திரையில் தோன்றிய தேவதைகள் ஸ்ரீதேவி முதல் நயன்தாரா வரை!

திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு விஷயம் என்று அறிவுக்குத் தெரிந்திருந்தாலும் அது
திரையில் தோன்றிய தேவதைகள் ஸ்ரீதேவி முதல் நயன்தாரா வரை!

திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு விஷயம் என்று அறிவுக்குத் தெரிந்திருந்தாலும் அது ஏனோ மனத்துக்கும் வாழ்க்கைக்கும் நெருக்கமாகவே இருந்துவருகிறது. வானில் தோன்றும் நட்சத்திரங்கள் எப்படி இருளில் ஜொலிக்கிறதோ அதே போல் தான் திரையில் இவர்கள் ஜொலித்து நம் இதயத்துள் நுழைவதனால் நட்சத்திரங்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். நட்சத்திரம் என்றால் தனிச்சிறப்பு உண்டல்லவா? ஒவ்வொரு காலகட்டத்திலும் சில நட்சத்திரங்கள் நம் மனத்தை அவர்கள் அழகாலும், வசீகரத்தாலும் நடிப்பாற்றலாலும் ஆளுமையாலும் கவர்ந்திருப்பார்கள். 

வைஜெயந்தி மாலா, பத்மினி, சரோஜாதேவி, ஆகிய பழம் பெரும் நடிகைகளுக்குப் பிறகு இன்றைய ஹன்ஷிகா, கீர்த்தி சுரேஷ் வரை தமிழ்த் திரையில் கனவுக் கன்னிகளாக போற்றப்பட்ட நாயகிகள் பலர். எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு மத்தியில்,  மறக்க முடியாத நிலா முகங்கள் சிலரைப் பற்றி பார்க்கலாம்.  

ஸ்ரீதேவி

கந்தன் கருணை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ‘மாம்’ எனும் படத்தில் நடித்தது வரை ஸ்ரீதேவியின் பயணம் நீண்டது.

எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் மயில் எனும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்த ’16 வயதினேலே’ ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. அந்த செந்தூரப் பூச் சிரிப்பையும், ஊஞ்சலையும், கிராமத்துத் தேவதையாக, அப்பாவிப் பெண்ணாக, கனவைத் தொலைத்தவளாக என்று முதல் படத்திலேயே முழுத் திறமைக்கும் சவாலான கதாபாத்திரத்தில் வெற்றி பெற்றார். 

அந்தக் காலகட்டத்தில் கமல், ரஜினி இருவருக்குமே ஜோடியாகவும், நடிப்பில் அவர்களுக்கு சவால் விடும் விதமாக கலக்கியிருப்பவர் ஸ்ரீதேவி. அழகு, நடிப்பு, இனிமையான குரல் வளம், என எல்லாவிதத்திலும் ஸ்ரீதேவி போன்று திறமையான ஒரு நடிகையை இன்றுவரை பார்க்க முடியவில்லை. தமிழில் மட்டுமல்லாமல் குழந்தை நட்சத்திரமாக மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கி அங்கேயே தன் திரைப்பயணத்தை தொடர்ந்து விட்டார். அதன் பின் போனி கபூரை மணந்து நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி, 15 ஆண்டுகளுக்குப் பின் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

போனி கபூர் ஸ்ரீதேவிக்கு பிறந்த நாள் பரிசாக மாம் எனும் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். தன்னுடைய வசீகர அழகுக்குக் காரணமாக ஸ்ரீதேவி கூறுவது, அளவான சத்தான உணவு, உடற்பயிற்சி தவிர கவலைகளை தேக்கி வைத்துக் கொள்ளாத மனம் என்பதே. மனத்தில் சந்தோஷம் இருந்தால் நிச்சயம் அது முகத்தில் பிரதிபலிக்கும் என்பார் ஸ்ரீ. 

எல்லா வயதிலும் அழகுப் பதுமையாக இருக்கும் ஸ்ரீதேவி இந்திய திரையுலகுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்பதை யாராலும் மறுக்க
முடியாது.

நதியா 

இவர் பெயரைச் சொல்லும் போதே இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று தெற்றுப் பல் தெரிய அழகாக சிரிக்கும் அவரது வட்ட முகம் மற்றது நதியா நதியா நைல் நதியா என்ற பாடல்.

