நான் கான்வென்ட்ல படிச்சேன்... இல்லேன்னா ஹாசன் ஃபேமிலியில் என்னைத் தூக்கி மூலையில் சொருகி இருப்பார்கள்!

‘நான் கான்வென்ட்ல படிச்சேன்ம்மா... எங்க பாட்டிக்கு நன்றி சொல்லனும், நாலாம் கிளாஸ் படிச்சு முடிச்ச உடனே மறுபடியும் ஒன்னாங்கிளாஸ்ல கொண்டு போய் சேர்த்தாங்க... அப்போ அவங்களை சபிப்பேன்..
நான் கான்வென்ட்ல படிச்சேன்... இல்லேன்னா ஹாசன் ஃபேமிலியில் என்னைத் தூக்கி மூலையில் சொருகி இருப்பார்கள்!

இந்த வார்த்தைகளைப் பெருமிதம் பொங்கச் சொன்னது நடிகை சுஹாசினியின் தாயார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வீக் என்ட் வித் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் தான் அப்படியொரு காட்சி காணக் கிடைத்தது. அவரைப் பார்க்கும் போது கற்றுத் தெளிந்த ஒரு நிதானம் அவரது தோற்றத்திலேயே தெரிந்தது. அந்த நிகழ்ச்சியில் சுஹாசினி தனது தாயாரைக் குறித்த தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் தெரியாது அவரது அம்மா, அவரது இருக்கைக்குப் பின்னிருந்து அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பது.

அவர் தனது அம்மாவைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட விஷயங்களைக் கேட்கையில் அவரவர்க்கு அவரவர் அம்மாக்கள் ஞாபகம் வரலாம்.... அப்படி அவர் என்ன பேசினார் என்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்;

எங்கள் அப்பா சொல்வார், அம்மா ஒரு ஹவுஸ் வைஃப் ஆக இல்லாமலிருந்தால் இந்நேரம் ஒரு கலெக்டராகியிருப்பார் என்று, என் அம்மாவுக்கு 16 அல்லது 17 வயது இருக்கும் போது அவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அந்தக் கட்டுரைக்குப் பரிசாக அவர் லண்டன் செல்வதற்கு டிக்கெட் கிடைத்தது. அந்தச் சமயத்தில் தான் என் அப்பா, அம்மாவைப் பெண் பார்க்கச் சென்றிருந்தார். அதனால் தான் என் அம்மா லண்டன் செல்லாமல், எங்கள் குடும்பத்திற்குள் வந்தார். அது அவரது மிகப்பெரிய தியாகம்; இந்த மாதிரி தியாகமெல்லாம் யாராலும் செய்ய முடியாது. சில சமயங்களில் நான் நினைத்துப் பார்ப்பேன்... இப்படி தியாகம் செய்பவர்களுக்குத் தான் வாழ்க்கையில் மறுபடி, மறுபடி கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும், என்னை மாதிரி பொல்லாதவர்களுக்கு வாழ்க்கையில் இன்பம் மட்டுமே கிடைக்குமோ என்று... என் அம்மா, அக்காவெல்லாம் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார்கள், நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார்கள்... இனிமேல் அவர்கள் வாழ்க்கையில் கஷ்டமே இருக்கக் கூடாது., அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு என் அப்பா என்றால் உயிர்... ஒரு கஷ்டமென்றால் நான் சாய்ந்து கொள்வது என் அப்பாவின் மடியில் தான். அவரைப் போன்ற ஒரு மனிதரைப் பார்ப்பது அரிது. 

