ஜிஎஸ்டியால் ‘விக்ரம் வேதா’ படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி வெளிவருவதாக இருந்தது...
ஜிஎஸ்டியால் ‘விக்ரம் வேதா’ படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு!

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து நடித்துள்ள படம் விக்ரம் வேதா. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி வெளிவருவதாக இருந்தது. ஆனால் தற்போது இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

திரையரங்குகளுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசின் உள்ளாட்சி கேளிக்கை வரியும் திரையரங்குகளுக்கு கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 சதவீத கேளிக்கை வரி திரையரங்குகளுக்கு விதித்துள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், தமிழகஅரசின் கேளிக்கை வரிக்கு தமிழ்த் திரை அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் இந்த வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வரிச் சுமை மாநில மொழி படங்களை நலிவடையச் செய்யும் வகையில் உள்ளதாக கூறி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்துச் செய்ய கோரி, திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை 1,200 திரையரங்குகள் மூடப்பட்டன. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் தமிழ்த் திரை அமைப்புகள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் படம் வெளிவந்தால் அது படத்தின் வசூலைப் பாதிக்கும் என்பதாலும் திரையரங்குகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவு இல்லாததாலும் விக்ரம் வேதா படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளின் போராட்டம் வாபஸ் ஆனபிறகு, படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும்.

தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதிச் சுற்று போன்ற படங்களைத் தயாரித்த சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com