சிரஞ்சீவியின் வாழ்க்கையை திரைப்படமாக்க முயற்சிக்கும் தென்னிந்திய நடிகர்!

டோலிவுட்டில் 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த ’அல்லூரி சீதாராம ராஜூ’ திரைப்படத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக அங்கே சொல்லிக் கொள்ளும்படியான பயோபிக்குகள் வெளிவரவே இல்லை
சிரஞ்சீவியின் வாழ்க்கையை திரைப்படமாக்க முயற்சிக்கும் தென்னிந்திய நடிகர்!

கோலிவுட்டில் இளைய தலைமுறை நடிகர்கள் அனைவருக்குமே சூப்பர் ஸ்டார் ஆகும் கனவு இருப்பதைப் போலவே, டோலிவுட்டில் அனைத்து இளம் நடிகர்களுக்குமே சிரஞ்சீவியாகும் கனவு இருந்தது நிஜம். இதுவரை 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் சிரஞ்சீவி... அக்கட பூமியில் செல்லமாக ‘சிரு’ என்றழைக்கப் படுகிறார். அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திராவில் தனக்கிருந்த செல்வாக்கின் மீதான நம்பிக்கையில் தான் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியையே ஆரம்பித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பின்னாளில் தனது கட்சியை காங்கிரஸுடன் சிரஞ்சீவி இணைத்து விட்டாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அவருக்கான திரையுலக மதிப்புக்கு எந்தக் குறையும் இல்லாமல் தான் நீடித்து வருகிறது.

ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும் பயோ பிக்குகள் என்று சொல்லப் படக் கூடிய வாழ்க்கைச் சித்திரங்கள் வெளிவருவது வழக்கம் தான் என்ற போதிலும் டோலிவுட்டில் அது அரிதே! 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த ’அல்லூரி சீதாராம ராஜூ’ திரைப்படத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக அங்கே சொல்லிக் கொள்ளும்படியான பயோபிக்குகள் வெளிவரவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இப்போது நிலமை அப்படி இல்லை. தற்போது அங்கே பயோ பிக் மோகம் அலையடித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் மகாநதி ‘சாவித்ரி’ யின் வாழ்க்கைச் சித்திரத்தை ஒருவர் படமாக்கிக் கொண்டிருந்தால் மறுபக்கம் சிரஞ்சீவியே ‘உய்யலவாட நரசிம்ம ரெட்டியின்’ பயோபிக்கான ‘மகாவீர்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தாண்டி சீனியர் என் டி ஆரின் வாழ்க்கை வேறு படமாகவிருக்கிறதாம். இந்த பயோபிக் அலையில் ஏறக்குறைய 300 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவியின் வாழ்க்கையையும் பயோ பிக் ஆக்கினால் என்ன? என்று ஒருவருக்குத் தோன்றியிருக்கிறது. அதன் விளைவு தான் சிரஞ்சீவியின் வாழ்க்கையை படமாக்கும் முனைப்பு.

இப்படி ஒரு விஷயத்தை முன்னெடுத்திருப்பவர் 'பானர்ஜி' என்ற தென்னிந்திய நடிகர். இவர் நடிகராவதற்கு  முன்பு டோலிவுட்டில் உதவி இயக்குனராக சில காலம் பணிபுரிந்திருப்பதால் தன்னால் சிரஞ்சீவியின் வாழ்க்கையை மக்கள் விரும்பும் வண்ணம் திரைப்படமாக்க முடியும் எனத் தெரிவித்திருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com