திரையரங்குகள் மூடல்: விளம்பர வருவாயை இழந்துள்ள ஊடகங்கள்!

செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் திரைப்பட விளம்பரங்கள் அதிகமாக இடம்பெறும்... 
திரையரங்குகள் மூடல்: விளம்பர வருவாயை இழந்துள்ள ஊடகங்கள்!

கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் நான்காவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்க டிக்கெட்களுக்கு விதிக்கப்பட்ட 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழகத்தில் கடந்த 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்து நடத்தி வருகின்றனர். கேளிக்கை வரியை எதிர்த்து நான்காவது நாளாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ. 60 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

திரையரங்குகளின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே வெளியான படங்களைத் திரையிடுவதிலும், வெளியாகவுள்ள படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படம் தயாரித்து வெளியீட்டுக்குக் காத்திருக்கும் தயாரிப்பாளர்களும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி வரை இழப்பைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக திரைத் துறையினர் தெரிவித்துள்ளார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் இதுபோல நான்கு நாள் திரையரங்குகள் மூடப்பட்டதில்லை.

இந்நிலையில் வழக்கமாகச் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் திரைப்பட விளம்பரங்கள் அதிகமாக இடம்பெறும். அதிலும் முன்னணி செய்தித்தாள்களில் தினமும் திரைப்படங்களின் விளம்பரங்கள் இடம்பெறும். அதேபோல பெரும்பாலான படங்களின் 10 நொடி, 20 நொடி விளம்பரங்கள் தொலைக்காட்சிகள் இடம்பெறும்.

கடந்த நான்கு நாள்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் திரைப்படங்களின் விளம்பரங்கள் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் இடம்பெறுவதில்லை. பிரச்னைக்குத் தீர்வு கிடைத்து திரையரங்குகள் வழக்கம்போல இயங்கினால் மட்டுமே மீண்டும் திரைப்பட விளம்பரங்கள் வழக்கம்போல ஊடகங்களில் வெளியாகும். இதனால் திரையரங்குகள் போல ஊடகங்களும் கேளிக்கை வரி விவகாரத்தால் விளம்பர வருவாயை இழந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com