ஷ்ருதி ஹாசனை மறைமுகமாகச் சாடிய குஷ்பு!

கெளரவமான பாரம்பரியத்தைத் தொடர்பவர்களிடமிருந்து சிறு அளவிலாவது தொழில்முறை அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன்...
ஷ்ருதி ஹாசனை மறைமுகமாகச் சாடிய குஷ்பு!

சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் "சங்கமித்ரா'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 24' படத்துக்காக தேசிய விருது வென்ற திரு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் உருவாகவுள்ளது. இப்படத்துக்கு இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பிரதான கதாநாயகியாக ஷ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு அப்படத்திலிருந்து திடீரென விலகினார்.

முழுமையான திரைக்கதை வடிவம் தரப்படவில்லை. படப்பிடிப்புத் தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே விலகலுக்குக் காரணம் என்று ஷ்ருதி தரப்பிலிருந்து பதில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஷ்ருதி ஹாசனை மறைமுகமாகச் சாடி சங்கமித்ரா விவகாரம் குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியதாவது:

சங்கமித்ரா படம் அதிக செலவில் உருவாகும் படம். சரியான திட்டமிடாமல் அப்படத்தை எடுக்க முடியாது. சங்கமித்ரா படத்தின் திரைக்கதை தயாராகவில்லை என்று ஒருவர் சொல்வதைக் காண்கிறேன். சங்கமித்ரா பணிகள் கடந்த இரு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தொழில்முறையைப் பின்பற்றாதவர்களுக்கு இது தெரியாது. சங்கமித்ரா போன்ற படங்களுக்குப் படப்பிடிப்பில் 30% வேலைகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 70% வேலைகள் படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பு உள்ளன. தங்கள் மீதுள்ள குறைகளுக்காக மற்றவர்களைக் குறை கூறுவது ஏன்? கெளரவமான பாரம்பரியத்தைத் தொடர்பவர்களிடமிருந்து சிறு அளவிலாவது தொழில்முறை அணுகுமுறையை எதிர்பார்க்கிறேன். உங்கள் தவறுகளைப் பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்வது உங்களது எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த ட்வீட்களை வெளியிட்ட பிறகு சொந்தக் காரணங்களுக்காக ட்விட்டரிலிருந்து தாற்காலிகமாக விலகியுள்ளார் குஷ்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com