பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென வெளியேறிய பரணி: எழும் கேள்விகள்!

அவருடைய உயிருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் விஜய் டிவி நிர்வாகம் பரணியின் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்லும்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென வெளியேறிய பரணி: எழும் கேள்விகள்!

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பிக் பாஸ் அற்புதமாகத் தொடங்கியுள்ளது. 3 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. நன்றி மக்களே என்று விஜய் டிவி சமீபத்தில் தகவல் வெளியிட்டது. 

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் பரணி அரங்கை விட்டு வெளியேறும் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. அவர் வெளியேறும் விதம் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. 

குழுவில் உள்ள அனைவரும் தன்னை ஒதுக்குவதால் பிக் பாஸை விட்டு வெளியேற பரணி முடிவு செய்தார். இதனால் அவர் பிக் பாஸ் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதில் ஏதும் வராததால் அவர் சுவரைத் தாண்டி வெளியேற முடிவெடுத்தார். 

தன்னை வெளியேற்றாவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என்றும் கேமரா முன்பு மிரட்டினார். ஆனால் பதில் ஏதும் வராததால் மிகவும் கடினப்பட்டுப் பல தடைகளைத் தாண்டி அரங்கை விட்டு வெளியேற முயற்சி செய்தார். அதாவது சுவரேறித் தாண்ட முயற்சி செய்தார். மிகவும் உயரமான சுவர் என்பதால் அவரால் அவ்வளவு எளிதில் தாண்டமுடியவில்லை. இதனால் பார்வையாளர்களிடையே பதைபதைப்பு ஏற்பட்டது.

பிக் பாஸ் அரங்கில் இருந்த மற்றவர்கள் யாரும் இதைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. டிஆர்பி ரேட்டிங்குக்காக நாடகம் ஆடுகிறார் என்று பரணியை விமரிசனம் செய்து அதே இடத்தில் நகராமல் அமர்ந்திருந்தார்கள். இதனால் நிகழ்ச்சியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

பரணியின் இந்த விபரீத முயற்சியில் நல்லவேளையாக அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

அவரே சொன்னதுபோல மேலே இருந்து கீழே குதித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவருடைய உயிருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் விஜய் டிவி நிர்வாகம் பரணியின் குடும்பத்தினருக்கு என்ன பதில் சொல்லும் என்று பார்வையாளர்களை எண்ணவைக்கும் அளவுக்கு நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது. 

மேலும் அவர் சுவரைத் தாண்டி வெளியேற முயற்சி செய்ததும் ஆபத்துக்குரியதாக இருந்தது. அவர் கால் இடறி கீழே விழுந்திருந்தால் பலத்த அடி ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் அவருடைய
முயற்சியைத் தடுக்க குழுவினரோ பிக் பாஸ் நிர்வாகமோ முயற்சி செய்யவில்லை. 

தன் பையில் இருந்த மைக்கின் மூலம் பரணி தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால் கடைசியில் அவரைக் கீழே இறங்கும்படி கட்டளையிடப்பட்டது. பிறகு, விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் பரணி. 

இதனால் இக்காட்சிகளைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதைனையொட்டி பல கேள்விகள் சமூகவலைத்தளங்களில் எழுப்பப்பட்டன. 

டிஆர்பி ரேட்டிங்குக்காக ஒருவருடைய உயிரிலும் வாழ்க்கையிலும் தொலைக்காட்சிகள் விளையாடக்கூடாது என்பதுதான் சமூகவலைத்தளத்தில் பலருடைய கருத்தாக இருந்தது. தன்னைக் காப்பாற்ற முயற்சி செய்யாதவர்களை விட்டு அவர் வெளியேறியது சரியான முடிவு என்றும் கூறப்பட்டது. 

மேலும் கடந்த வாரத்தின் தலைவியாக இருந்த காயத்ரி ராகுராம், பரணியின் செயலைத் தடுக்க எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து அவர் பிக் பாஸ் நிர்வாகத்திடமும் முறையிடவில்லை. மற்ற உறுப்பினர்கள் போல அவரும் அமைதியாகவே இருந்தார். இதனால் நிகழ்ச்சியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டாலும், சுவற்றில் ஏறும்போதோ, இறங்கும்போதே பரணி கீழே விழுந்திருந்தாலோ அல்லது வேறு ஏதாவது செய்திருந்தாலோ என்ன ஆகியிருக்கும்? அது நிகழ்ச்சியையே பாதித்திருக்குமே என்கிற கேள்விகளும் எழாமல் இல்லை. மேலும் பரணி, நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடித்தால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் காயத்ரி ரகுராம் கூறினார். இது பரணி மீது தேவையற்று அவதூறு கூறுவதுபோல உள்ளது. இது தொடர்புடைய காட்சிகள் முன்பு காண்பிக்கப்படாததால் காயத்ரியின் இந்த அச்சம் மேலும் குழப்பத்தையே உண்டுபண்ணியது.

இதுதவிர, பிக் பாஸ் தொடர்புடைய மீம்களில் ஜூலிக்குக் கையில் காயம் ஏற்பட்டது, பரணி சுவரேறிக் குதிப்பது போன்ற காட்சிகள் மற்ற மொழிகளில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளதால், தமிழ் பிக் பாஸில் நடப்பதெல்லாம் முன்பே திட்டமிடப்பட்டு அரங்கேறிய செயலா என்கிற சந்தேகமும் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

வழக்கமாக வார இறுதியில் இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வது போல கமலின் இருநாள் நிகழ்ச்சிகள் அமையும். அதேபோல பரணி தொடர்புடைய சர்ச்சைகளுக்கு கமல் வழியாக விஜய் டிவி நிர்வாகம் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com