கட்டண உயர்வால் வெகுவாகக் குறைந்த கூட்டம்: புதிய சிக்கலில் கோலிவுட்!

டிக்கெட் விலை உயர்வுடன் பார்வையாளர்களுக்கு வேறு சில கூடுதல் செலவுகளும் ஏற்படுவதால் திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது...
கட்டண உயர்வால் வெகுவாகக் குறைந்த கூட்டம்: புதிய சிக்கலில் கோலிவுட்!

திரைப்பட டிக்கெட் கட்டண உயர்வால் திரையரங்குகளுக்குக் குறைவான வசூலே நேற்று கிடைத்துள்ளது. இதனால் தமிழ்த் திரையுலகத்துக்குப் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 1,200 திரையரங்குகள் மூடப்பட்டன. தமிழகத்தில் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரையில் மொத்தம் 1200 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் காலை, பிற்பகல், மாலை, இரவு என 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. வார இறுதி நாள்களில் மட்டுமே 5 காட்சிகள் திரையிடப்படும். கடந்த 3-ம் தேதி முதல் நான்கு நாள்களாகத் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு போராட்டம் நடைபெற்றது. 

திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து விவாதிக்க குழு அமைக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொண்டதை அடுத்து நேற்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்துள்ளன. 

இந்த வாரம் எந்தவொரு புதுப்படமும் வெளியாகவில்லை. கடந்த வாரங்களில் வெளியான வனமகன், இவன் தந்திரன் உள்ளிட்ட படங்களும் மொழிமாற்றுப்படங்களான ஸ்பைடர்மேன் ஹோம்கம்மிங், மாம் ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன. இதையடுத்து புதிய டிக்கெட் கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சினிமா டிக்கெட் ரூ.100 மற்றும் அதற்கு மேல் இருந்தால் அதனுடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படுகிறது. டிக்கெட் கட்டணம் ரூ.100 - க்கு குறைவாக இருந்தால், அத்துடன், 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது, இதுவரை ரூ.120 - க்கு இருந்த டிக்கெட் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.153.60, ரூ.100 க்கான டிக்கெட் ரூ.128. சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நிலையில், அதனுடன் ஜிஎஸ்டி தவிர, வழக்கம்போல் கூடுதலாக ரூ.30 கட்டணம் செலுத்தவேண்டும். 

தமிழ்நாட்டில் 1127 திரையரங்குகள் உள்ளன. இதில் நேற்று புதிதாக மற்றும் மீண்டும் வெளியான படங்களுக்குக் குறைவான கூட்டமே வந்துள்ளது. வார இறுதிகளில் கிட்டத்தட்ட நூறு சதவீதம் கூட்டம் இருக்கும். புதிய படங்களுக்கு எப்படியும் 80 சதவீதம் கூட்டம் கிடைக்கும். ஆனால் நேற்று பாதிக்கூட்டம் கூட வரவில்லை. சென்னையில் உள்ள திரையரங்குகளில் 40 சதவீதமும் இதரப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் 60% சதவீதமும் ரசிகர்களின் கூட்டம் குறைந்துள்ளது. 

இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

* ரூ. 120-லிருந்து ரூ. 154-க்கு உயர்ந்த டிக்கெட் விலை. ஜிஎஸ்டி வரியை ரூ. 120 உடன் சேர்ப்பதால் மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன திரையரங்குகள்.

* டிக்கெட் உயர்வுடன் சேர்ந்து இணையத்தில் டிக்கெட்டைப் பதிவு செய்கிறபோது ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் கூடுதலாக ரூ. 30 க்கும் மேல் செலவாவது. உதாரணமாக, சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கின் ரூ. 47 டிக்கெட்டுக்கு இணையத்தில் பதிவு செய்கிறபோது கூடுதலாக ரூ. 40 செலவாகிறது. இதுபோன்று கடுப்பேற்றும் விலையேற்றங்கள்.

* ரசிகர்கள் மிகவும் விருப்பத்துடன் பார்க்கும் ஸ்பைடர்மேன் படத்துக்கும் கூட்டம் குறைவாகவே வந்துள்ளது. ஸ்பைடர் மேன் படத்தை சென்னை சத்யம் திரையரங்கில் பார்க்கவேண்டுமெனில் டிக்கெட் விலையே ரூ. 213.60. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சில திரையரங்குகளில் 3டி கண்ணாடிக்கென தனியாகக் கட்டணம் விதிக்கவில்லை. இருந்தும் திடீர் கட்டண உயர்வால் ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் செல்லத் தயங்குகிறார்கள்.

* பெரிய நடிகர்களின் படம் வெளிவராதது.

இந்த அம்சங்களால் வார இறுதியில் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் அதிகக் கூட்டம் வராமல் உள்ளது. ஆரம்பத்தில்தான் இப்படி இருக்கும். இந்தக் கட்டணம் போகப்போகப் பழகிவிடும். பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவருகிறபோது மக்கள் இந்தக் கட்டணத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள் என கோலிவுட் கருத்து தெரிவிக்கிறது. மேலும் திங்கள் அன்று இதன் பாதிப்பு குறித்து முழுமையாகத் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. 

இருந்தாலும் இந்த டிக்கெட் உயர்வு பார்வையாளர்களிடையே கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. டிக்கெட் விலை உயர்வு மட்டுமல்லாமல் பார்க்கிங், பாப்கார்ன் என வேறுசில கூடுதல் செலவுகளும் உள்ளதால் மூன்று, நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் திரையரங்குக்குச் செல்லவேண்டுமென்றால் எப்படியும் ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என்கிற இக்கட்டான நிலைமை உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இந்த விலை உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.

இதனால் கோலிவுட்டுக்குப் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் திரையுலகம் எதிர்பாராத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அஞ்சப்படுகிறது. இணையத்தில் புதுப்படங்கள் வெளிவருவதைத் தடுக்கமுடியாத நிலையில் இந்த விலை உயர்வும் தமிழ்த் திரையுலகுக்கு மேலும் பல அழுத்தங்களைத் தரும் என்று கூறப்படுகிறது. 

இதைச் சரிகட்ட தமிழ்த் திரையுலகம் புதிய யோசனைகளைக் கையாள வேண்டும், மக்களின் செலவுகளைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் விருப்பப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com