நதியா நடிக்க வந்த காலகட்டத்தில் அவரது கண்ணியமான உடைகள், குடும்பப் பாங்கான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது போன்ற விஷயங்களுக்கு பாராட்டப்பட்டவர். கவர்ச்சியை நம்பாமல் தன்னுடைய நடிப்பாற்றலில் நம்பிக்கை வைத்த நடிகை அவர். பூவே பூச்சூடவாவில் நடிக்கத் தொடங்கி, தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்களில் முத்திரை பதித்தவர். நதியா ஹேர்பின், நதியா தோடு, நதியா பொட்டு என எதை எடுத்தாலும் நதியாவின் பெயரை அதில் ஒட்ட வைத்தனர் வியாபாரிகள். அந்த அளவுக்கு நதியாவின் ஆதிக்கம் சாமானியர்களிடம் இருந்தது. சுரேஷ், பிரபு, மோகன் போன்ற நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்தவர்.

ராஜாதி ராஜாவில் இரட்டை வேட ரஜினிக்கு ஒரு ஜோடியாக நடித்திருப்பார். இன்னொரு ஜோடி ராதா. நதியாவின் நடனமும் சுறுசுறுப்பும், ஸ்டைலும் சூப்பர் ஸ்டாருக்கு சரி நிகராக இருந்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. புகழின் உச்சத்தில் இருக்கும் போதே திரைத்துறையிலிருந்து விலகி, திருமண வாழ்க்கையில் செட்டில் ஆனார். அதன் பின் பல வருடங்கள் கழித்து மறு திரைப் பிரவேசம் செய்தது ஜெயம் ரவியின் அம்மாவாக எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில்தான். ரசிகர்களின் ஆச்சரியம் என்னவென்றால் அதே இளமைப் பொலிவுடன் நதியா தோன்றியது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மொத்தத்தில் இதயங்களை மிதக்கவிடும் நதியாகவே இப்போது வரை இருக்கிறார் நதியா!

ரேவதி

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு மண்வாசனை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள் என நடிக்க ஆரம்பித்த சில காலங்களிலே தமிழ்நாட்டு ரசிகர்களை கவர்ந்துவிட்ட கேரள நாட்டுப் பைங்கிளி ஆஷா கேளுண்ணி. ரேவதியின் மறக்க முடியாத திரைப் பெயர்கள் மெளன ராகத்தில் திவ்யா, மண்வாசனையில் முத்துப்பேச்சி, தேவர் மகனில் பஞ்சவர்ணம். தொண்ணூறுகளில் துறுதுறுப்பான பெண் கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்தி வருவார். அதே சமயம் ஆழமான கதாபாத்திரத்துக்கும் ஏற்றவர். சமீபத்தில் அவர் நடித்த பவர் பாண்டி திரைப்படத்தில் மீண்டும் திரையில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். சிலருக்கு வயதானாலும் வசீகரம் குறைவதே இல்லை என்பதற்கு ரேவதியும் ஒரு சான்று. இன்றளவும் தன் நடிப்பாலும் அழகாலும் பலரைக் கவர்ந்தவர்

புன்னகை மன்னன், இதய தாமரை, தேவர் மகன், மெளனராகம், அஞ்சலி, அரங்கேற்ற வேளை, கிழக்கு வாசல் போன்ற பல படங்களில் அவரின் பங்களிப்பால் அப்படத்தை வேறொரு தளத்துக்கு உயர்த்தியவர். தேவர் மகனுக்காக தேசிய விருது பெற்றுள்ளார் ரேவதி. மித்ர் மை ப்ரெண்ட், ஃபிர் மிலேங்கே ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். பன்முகத் திறமை கொண்ட நடிகை அவர்.

