ஸ்ரீதேவியின் 'மாம்' என்ன மாதிரியான  படம்?!

தன் மகளுக்கு நடக்கும் அநீதிக்கு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காத நிலையில் தனியார் துப்பறிவாளராக வரும் நியாசுதீன் சித்திக்குடன் இணைந்து சட்டத்தின் ஓட்டைகளைத் துணையாகக் கொண்டு குற்றவாளிகளை ஸ்ரீதேவி
ஸ்ரீதேவியின் 'மாம்' என்ன மாதிரியான  படம்?!

‘இங்லீஷ்... விங்லீஷ்’ திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் இதில் இயல்பான ஸ்ரீதேவியைக் காண முடிகிறது. ‘புலி’ மாதிரியான திரைப்படங்களில் நடித்து ஸ்ரீதேவி தன்னை மேலும் சோதனைக்குள்ளாக்கி கொள்ளாமல் இப்படித் தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டுமே நடித்தாலும் போதும்... லட்சோபலட்சம் ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு மத்தியில் இதுவரை அவர் ஏற்று நடித்த பல்வேறு அருமையான கதாபாத்திரங்களுக்கு ஈடாக எப்போதும் போல ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்தவராகக் கருதப் படுவார்.

யோசித்துப் பாருங்கள்... 16 வயதினிலே, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், மூன்று முடிச்சு, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, ப்ரியா, மீண்டும் கோகிலா, நான் அடிமை இல்லை என்று பட்டியலிடத் தொடங்கினால் இது வரை தான் நடித்த அத்தனை தமிழ் திரைப்படங்களிலும் ஸ்ரீதேவியை ரசிக்காதவர்களென எவரும் இருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒவ்வொரு படத்திலும் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்கு அத்தனை நியாயம் செய்தவராகவே அவர் இருந்தார்.

தமிழில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘இங்லீஷ்...விங்லீஷ்’ திரைப்படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி ஆனார். இந்தியில் மட்டுமல்ல தமிழிலும் நேர்மையான விமர்சனத்துக்கு உள்ளான திரைப்படங்களில் ஒன்றானது இங்லீஷ்...விங்லீஷ். தற்போது வெளிவந்திருக்கும் ‘மாம்’ திரைப்படம் கூட ஸ்ரீதேவிக்கு அப்படியான ஒரு திரைப்படமாக அமைய நிறைய வாய்ப்பிருக்கிறது. மாம் திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் கதை அமைப்பு உறவு முறைச் சிக்கலோடு, தான் பெறாத மகளுக்கு நேர்ந்த வன்கொடுமைக்காக, அதற்கு காரணமானவர்களை பழி வாங்க முயற்சிக்கும் மாற்றாந்தாயின் அக எழுச்சியையும், புத்திசாலித் தனத்தையுமே மையமாகக் கொண்டு கதை நகர்வதால் இது வளரிளம் பருவத்துப் பெண்களை மகள்களாக உடைய அனைத்து அம்மாக்களுமே காண வேண்டிய திரைப்படங்களில் ஒன்றாகிறது.

மாம் திரைப்படத்தின் மையக்கரு...

பள்ளி ஆசிரியையான ஸ்ரீதேவி, அவரது பிஸினஸ் மேன் கணவர். கணவரின் முதல் மனைவியின் மகளாக டீன் ஏஜ் பெண்ணொருத்தி. இரண்டும் கெட்டான் வயதிலிருக்கும் அந்தப் பெண்ணுக்கும்,  அவளது மாற்றாந்தாய்க்கும் இடையிலான உறவுச் சிக்கல். இதற்கிடையில் இளங்கன்று பயமறியாது என்பது போல துள்ளலாக இருக்கும் அந்த வாயாடிப் பெண்ணுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமையைக் கண்டு மனதுக்குள் கொதித்தெழும் சிற்றன்னையாக ஸ்ரீதேவி. தன் மகளுக்கு நடக்கும் அநீதிக்கு நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காத நிலையில் தனியார் துப்பறிவாளராக வரும் நியாசுதீன் சித்திக்குடன் இணைந்து சட்டத்தின் ஓட்டைகளைத் துணையாகக் கொண்டு குற்றவாளிகளை ஸ்ரீதேவி அலைஸ் மாம் எப்படித் தண்டிக்கிறார் என்பது தான் கதை. 

சைக்கலாஜிக்கல் திரில்லர் வகைத் திரைப்படமான இதில் ஏதோ ஓரிடத்தில் மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ சாயல் தெரிகிறதோ என்று தேடினால் ஒரே ஒரு விசயத்தில் மட்டும் தான் இரண்டுக்குமிடையே ஒற்றுமை இருக்கிறது. ‘யுத்தம் செய்’ திரைப்படத்தின் ரெளத்திரம் பழகும் அம்மாவை கொஞ்சமே... கொஞ்சம் ஞாபகப் படுத்துகிறார் இந்த ‘மாம்’. அப்படிப் பார்த்தால் ‘த்ருஷ்யம்’ திரைப்படத்திலும் தன் மகளுக்கு நேர்ந்த அவமானத்தை தடுப்பதற்காகத் தானே அந்த அம்மா கேரக்டர் கொலை செய்கிறது. அப்படியான அம்மாக்கள் அனைவரையும் மாம் ஞாபகப் படுத்துகிறார். சம்பவங்களும், சூழலும் மட்டும் தான் வேறு, வேறாக இருக்கின்றனவே தவிர தன் மகளுக்கு நேரும் அவலத்தைக் கண்டு சுரீரெனப் பொசுங்கி அநீதியைத் தீய்க்கத் துடிக்கும் தாய்மை உணர்வில் மேலே சொன்ன அத்தனை அம்மாக்களும் சக்தியின் வெவ்வேறு அம்சங்களாகவே தோன்றுகிறார்கள். இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று தேடினால் ‘பத்ரகாளி’ திரைப்படத்தின் காயத்ரி கூட சக பெண்ணுக்கு நேரும் மானபங்கத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் தானே ஒரு கொலை செய்கிறாள். அத்தோடு மனப்பிறழ்வாகி பைத்தியமாகிறாள். ஆக இது தன் குழந்தைக்கு நேரும் அவமானத்துக்கு நிகரான நீதி கிடைக்காத பட்சத்தில் பழி தீர்க்க முயலும் அம்மாக்களைப் பற்றிய படம் என்றால் பொருத்தமானதே! எது எதற்கோ வளைந்து கொடுக்கும் நமது சட்டங்களை அம்மாக்கள் தங்கள் மகள்களின் பெயரால், அவர்களுக்கு கிடைத்திராத நீதியின் பெயரால் சற்று வளைத்தால் அதிலென்ன தவறிருக்க முடியும்?!

“எப்போதும் அம்மாக்களுக்கு சட்டங்களை விடவும் சாலப் பெரியது தம் மகள்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மட்டுமே!”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com