நடிகர் சங்க கட்டடம்: தடை நீக்கம்

நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது...
நடிகர் சங்க கட்டடம்: தடை நீக்கம்

நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தியாகராயநகர் வித்யோதயா காலனியைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீரங்கன், ஆர்.அண்ணாமலை ஆகியோர் தாக்கல் செய்த மனு விவரம்:

சென்னை தியாகராயநகர் ஹபிபுல்லா சாலை, பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல பொதுப் பாதையை நடிகர் சங்கத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், வித்யோதயா காலனி குடியிருப்பு வாசிகள் பிரகாசம் சாலைக்குச் செல்வதற்குச் சுற்றிச் செல்ல நேரிடுகிறது. அந்தப் பொதுப்பாதையை அதிகாரிகள் சட்ட விரோதமாக நடிகர் சங்கத்திற்கு பட்டாப் பதிவும் செய்து கொடுத்துள்ளனர். முறைகேடாக 33 அடி சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருகின்றனர். எனவே, நடிகர் சங்கம் சார்பில் கட்டடம் கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) அதிகாரிகள் கட்டட அனுமதிக்கான ஆவணங்கள் மற்றும் வரைபடத்தைத் தாக்கல் செய்தனர். அவற்றைப் பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: நடிகர் சங்க கட்டடம் அமையவிருக்கும் இடத்தை ஆய்வு செய்வதற்கு ஆணையராக வழக்குரைஞர் கே.இளங்கோவை நியமிக்கிறோம். கிண்டி தாலுகாவுக்கு உள்பட்ட கணக்கெடுப்பு உதவி இயக்குநர், வட்டாட்சியர் ஆகியோர் ஆணையருக்கு இடத்தை ஆய்வு செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டும். அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும். மேலும் வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சியில் இருந்தும் தேவையான ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. நடிகர் சங்க இடத்தை ஆய்வு செய்து, மே 29-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளிக்கும் வரை, எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என நடிகர் சங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த ஆய்வுக்கு பின் கே.இளங்கோ தாக்கல் செய்த அறிக்கையில், 'சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு சிலநாள்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில், அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் நிலையம் இருந்தாக தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், அந்த இடத்தில் அஞ்சல் நிலையம், பொது சாலை இருந்ததா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, வழக்கில் தலைமை அஞ்சல் துறை தலைவரை எதிர்மனுதாரராக இணைத்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

பிறகு சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கை தயார் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்க கட்டுமானப் பணிகளைத் தொடர 2 வாரத்துக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com