குஷ்பு

வருஷம் 16 படத்தில் 'பூ பூக்கும் மாசம் தை மாசம்....ஊரெங்கும் வீசும் பூ வாசம்... ' இந்தப் பாடலை அக்காலக்கட்டத்து இளசுகள் மறந்திருக்க முடியாது. பம்பாயிலிருந்து கிராமத்துக்கு வந்திருக்கும் பெண் என்ற கதாபாத்திரத்துக்கு மிகச் சரியாக பொருந்தியிருப்பார். இவர் பிரபலமானது இத்திரைப்படத்தால் என்றாலும் குஷ்புவின் முதல் படம் தர்மத்தின் தலைவன். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் கலக்கியவர் குஷ்பு. குஷ்புவின் திரை வாழ்க்கையை சின்ன தம்பிக்கு முன் சின்ன தம்பிக்கு பின் என பிரிக்கும் அளவுக்கு இவரின் பிரபல்யம் கொடி கட்டிப் பறந்து அவருக்குக் கோவில் கட்டும் அளவுக்கு உயர்ந்தது. தமிழ்நாட்டு ரசிகர்களில் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் குஷ்பு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் குஷ்பு நடித்த மன்னன்,  பாண்டியன், அண்ணாமலை இரண்டுமே மெகா ஹிட் படங்கள்.

குஷ்பு ஆசைப்பட்டவாறே தமிழ்நாட்டு மருமகளாகவே மாறி இங்கேயே குடும்பம், அரசியல் சமூகம் என்ற பன்முகத் திறமையுடன் செயல்பட்டு வருகிறார். 

சின்னத் திரையிலும் அவர் செல்வாக்கு கையோங்கியிருந்தது. சீரியல், டாக் ஷோ என்று எப்போதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர். குஷ்பு தமிழ் பேசும் விதம் அவ்வளவு அழகு. தற்போது ஓவியா நீங்க ஷட் அப் பண்ணுங்க என்பது போலவே குஷ்புவும் ஆரம்பத்தில் திக்கிப் பேசிக் கொண்டிருந்தாலும் வெகு விரைவில் தமிழ் கற்றுக் கொண்டார்.

ஜோதிகா

இயற்பெயர் ஜோதிகா சாதனா. வாலியில் தொடங்கிய அவரது திரைப்பிரவேசம் அதன் பின் ஜெட் வேகப் பயணம் தான். சில பல விஷயங்களில் குஷ்புவை நினைவுப்படுத்தியதால் ரசிகர்கள் அப்படியே குஷ்புவின் வழித்தோன்றலாக ஜோவைப் பார்த்தனர். ஜோவின் சிரிப்பும் குறும்பும் அழகான நடிப்பும் அவருக்கு ப்ளஸ். ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நிறைய பெண் ரசிகைகளும் ஜோதிகாவுக்கு உண்டு.  தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருந்தை 1999-ஆம் ஆண்டு வாலி திரைப்படத்துக்காக பெற்றுள்ளார். மீண்டும் அவ்விருதை 2004-ஆம் ஆண்டு பேரழகன் திரைப்படத்துக்காக பெற்றார். குஷி, தெனாலி, டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம், தூள், காக்க காக்க, சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு போன்ற பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தான் ஏற்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் முக பாவத்தையும், உடல் மொழியுடனும் நடிக்கும் ஜோ, மொழி திரைப்படத்தில் தன் நடிப்புத் திறனால் நெகிழச் செய்துவிட்டவர். 

நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் ஜோவின் ரீ என்ட்ரி நிகழ்ந்தது. 2015-ல் 36 வயதினிலே படத்தில் மீண்டும் வெள்ளித் திரையில் தோன்றி மெருகேறிய நடிப்பால் ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றார். தற்போது பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் ரசிகர்களின் நினைவை மட்டும் அல்லாமல் பார்வையைவிட்டும் நீங்காமல் இருக்கிறார்.

நயன்தாரா

நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இரண்டாம் படமான சந்திரமுகியில் அப்பாவி துர்க்காவாக ரஜினிகாந்துடன் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின் வாய்ப்பு மழைகள் நயனின் காட்டில் இன்று வரை பொழிந்து கொண்டே இருக்கிறது. யாரடி நீ மோகினி, மாயா, சிவாஜி, ராஜா ராணி, தனி ஒருவன், நானும் ரெளடிதான் எனத் தொடர்கிறது இவரது வெற்றிப் படங்களின் வரிசை. 

ஸ்ரீராமராஜ்ஜியம் தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்த பிறகு சிறிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா,  ஆரம்பம் படத்தில் இருந்து மறுபிரவேசத்தை தொடங்கினார்.  நயன் நடித்த படங்கள் பலவும் வெற்றி பெற்றதால் ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என பாராட்டத் தொடங்கிவிட்டனர்.  தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் வெற்றி மகளாக வலம் வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com