்தின் நகல் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

நேற்று, ஜல்லிக்கட்டு அமைப்பினர் அளித்த பேட்டியை என்னிடம் தெரிவித்தார்கள். இதைக் காலையில் மாணவர்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன். காலையில் 10 மணிக்கு விளக்கம் சொல்ல இருந்தோம். அதற்கு முன்பு காவல்துறை நடவடிக்கை எடுத்துவிட்டது. எங்களிடம் முன்பே கையெழுத்திட்ட நகலைக் காண்பித்திருந்தால் நாங்கள் போராட்டத்தை முடித்திருப்போம்.

நகலை எங்களிடம் காண்பிக்கும் முன்பு பசங்களை அடித்திருக்கிறார்கள். பெண்களைத் தள்ளியிருக்கிறார்கள். காவல்துறையிடம் கேட்டபோது, காவல் நிலையத்தை எரித்தார்கள் என்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு எல்லாம் காரணம், எங்களிடம் சட்டத்தின் நகல் காண்பிக்காததுதான் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com