வரி கட்டவேண்டுமென்று நீங்கள்தானே சொன்னீர்கள்? கேள்வி கேட்டவரை பிளாக் செய்த ஷங்கர்!

பொதுவாக இதுபோன்று வரும் மறுமொழிகளைத் திரையுலகப் பிரபலங்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்...
வரி கட்டவேண்டுமென்று நீங்கள்தானே சொன்னீர்கள்? கேள்வி கேட்டவரை பிளாக் செய்த ஷங்கர்!

ஜிஎஸ்டி தொடர்பாக வெளியிட்ட ட்வீட்டை முன்வைத்து கேள்வி கேட்டவரை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார் ஷங்கர். 

திரையரங்குகளுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசின் உள்ளாட்சி கேளிக்கை வரியும் திரையரங்குகளுக்கு கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 சதவீத கேளிக்கை வரி திரையரங்குகளுக்கு விதித்துள்ளது.

 மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், தமிழகஅரசின் கேளிக்கை வரிக்கு தமிழ்த் திரை அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் இந்த வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வரிச் சுமை மாநில மொழி படங்களை நலிவடையச் செய்யும் வகையில் உள்ளதாக கூறி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்துச் செய்ய கோரி, திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை 1,200 திரையரங்குகள் மூடப்பட்டன.

 இதுதொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் தமிழ்த் திரை அமைப்புகள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்ட ட்வீட்டில், 48-58% - இந்த வரி மிக அதிகமானது. தமிழ் திரையுலகைக் காப்பாற்றுங்கள் என்று கூறியிருந்தார்.

ட்விட்டர் சமூகவலைத்தளத்தில், அப்துல் முத்தலிப் என்கிறவர், வரி கட்டினா நாடு நல்லாருக்கும்ங்களே எசமான். நீங்கதான சொன்னீங்கள் என்று ஷங்கரின் ட்வீட்டுக்குக் கேள்வி எழுப்பியிருந்தார். 

பொதுவாக இதுபோன்று வரும் மறுமொழிகளைத் திரையுலகப் பிரபலங்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் இயக்குநர் ஷங்கர், அப்துல் முத்தலிப்-பின் ஐடியை பிளாக் செய்துவிட்டார். இதனால் ஷங்கரின் ட்வீட்களை அப்துல் முத்தலிப்பால் இனி பார்க்கமுடியாது. கேள்வியும் கேட்கமுடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com