தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக திரையரங்குகள் மூடல்: இன்றாவது தீர்வு கிடைக்குமா?

தமிழ் சினிமா வரலாற்றில் இதுபோல நான்கு நாள்கள் திரையரங்குகள் மூடப்பட்டதில்லை. தமிழகத்தில் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரையில்...
தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக திரையரங்குகள் மூடல்: இன்றாவது தீர்வு கிடைக்குமா?

கேளிக்கை வரியை எதிர்த்து நான்காவது நாளாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ. 50 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.  

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாள்களாக 1,200 திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரையில் மொத்தம் 1200 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் காலை, பிற்பகல், மாலை, இரவு என 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. வார இறுதி நாள்களில் மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும். கடந்த 3-ம் தேதி முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு காலவரையற்ற போராட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: திரையரங்குகள் மூடப்பட்டதால் கடந்த 3 நாள்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமான இழப்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு திரையரங்கிலும் ஆபரேட்டர்கள், நுழைவுச் சீட்டு கொடுப்போர், துப்புரவுத் தொழிலாளர்கள், உணவுப் பொருள் விற்பனையாளர், வாகன நிறுத்துமிட ஊழியர்கள் என 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே வெளியான படங்களைத் திரையிடுவதிலும், வெளியாகவுள்ள படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படம் தயாரித்து வெளியீட்டுக்குக் காத்திருக்கும் தயாரிப்பாளர்களும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல கோடி வரை இழப்பைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக திரைத் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

இதையடுத்து தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலைமையிலான தமிழ் திரை அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மாநில அமைச்சர்களை இதுதொடர்பாக திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் கூறியது:

கேளிக்கை வரிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் திரையரங்க உரிமையாளர்களின் போராட்டம் குறித்து முதல்வரிடம் பேசினோம். அவர்களிடம் எங்களது கோரிக்கையை வைத்தோம். அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினோம். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்திலும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். எங்களது கோரிக்கையை அவர்கள் கேட்டுள்ளனர். எங்கள் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 4) முதல்வரைச் சந்தித்து பேச உள்ளோம். பேச்சுவார்த்தைக்குப் பின் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

ஆனால் நேற்று வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தமிழ்த் திரையுலகினரால் மீண்டும் சந்தித்துப் பேசமுடியவில்லை. இதனால் இன்று எப்படியும் பேச்சுவார்த்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோரிக்கைகள் நிறைவேறாததால் போராட்டம் இன்றும் தொடர்ந்துள்ளது. திரையரங்குகளில் இன்றும் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று இன்று மாலைக்குள் பிரச்னை முடிந்துவிடும் என்று திரையுலகினர் எதிர்பார்க்கிறார்கள். இதனால் இன்று மாலைக் காட்சிகளைத் தொடங்கத் திரையரங்குகள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

தமிழ் சினிமா வரலாற்றில் இதுபோல நான்கு நாள் திரையரங்குகள் மூடப்பட்டதில்லை. இதனால் தமிழ்த் திரையுலகினரின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்பட்டு நாளையாவது திரைப்படக்காட்சிகள் தொடரவேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com