இந்து மக்கள் கட்சி போராட்டம்: கமல் வீட்டின் முன்பு காவலர்கள் குவிப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரியும் கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரியும்...
இந்து மக்கள் கட்சி போராட்டம்: கமல் வீட்டின் முன்பு காவலர்கள் குவிப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஏற்பட்ட சர்ச்சையினால் இந்து மக்கள் அமைப்பினர் கமல் வீட்டின் முன்பு போராட்டம் செய்ததையடுத்து, கமல் வீட்டுக்குக் காவல்துறையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை சேரி பிஹேவியர் என காயத்ரி ரகுராம் கூறியதற்குக் கடும் விமரிசனங்கள் எழுந்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் காயத்ரி ரகுராமுக்கும் விஜய் டிவிக்கும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடி வரும் எவிடன்ஸ் கதிர், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலிடமும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் கூறியதாவது: சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை தான் காயத்ரி ரகுராமுக்குச் சொல்லிக்கொடுத்து, அவர் சொல்லியிருந்தால்தான் அதற்குப் பதில் கூறுவேன் என்றார்.

இதுதவிர, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரியும் கமல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரியும் பல்வேறு மனுக்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளன.

கமல் நடத்தும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்க சிவா மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

எவ்வித தொடர்பும் இல்லாத ஏழு ஆண்களும் ஏழு பெண்களும் கலந்துகொண்டு ஆபாசமாகப் பேசியும் 75% நிர்வாணமாகவும் நடித்து வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியைப் பார்த்து வரும் சூழலில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்கச் செய்யும். தமிழர்கள் உயிரை விட மேலாக மதித்துப் போற்றும் தமிழ் தாய் வாழ்த்தைக்கூட கிண்டலடிக்கும் காட்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது. இது ஏழு கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலையும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 14 பேரையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். உடனடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்து தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டைக் காப்பாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த விவகாரத்தால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கமல், காயத்ரி ரகுராம் போன்றோருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டை முற்றுகையிடுவதற்காக இன்று அவருடைய வீட்டின் முன்பு போராட்டம் செய்தார்கள். இதைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து கமல் வீட்டுக்குக் காவல்துறையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com