ஆனால் நான் என்ன செய்தேன் தெரியுமா? எனக்கொரு 11 வயதிருக்கும் போது என் அப்பாவின் முதுகை உடைத்து விட்டேன். அது ஒரு எதிர்பாராத நிகழ்வு தான்... அப்பா குளிக்கப் போகும் போது, அப்போதே நான் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்று கராத்தே எல்லாம் சொல்லிக் கொடுப்பார். அப்படி சொல்லிக் கொடுத்ததை செய்து காட்டும் படி அவர் சொல்லி, நான் செய்ததில் தான் தவறுதலாக அடி இடம் மாறி அவரது முதுகு உடைந்து விட்டது... அப்பா அப்படியே என் கண் முன்னால் கீழே விழுந்து கிடந்தார்.. உடனே அம்மா ஓடி வந்து ஐயோ...என் கணவரை கொன்று விட்டாய்... என்று கத்தினார். என் தங்கை, அக்கா எல்லோரும் அழுகிறார்கள்... கீழே விழுந்த என் அப்பா கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்கு எழவே இல்லை. அந்த நிலையிலும் அப்பா சொன்னார்; என் முதுகெழும்பில் எங்கோ உடைந்திருக்கிறது... இந்த பரமக்குடியில் அதற்கெல்லாம் போதுமான ட்ரீட்மெண்ட் கிடைக்காது... ஆம்புலன்ஸ் வரச்சொல்லி என்னை மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என்றார். அதற்குள் அவரது டைஜெஸ்டிவ் சிஸ்டம் எல்லாம் வேலை செய்யாததில் வயிறு உப்பிப் போய் அவரை ஸ்ட்ரெக்சரில் தூக்கிக் கொண்டு சென்றார்கள். அப்போது 40 வயதிருக்கும் அப்பாவுக்கு... இத்தனையையும் பார்த்துக் கொண்டு உலகமே தெரியாமல் நான் உட்கார்ந்திருக்கிறேன். அப்போது என் அம்மா சொன்னார்... என் கணவரை நீ கொன்று விட்டாய்... என் கண் முன்னால் நிற்காதே என்று, இப்போது எனக்குப் புரிகிறது அவர்கள் ஏன் அப்போது அப்படிச் சொன்னார் என்று; ஆனால் அப்போது புரியவில்லை. 

ஹாஸ்பிடலில் கட்டுகளுடன் படுத்திருக்கும் அப்பாவைப் பார்த்ததும்; அம்மா என்னை இன்னும் என்னவெல்லாம் திட்டப் போகிறாரோ என்று பயந்து போய் நின்று கொண்டிருந்தேன் நான். அப்போது என் பாட்டி சொன்னார்; நீ இனிமேல் ஊருக்குப் போக வேண்டாம், மதுரையிலும் இருக்க வேண்டாம், என்னோடு வந்து விடு என்றார். கமல் வந்தார்,  சென்னையிலிருந்து ஊருக்கு வந்து என்னை கேபிஎன் பஸ்ஸில் சென்னைக்கு அழைத்து வந்தார். என் அப்பாவின் முதுகை உடைத்ததற்கு பனிஷ்மெண்ட்டாக நான் சென்னைக்கு வந்தேன். ஆனால் இதை விட வாழ்க்கையில் பெட்டர் பனிஷ்மென்ட் கிடைக்கவே கிடைக்காது. இந்த விஷயத்துக்காக நான் அம்மாவிடம் இதுவரை எப்போதுமே ஸாரி கேட்டுக் கொண்டதே இல்லை. என்று மிக நெகிழ்ச்சியாக சுஹாசினி பேசிக் கொண்டே இருந்தார். 

அப்போது அந்த நிகழ்ச்சியின் ஹோஸ்டாக இருந்த அர்ச்சனா; நீங்கள் அதற்காக இதுவரை ஸாரி சொல்லவே இல்லை என்கிறீர்கள்.. ஆனால் இது தான் நீங்கள் ஸாரி சொல்லியாக வேண்டிய தருணமாக இருக்குமோ என்று கேட்டவாறு சுஹாசினி அமர்ந்திருந்த சுழல் இருக்கையைடப் பின்புறமாகத் திருப்பவே.. அங்கே சுஹாசினியின் பாசமான மன்னி நின்றிருந்தார். (ஹாசன் குடும்பத்தார் அனைவருக்குமே அவர் மன்னி தானாம்) அம்மாவை சுஹாசினி மன்னி என்று தான் அழைக்கிறார். அம்மாவை அங்கே கண்டதும் சுஹாசினி ஆனந்த அதிர்ச்சியில் நெகிழ்ந்து போய்; 

