தரமான படத்தைத் தந்ததற்கு விருதுகளே சாட்சி: வசந்த பாலன் நெகிழ்ச்சி!

காவியத்தலைவன் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறவில்லை. விருதுகளாவது வந்து சேருமா என்று...
தரமான படத்தைத் தந்ததற்கு விருதுகளே சாட்சி: வசந்த பாலன் நெகிழ்ச்சி!

2009 - 2014-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. ஒருபக்கம் விருதுகளைப் பெற்றுள்ள நடிகர்கள், நடிகைகள், குணச்சித்திர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனத் திரையுலகின் பல தரப்பினரும் தமிழக அரசுக்கு நன்றி செலுத்தி வருகிறார்கள். அதேசமயம் விருது கிடைக்காதவர்கள் உள்ளுக்குள் மட்டும் குமுறிக்கொண்டிருக்கவில்லை. வெளிப்படையாக தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இயக்குநர் சுசீந்திரன் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இதே போல் அங்காடி தெரு படத்தில் நடித்த இயக்குநர் ஏ.எல். வெங்கடேஷ், தனக்கு விருது அளிக்காமல் எந்தத் தகுதியின் அடிப்படையில் பிரகாஷ் ராஜூக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.  பாடலாசிரியர் விருதுகளில் மட்டும் பெரிய இருட்டடிப்பு நிகழ்ந்துள்ளதாக உணர்கிறேன். இந்த ஆறு வருட விருது அறிவிப்புகளில் எனக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு விருது கூட அறிவிக்கவில்லை. நானும் அவரும் இந்த ஆறு வருடங்களில் ஒரு விருதுக்குரிய பாடலைக்கூடவா எழுதவில்லை? விருதுக்குழுவினருக்கு மனசாட்சி என ஒன்று இருக்கிறதா என்பது என்னுடைய கேள்வி எனத் தனது அதிருப்தியை வலுவாகவே பதிவு செய்துள்ளார் கவிஞர் பா. விஜய்.

இந்நிலையில் காவியத் தலைவன் படத்துக்குக் கிடைத்த விருதுகள் குறித்து இயக்குநர் வசந்தபாலன் ஃபேஸ்புக்கில் எழுதியதாவது: 

காவியத்தலைவன் திரைப்படத்துக்குத் தமிழக அரசின் 10 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகர்,வில்லன், குணச்சித்திர நடிகர், குணச்சித்திர நடிகை, கலை இயக்கம், இசை, ஒளிப்பதிவு, பின்னணிப் பாடகர், உடைகள், ஒப்பனை என 10 பிரிவுகளில் விருதுகள் வழக்கப்பட்டு உள்ளன. 

காவியத்தலைவன் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறவில்லை. விருதுகளாவது வந்து சேருமா என்று ஒரு பெரும் ஏக்கம் இருந்தது. ஆசைஆசையாகப் பண்ணிய திரைப்படம். இரண்டரை ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் உழைப்பு இவை சரியாகக் கவனிக்கப்படவில்லை என்கிற கவலை ஒரு கலைஞனாக அதிகமாக எனக்கு இருந்தது. தேசிய விருதுக்கு ஏதோ நிர்வாக முறைகேடால் அனுப்பப்படவில்லை. பிலிம்பேர் விருதும் கிடைக்கவில்லை. விஜய் தொலைக்காட்சி விகடன் விருதுகள் உடைகள், ஒப்பனைக்குச் சென்றன. அது அவ்வளவாகப் பத்திரிகைகளால் கவனிக்கப்படவில்லை.

அது பலநாள் என் இரவுத் தூக்கத்தை ஒரு கொசுவைப் போல மொய்த்துக்கொண்டிருக்கும். நான் தூங்கியவுடன் கொசு மண்டைக்குள் போய் குடையும் ஒரு வண்டை போல.

இப்போது காவியத்தலைவனுக்கு 10 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு தரமான படத்தைத்தான் தந்திருக்கிறோம். அதற்கு இந்த விருதுகள்தான் சாட்சி என்று தோன்றியது.

இப்போது எனக்கு அங்காடித் தெரு படத்துக்குச் சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது. அங்காடித் தெரு படத்தைப் பொறுத்தவரை அது போதிய அளவு கவனிக்கப்பட்டுவிட்டது. அதனால் எனக்குக் கிடைத்த விருதை விட காவியத்தலைவன் படத்துக்குக் கிடைத்த 10 விருதுகள் அதிக சந்தோசத்தையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளன. அது அடுத்து எடுக்க இருக்கும் படத்திற்கு ஊக்க மருந்தாக உள்ளது.

தமிழக அரசுக்கும் விருது குழுவுக்கும் என்னுடன் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com