பிரதமர் மோடிக்கு, நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா கடிதம் எழுதிய விவகாரம்!

அயல்நாட்டில் இருந்து வந்த மருந்துக் கம்பெனி பிரதிநிதிகள் என்ற பெயரில் இருவர் திவ்யாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அவர்களது நோக்கம்; உடல் எடையைக் கூட்ட, குறைக்க உதவும் மல்ட்டி விட்டமின் மாத்திரைகள்
பிரதமர் மோடிக்கு, நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா கடிதம் எழுதிய விவகாரம்!

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் திவ்யா, இந்திய மருத்துவத்துறையில், மருந்துப் பொருட்கள் விற்பனை என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் நோக்கில் ஊடுருவியுள்ள விஷமுட்களைப் பற்றி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்று இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருந்தது. இதில் பலருக்கும் திவ்யா மோடிக்குக் கடிதம் எழுதி இருக்கிறார் என்ற விசயம் தெரிந்திருந்ததே தவிர அந்தக் கடிதத்தில் அவர் என்ன எழுதி இருந்தார் என்பதைப் பற்றி பெரிதாக விஷயமொன்றும் தெரியாமலே இருந்து வந்தது. அந்தக்கடிதத்தின் சாராம்சம் இது தான்;

அயல்நாட்டில் இருந்து வந்த மருந்துக் கம்பெனி பிரதிநிதிகள் என்ற பெயரில் இருவர் திவ்யாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அவர்களது நோக்கம்; உடல் எடையைக் கூட்ட, குறைக்க உதவும் மல்ட்டி விட்டமின் மாத்திரைகள் மற்றும் கொழுப்பைக் குறைக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட மாத்திரைகள் அடங்கிய தங்களது மருந்துப் பொருட்களை திவ்யா நல்லெண்ணத்தோடு தமிழகத்தில் பரிந்துரைக்க வேண்டும் என்பதே. ஆனால் அவர்களது மருந்துப்பொருட்களின் (இன்கிரடியண்ட்ஸ்) மூலப்பொருட்கள் லிஸ்டைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவற்றில் ஸ்டீராய்டுகளின் சதவிகிதம் அதிகமிருந்ததைக் கண்டு ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யா அந்த மருந்துகளை நல்லெண்ணத்தோடு பரிந்துரைக்க மறுப்புத் தெரிவித்திருக்கிறார். திவ்யா மறுத்ததும் முதலில் அவருக்கு லஞ்சம் அளித்து தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள நினைத்த அந்த அயல்நாட்டு மருந்து விற்பனைக்குழு பிரதிநிதிகள் இருவரும், தாங்கள் பிரபல அமைச்சரது வீட்டில் தங்கியிருக்கிறோம் என்று கூறி மிரட்டத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களது மிரட்டலுக்குப் பணியாமல் அவர்களைத் திருப்பி அனுப்பிய திவ்யா, இவ்விஷயம் குறித்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். அந்தக் கடிதம் எழுதிய விசயம் தான் தற்போது இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

கடிதத்தில் திவ்யா;

இந்தியாவில் நாள்தோறும் பல்வேறு விதமான உபாதைகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை கோடிக்கணக்காக உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களது நோயை குணப்படுத்தும் விதமான மருந்துகளை அளிக்காமல், மேலும், மேலும் அந்த நோயின் தீவிரம் அதிகரிக்கும் விதமான மருந்துகளை அளித்து, தொடர்ந்து  மக்களை மருத்துவமனைகளிலேயே அமிழ்த்தி அவர்கள் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை மருந்து, மாத்திரைகளுக்காக அபகரிக்கும் எண்ணத்துடன் அயல்நாட்டு மருந்துக் கம்பெனிகள் இப்படி ஒரு சதித் திட்டத்துடன் களமிறங்கினால் அரசு அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்லதில்லை. பிற நாடுகளில் விற்கத் தடை செய்யப்பட்ட இத்தகைய மருந்துகளை இந்தியாவில் மட்டும் விற்க முடிவதின் பின்னிருக்கும் அரசியல் சூட்சுமம் என்ன? ஏன் அரசு இப்படி மக்களின் உயிரோடு விளையாட வேண்டும்? எனவே பிரதமர் மோடி அவர்கள் இவ்விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனும்படியாக அவர் கடிதம் நீள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com