பர்ஸைப் பதம் பார்க்கும் ஜிஎஸ்டி வரி: டிக்கெட் கட்டண உயர்வு குறித்து இயக்குநர் வசந்த பாலன்!

பாகுபலிக்குப் பிறகு திரையரங்குக்குச் சென்று படம் பார்க்க தோன்றவில்லை...
பர்ஸைப் பதம் பார்க்கும் ஜிஎஸ்டி வரி: டிக்கெட் கட்டண உயர்வு குறித்து இயக்குநர் வசந்த பாலன்!

விஜய் சேதுபதி - மாதவன் இணைந்து புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடித்துள்ள விக்ரம் வேதா படத்தை சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வரலட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இசை - சாம் சி.எஸ். ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் இப்படம் அமைந்துள்ளது. இந்தப் படம் தமிழகமெங்கும் நல்ல வசூலைப் பெற்றுவருகிறது. 

இந்நிலையில் விக்ரம் வேதா படம் பார்த்த இயக்குநர் வசந்த பாலன், அப்படத்தைப் பாராட்டி ஃபேஸ்புக்கில் எழுதியதாவது: 

பாகுபலிக்குப் பிறகு திரையரங்குக்குச் சென்று படம் பார்க்க தோன்றவில்லை. ஜிஎஸ்டி அது இதுன்னு பயம் பர்ஸைப் பதம் பார்த்து விடுவார்கள் என்று. எனினும் விக்ரம் வேதா நன்றாக உள்ளது, பார்க்கலாம் என்று உதவியாளர்கள் உசுப்பேத்த ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் 40 ருபாய் டிக்கெட் இரண்டு இன்டெர்நெட்டில் புக் பண்ணியபோது 176.64 ருவாய் ஆனது.

வழக்கமான ரவுடி போலீஸ் கதையை தன் திரைக்கதையால் புஷ்கர் காயத்ரி கையாண்டவிதம் மிக அருமை. விஜய் சேதுபதி அறிமுக காட்சியில் திரையரங்கம் அதிர்ந்து அடங்க நேரமானது. இயல்பான நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்கள் மனதில் விஜய் சேதுபதி மிகப்பெரிய உயரத்தில் உள்ளார் என்பதை தியேட்டரில் இடைவிடாது எழுந்த கைதட்டல்கள் புரிய வைத்தது.

வாழ்த்துக்கள் புஷ்கர் காயத்ரி. வாழ்த்துக்கள் தயாரிப்பாளர் சசிகாந்த் அவர்களே. உங்களின் கதை தேர்வு ஒய் நாட் கம்பெனியின் தரத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. உங்களின் தனிப்பட்ட அழகான கதை ரசனையை நான் அறிவேன். வெற்றிகள் குவியட்டும். புதன் கிழமை மாலைக்காட்சி ஏவிஎம் ராஜேஸ்வரியில் ஹவுஸ்புல். யார்கைவிட்டாலும் நல்லகதைகள் தான் தமிழ் சினிமாவை காப்பாற்றும் என்று எழுதியுள்ளார்.

ஜிஎஸ்ட் வரி காரணமாக டிக்கெட் கட்டணம் உயர்ந்தது குறித்து ரசிகர்கள் கவலைப்படுகிற சமயத்தில் பிரபல இயக்குநர் ஒருவரும் அதுகுறித்த கவலையுடன், பாகுபலிக்கு பிறகு திரையரங்குக்குச் சென்று படம் பார்க்கத் தோன்றவில்லை. ஜிஎஸ்டி அது இதுன்னு பயம் பர்ஸைப் பதம் பார்த்து விடுவார்கள் என்று எழுதியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com