முதல் மூன்று நாள்களில் நல்ல வசூலைப் பெற்றுள்ள ‘விக்ரம் வேதா’!

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடித்துள்ள விக்ரம் வேதா படத்தை...
முதல் மூன்று நாள்களில் நல்ல வசூலைப் பெற்றுள்ள ‘விக்ரம் வேதா’!

விஜய் சேதுபதி - மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படம் தமிழகமெங்கும் முதல் மூன்று நாள்களில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடித்துள்ள விக்ரம் வேதா படத்தை சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமைந்துள்ளது.

இந்நிலையில், விக்ரம் வேதா படம் தமிழகமெங்கும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. சென்னையில் முதல் நாளன்று இந்தப் படத்துக்கு ரூ. 50 லட்சம் வசூல் கிடைத்தது. சென்னையில் மட்டும் முதல் மூன்று நாள்களில் ரூ. 1.70 கோடியைப் பெற்றுள்ளது.

தமிழகமெங்கும் முதல் மூன்று நாள்களில் ரூ. 10 கோடி வசூலித்துள்ளது. முதல் நாளில் ரூ. 2 கோடி கிடைத்த நிலையில் அடுத்த நாள்களில் இதன் வசூல் மிகவும் அதிகமாகி தமிழ்த் திரையுலகுக்கு நம்பிக்கையை வரவழைத்துள்ளது.

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 1,200 திரையரங்குகள் சமீபத்தில் மூடப்பட்டன. நான்கு நாள்களாகத் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு போராட்டம் நடைபெற்றது. திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து விவாதிக்க குழு அமைக்கும் அரசின் முடிவை ஏற்றுக்கொண்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் இயங்க ஆரம்பித்தன.

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுக்கான கட்டணத்துடன், ஜிஎஸ்டி சேர்த்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சினிமா டிக்கெட் ரூ.100 மற்றும் அதற்கு மேல் இருந்தால் அதனுடன் 28 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படுகிறது. டிக்கெட் கட்டணம் ரூ.100 - க்கு குறைவாக இருந்தால், அத்துடன், 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது, இதுவரை ரூ.120 - க்கு இருந்த டிக்கெட் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.153.60, ரூ.100 க்கான டிக்கெட் ரூ.128. சினிமா டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நிலையில், அதனுடன் ஜிஎஸ்டி தவிர, வழக்கம்போல் கூடுதலாக ரூ.30 கட்டணம் செலுத்தவேண்டும். ஜிஎஸ்டி வரியை ரூ. 120 உடன் சேர்ப்பதால் மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன திரையரங்குகள்.

இந்தத் திடீர் விலையேற்றம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் அவர்களுக்கு அழுத்தம் தந்துகொண்டிருப்பதால் பலரும் திரைப்படங்களுக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டார்கள். இதனால் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக வார இறுதி நாள்களில் கூட திரையரங்குகளுக்குக் கூட்டம் வருவதில்லை. சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் வழக்கமான கூட்டத்தை விடவும் 40% குறைவாகவே பார்வையாளர்களின் வருகை இருந்தது. இதனால் தமிழ்த் திரையுலகினர் கலக்கத்தில் இருந்தார்கள். இந்த நிலை நீடித்தால் அது தமிழ்த் திரையுலகை வெகுவாகப் பாதிக்கும் என்கிற அச்சம் உருவானது.

ஆனால், இந்தப் பயத்தை விக்ரம் வேதா போக்கியுள்ளது. இதனால் பெரிய நடிகர்கள் நடித்த மற்றும் நல்ல விமரிசனங்களைப் பெற்ற படங்கள் டிக்கெட் விலையேற்றத்தால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்பது இந்தப் படத்தின் வெற்றி மூலம் நிரூபணமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com