பாகுபலி - ஸ்ரீதேவி சர்ச்சை: இயக்குநர் ராஜமெளலி விளக்கம்!

யாருடைய தரப்பு சரி என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்...
பாகுபலி - ஸ்ரீதேவி சர்ச்சை: இயக்குநர் ராஜமெளலி விளக்கம்!

நடிகை ஸ்ரீதேவி பாகுபலி நடிக்காதது குறித்த சர்ச்சைக்கு இயக்குநர் ராஜமெளலி பதில் அளித்துள்ளார்.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இதுவரை ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்தியா முழுக்க தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் 1050 திரையரங்குகளில் தனது 50-வது நாளைச் சமீபத்தில் கடந்தது. ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த வேடத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போனதால் பிறகு ரம்யா கிருஷ்ணன் நடிக்க நேர்ந்தது.

ராஜமெளலி ஒரு பேட்டியில், ஸ்ரீதேவி விதித்த கூடுதல் நிபந்தனைகளால் அவரை பாகுபலி படத்தில் நடிக்கவைக்கவேண்டும் என்கிற யோசனையைக் கைவிட்டதாகவும் அதன்பின்பு ரம்யா கிருஷ்ணனைத் தேர்வு செய்ததாகவும் கூறினார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதேவி அளித்த விளக்கத்தில் கூறியதாவது:

பாகுபலி படத்தில் நடிக்க நான் பல்வேறு நிபந்தனைகளை விதித்தாகக் கூறப்படுகிறது. உணவு விடுதியின் ஒரு தளம் முழுக்க எனக்ககாகப் பதிவு செய்யவேண்டும், ரூ. 10 கோடி சம்பளம் வேண்டும், 10 விமான டிக்கெட்டுகள் வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை விதித்ததாக எழுதுகிறார்கள். இவையெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள். இப்படியெல்லாம் கட்டளையிடுபவளாக இருந்திருந்தால் என்னை எப்போதோ திரையுலகிலிருந்து வெளியே அனுப்பியிருப்பார்கள். 50 வருடங்களில் 300 படங்களில் நடித்திருக்கமுடியாது. என் திரையுலக வாழ்வில் பல படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்ததற்குக் காரணங்கள் உண்டு. ஆனால் பாகுபலி-யின் இரண்டு பாகங்களும் வெளியான பின்பும் ஏன் நான் அந்தப் படத்தில் நடிக்காதது குறித்துப் பேசுகிறார்கள் எனப் புரியவில்லை. 

என் கணவரும் தயாரிப்பாளராக உள்ளார். எனவே ஒரு தயாரிப்பாளர் சந்திக்கும் பிரச்னைகள் எனக்கும் தெரியும். எனவே செய்திகளில் வெளிவந்ததுபோன்ற நிபந்தனைகளை நான் விதிக்கவில்லை. ஒருவேளை படத்தயாரிப்பாளர், அப்படியெல்லாம் நான் கேட்டதாக ராஜமெளலியிடம் சொல்லியிருக்கலாம். அல்லது தகவல் பரிமாற்றத்தில் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றைப் பொதுவெளியில் பேச எனக்கு விருப்பமில்லை. எனக்கு இயக்குநர் ராஜமெளலியின் நான் ஈ படம் மிகவும் பிடிக்கும். அவர் படங்களில் நடிக்க விருப்பப்பட்டுள்ளேன். ஆனால் சமீபத்தில் ராஜமெளலியின் ஒரு பேட்டியைப் படித்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று கூறினார் ஸ்ரீதேவி.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து இயக்குநர் ராஜமெளலி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

யாருடைய தரப்பு சரி என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். பொதுவெளியில் இந்த விஷயம் குறித்து நான் விவாதித்திருக்கக்கூடாது. அந்தத் தவறை உணர்கிறேன். மும்பைத் திரையுலகில் தென்னிந்தியப் பிரதிநிதியாகச் சாதித்தவர் ஸ்ரீதேவி. அவர்மீது எனக்கு அதிக மரியாதை உண்டு. அவருடைய மாம் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com