ஜூலைக்கு முன்பு வெளியாகத் துடிக்கும் படங்கள்; நாளை 7 படங்கள் வெளியீடு!

ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு பல மாற்றங்கள் தமிழ்த் திரையுலகில் வரவுள்ளன.
ஜூலைக்கு முன்பு வெளியாகத் துடிக்கும் படங்கள்; நாளை 7 படங்கள் வெளியீடு!

சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சுருக்கமே ஜிஎஸ்டி. சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை நடைமுறையில் உள்ள மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் உள்ளூர் வரிகள் ஆகிய பல்வேறு வரிகளுக்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிப்பதற்காக, சரக்கு-சேவை வரிச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள கல்வி, மருத்துவம், புனிதச் சுற்றுலா போன்ற சேவைகளுக்கு, புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பிலிருந்தும் தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும். வரி விதிப்புக்குட்படாத 17 சேவைகள், ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்தும் விலக்கு பெறும் சேவைகளுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழ்த் திரையுலகுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை இந்த ஜிஎஸ்டியால் ரத்து செய்யப்படவுள்ளது. தமிழில் தலைப்பு, யு சான்றிதழ் உள்ளிட்ட அரசின் விதிமுறைகளைப் பின்பற்றும் தமிழ்ப் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு பல மாற்றங்கள் தமிழ்த் திரையுலகில் வரவுள்ளன.

தமிழ்த் திரையுலகம் இனி அரசுக்கு கேளிக்கை வரியாக 12 முதல் 18 சதவிகிதம் வரி கட்டினால் போதும். இதற்கு முன்பு சென்னை, கோயம்புத்தூருக்கு 30 சதவிகிதமும் இதர பகுதிகளுக்கு 15-20 சதவிகிதம் என நடைமுறையில் இருந்தன. அது முற்றிலும் சீராக மாறப்போகிறது. மேலும் ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்படும்போது தமிழ்த் திரையுலகில் வரிவிலக்கு என்கிற நடைமுறை முற்றிலும் ரத்தாகப் போகிறது. இதனால் தமிழ்ப் படங்களுக்குக் கட்டாயம் தமிழில் தலைப்பு வைக்கவேண்டும் என்கிற நிலைமை இனி இல்லை. கடைசி நேரத்தில் வரிவிலக்குக்காக ஆங்கிலத் தலைப்பைத் தமிழுக்கு மாற்றவும் அவசியம் இருக்காது (உதாரணம் பவர் பாண்டி, ப.பாண்டியாக மாறியது). இதுபோன்று, புதிய வரிவிதிப்பால், தமிழ்த் திரையுலகின் வணிகம் பல மாற்றங்களைச் சந்திக்கவுள்ளது.

இதனால் ஜூலைக்கு முன்பு வரிச்சலுகை பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற முனைப்பில் இந்த மாதம் குறைந்தது 20 படங்களாவது வெளிவரவுள்ளன.

இதன் அடிப்படையில் நாளை ஏழு தமிழ்ப்படங்கள் வெளிவரவுள்ளன. ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு இயக்குநரின் காதல் டைரி, விளையாட்டு ஆரம்பம், போங்கு, 7 நாள்கள், முன்னோடி, டியூப்லைட் என ஏழு படங்கள் நாளை வெளிவரவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com