திரையரங்குகளை மூடினால் குற்றங்கள் அதிகரிக்கும்: டி. ராஜேந்தர்

ஜிஎஸ்டிக்கு எதிராக போராடக்கூடாது எனத் தயாரிப்பாளர்களுக்குத் தொலைப்பேசி மிரட்டல் வருகிறது... 
திரையரங்குகளை மூடினால் குற்றங்கள் அதிகரிக்கும்: டி. ராஜேந்தர்

திரையரங்குகளுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசின் உள்ளாட்சி கேளிக்கை வரியும் திரையரங்குகளுக்கு கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 சதவீத கேளிக்கை வரி திரையரங்குகளுக்கு விதித்துள்ளது.

 மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், தமிழகஅரசின் கேளிக்கை வரிக்கு தமிழ்த் திரை அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் இந்த வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வரிச் சுமை மாநில மொழி படங்களை நலிவடையச் செய்யும் வகையில் உள்ளதாக கூறி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்துச் செய்ய கோரி, திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை 1,200 திரையரங்குகள் மூடப்பட்டன.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் தமிழ்த் திரை அமைப்புகள் திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 

இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர் கூறியதாவது: 

பிரதமர் மோடியால் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூடிக்கிடக்கின்றன. திரையரங்குகளை மூடினால் குற்றங்கள் அதிகரிக்கும். எனவே ஜிஎஸ்டி வரி குறைக்கப்படவேண்டும். திரைப்படங்களுக்கு மட்டும் 28% விதித்தது ஏன்?  மக்களைப் பற்றி மோடி கண்டுகொள்ளவில்லை. ஜிஎஸ்டி வரியால் சிறுவியாபாரிகளும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். மத்திய அரசின் செயலால் திரையுலகம் பாதிப்படைந்துள்ளது.

எங்களின் உணர்வுகளை சொல்லவே திரண்டுள்ளோம். கேளிக்கை வரி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் கேளிக்கை வரியைக் குறைக்கவேண்டும். வேறு வழியின்றியே திரையரங்குகள் போராட்டம் நடத்துகின்றன. ஜிஎஸ்டிக்கு எதிராக போராடக்கூடாது எனத் தயாரிப்பாளர்களுக்குத் தொலைப்பேசி மிரட்டல் வருகிறது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com