கருப்புப் பணப் பரிமாற்றத்தை ஒழிக்கமுடியுமா? திரைத்துறைக்குச் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேள்வி!

மக்கள் தலையில் வரியைச் சுமத்திவிட்டு குமுறுவது ஏன்?...
கருப்புப் பணப் பரிமாற்றத்தை ஒழிக்கமுடியுமா? திரைத்துறைக்குச் சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேள்வி!

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 1,200 திரையரங்குகள் மூடப்பட்டன. தமிழகத்தில் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரையில் மொத்தம் 1200 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் காலை, பிற்பகல், மாலை, இரவு என 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. வார இறுதி நாள்களில் மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும். கடந்த 3-ம் தேதி முதல் நான்கு நாள்களாகத் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு போராட்டம் நடைபெற்றது. 

திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து விவாதிக்க குழு அமைக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொண்டதை அடுத்து இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்துள்ளன. தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சினிமா டிக்கெட் ரூ.100 மற்றும் அதற்கு மேல் இருந்தால் அதனுடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும். டிக்கெட் கட்டணம் ரூ.100 - க்கு குறைவாக இருந்தால், அத்துடன், 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். 

அதாவது, இதுவரை ரூ.120 - க்கு இருந்த டிக்கெட் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.153.60, ரூ.100 க்கான டிக்கெட் ரூ.128. ஆன்லைனில் பதிவு செய்தால்: சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நிலையில், அதனுடன் ஜிஎஸ்டி தவிர, வழக்கம்போல் கூடுதலாக ரூ.30 கட்டணம் செலுத்தவேண்டும்.

இந்நிலையில் திரைத்துறைக்குச் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

மக்கள் தலையில் வரியை, டிக்கெட் கட்டண உயர்வை சுமத்திவிட்டு வரி உயர்வு, இரட்டை வரி என்று குமுறும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு... திரைத்துறைக்கு... 5 கேள்விகள்: 

1. வாகன பார்க்கிங்குக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் வசூலிக்க மாட்டோம் என்று அறிவிக்கத் தயாரா?

2. தியேட்டருக்குள் விற்கப்படும் உணவுப்பொருள்களை எம்.ஆர்.பி.(அதிகபட்ச விற்பனை விலை) விலையில் விற்கத் தயாரா?

3. வெளியிலிருந்து கொண்டுவரும் உணவுப்பொருள்களை தியேட்டருக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற சட்டத்துக்குப் புறம்பான போக்கை மாற்றத் தயாரா?

4. தியேட்டர் கவுண்டரில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலிப்போம் என்று அறிவிக்கத் தயாரா?

5. சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்துக்குச் சட்டப்படி நாங்கள் வரி கட்டுவோம், கருப்புப் பணப் பரிமாற்றம் செய்யமாட்டோம் என்று திரை நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்கத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com