அண்ணாவோட முதுகை நான் உடைத்து விட்டேன்...அதற்கு இதுவரை ஸாரி கூட கேட்டதில்லை... என்னை மன்னித்து விடுங்கள் என்றார். அம்மாவுக்குத் தெரியாதா தன் மகளை?! அவர் உடனே சிரித்தவாறு தன் மகளைத் தழுவிக்கொண்டு; ‘எல்லாம் கேட்டுக் கொண்டே தான் இருந்தேன்... யூ ஆர் எ வெரிகுட் ஆக்ட்ரஸ்’ என்றார். உடனே அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது. அதற்குப் பின் சுஹாசினியின் தாயார் தன் மகளைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டார். கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகளை தனியாக செல்லம் கொஞ்ச முடியாது, எல்லாம் மனதிற்குள் தான் கொஞ்சிக் கொள்ள வேண்டும். நானும் என் குழந்தைகளை அப்படி எல்லாம் கொஞ்சியது இல்லை, ஆனால் பலமுறை என் மகளது செயல்களைப் பார்த்து மனதிற்குள் மிக மெச்சிக் கொண்டிருக்கிறேன். இப்போது நினைத்துப் பார்க்கும் போது; இன்னும் கொஞ்சம் என் மகளின் மீது பாசம் காட்டியிருக்கலாமே, இன்னும் கொஞ்சம் அரவணைத்திருக்கலாமே என்று தோன்றுகிறது. அதற்காக இப்போது வருந்துகிறேன். எனக்கு 82 வயது தான் ஆகிறது.. இனிமேல் என் குழந்தைகளின் மீது இன்னும் அதிகமாக அன்பாக இருக்கப் பார்க்கிறேன், என்று கூறி தன் மகளை அணைத்து முத்தமிட்டுக் கொஞ்சினார். அந்தத் தாயின் அந்தச் செயல் அங்கிருந்த சூழலை மேலும் இனிமையாக்கியது. அப்போது நீங்கள் உங்கள் அம்மாவிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று சுஹாசினியிடம் கேட்டுக் கொள்ள; சுஹாசினி தன் அம்மாவிடம்;

‘அம்மா; அப்போது நீங்கள் அம்மா, நான் மகள் என்றிருந்த நிலை மாறி, இப்போது நான் அம்மா, நீங்கள் என் மகள் எனும் நிலையாகி விட்டது. சமீப காலங்களில் நான் உங்களை மிகவும் கன்ட்ரோல் செய்கிறேன், எல்லாமே உங்கள் நன்மைக்காகத் தான்.. எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதைத் தடுக்கத்தான், இல்லாவிட்டால் இந்த வயதிலும் நீங்கள் பி.டி.உஷா போல ஒலிம்பிக்கில் ஓடி தங்கப் பதக்கம் கூட வாங்கி வந்து விடுவீர்கள் அந்த வேகத்தை அடக்கத்தான் நான் உங்களை கன்ட்ரோல் செய்கிறேன்... அதற்காக ஸாரி’ என்றார். 

அதற்கு சுஹாசினியின் அம்மா ஆங்கிலத்தில் பதில் அளித்தார். அவரது அழகான ஆங்கில உச்சரிப்பைக் கண்டு வியந்து போன ஹோஸ்ட் அர்ச்சனா; அம்மா வயதை எல்லாம் விடுங்கள்... சக பெண்மணியாக இந்த மேடையில் உங்கள் அருகே நிற்கும் போது, உங்களது இந்த அழகான ஆங்கிலம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது, எங்கிருந்து வந்தது இத்தனை அருமையான ஆங்கிலம் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு சுஹாசினியின் அம்மா அளித்த பதில் தான் மேலே உள்ள தலைப்பு... 

‘நான் கான்வென்ட்ல படிச்சேன்ம்மா... எங்க பாட்டிக்கு நன்றி சொல்லனும், நாலாம் கிளாஸ் படிச்சு முடிச்ச உடனே மறுபடியும் ஒன்னாங்கிளாஸ்ல கொண்டு போய் சேர்த்தாங்க... அப்போ அவங்களை சபிப்பேன்.. ஆனா இப்போ அது இல்லைன்னா... இந்த ஹாசன் ஃபேமிலியில் என்னைத் தூக்கி மூலையில சொருகி இருப்பாங்க.. அது ஒன்னே ஒன்னு தான் என்னோட சிறப்பு.. ஏன்னா அவங்க எல்லாருமே ரொம்ப பிரில்லியண்ட்.. .அவங்க கிட்ட இருந்து நான் நிறையக் கத்துக்கிட்டேன்’. என்று பெருமிதமாகச் சொன்னார்.

Image & Source courtsy: zee tamil channel.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com