மணி ரத்னம், அவரது திரைப்படங்கள் மற்றும் நான்

எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்த்திருக்கலாம். எல்லா படங்களும் நம் நினைவில் நிற்கும்
மணி ரத்னம், அவரது திரைப்படங்கள் மற்றும் நான்

எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்த்திருக்கலாம். எல்லா படங்களும் நம் நினைவில் நிற்கும் என்று சொல்ல முடியாது. சில திரைப்படங்கள் மோசமான அனுபவங்களைக் கூட தந்துவிடும். ஆனால் நம் நினைவை விட்டு என்றென்றும் நீங்காத, நமக்கே நமக்கான பிரத்யேகமான படங்கள் சில உண்டு. அந்தப் படத்திலிருந்து ஏதோ ஒரு காட்சியை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தாலோ, எங்கேனும் அதிலிருந்து ஒரு பாடலைக் கேட்டுவிட்டாலோ அந்த நாள் முழுவதும் அத்திரைப்படம் நம் மனத்தின் மேற்பரப்புக்கு வந்துவிடும். அவ்வகையில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள் பல இருந்தாலும் தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளமான இயக்குநர் மணி ரத்னம் இயக்கியுள்ள திரைப்படங்கள் பல என் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவை. மணி ரத்னம் மற்றும் அவருடைய படங்களின் மீதான ஈடுபாடுதான் என்னை அவருடைய அலுவலகத்தில்  சில ஆண்டுகள் பணி புரிய வைத்தது என்று நினைக்கிறேன்.

மெளன ராகம், அஞ்சலி, நாயகன், தளபதி, ரோஜா, பாம்பே, இருவர், அலைபாயுதே, உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு, ஓகே கண்மணி ஆகிய படங்கள் எனக்கு மிகவும் பிடித்த அவரது படங்கள். அதிலும் மெளன ராகம், நாயகன், தளபதி, இருவர், அலைபாயுதே இந்த ஐந்து படங்களையும் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கு எனக்கே தெரியாது. ஒவ்வொரு படமும் அது வெளிவந்த காலகட்டத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு உணர்வுகளை அருமையாகக் காட்சிப்படுத்தி, நம் கண் முன்னே நிறுத்தியிருப்பார் மணிரத்னம். அவர் திரையில் நிகழ்த்திய மேஜிக் என் போன்று எண்பதுகளில் வளர்ந்த பதின் பருவத்தினரின் கனவுகளுடன் ஒத்திசைவாய் இருந்தது.  34 வருட திரையுலக வாழ்க்கையில் மணி ரத்னம் இந்தியத் திரையில் மிக முக்கியமான ஒரு தனித்துவமான இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரது வெற்றிக்குக் காரணம் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகரும் திரைக்கதை, அழகியல் மற்றும் ஆழமான பாத்திரப் படைப்புகள் ஆகியவைதான். போலவே மணி ரத்னத்தின் மிகப் பெரிய பலம் அவர் தேர்ந்தெடுக்கும் சக படைப்பாளிகள், டெக்னீஷியன்கள்.

நடிகர்களின் தேர்வில் அவர் மிகக் கவனமாக இருப்பார். நாயகன் திரைப்படத்தை கமலைத் தவிர வேறு யாரையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவர் நடிகர்களிடம் கதையை விளக்கமாகச் சொல்லி, தனக்கு என்ன தேவை என்பதையும் சோல்லிவிடுவார். அதன் பின் திரையில் அந்த நடிகரை மேலும் மெருகேற்றுவார். மற்ற படங்களில் தோன்றியிருப்பதை விட நடிகர் நடிகைகள் மணி ரத்னத்தின் திரையில் முற்றிலும் வேறான ஒருவராகவே காட்சி தருவார்கள். உதாரணத்திற்கு மெளன ராகம் திரைப்படத்தில் மோகன் கதாபாத்திரமும் சரி கார்த்திக்கும் சரி. இரண்டு முரண்பட்ட கதாபாத்திரங்கள். கார்த்திக் துள்ளல் இளைஞனாக வருவார். மோகன் அமைதியானவராகவும் அழுத்தமானவருமாக நடித்திருப்பார். இது ஆல்டர் ஈகோ கதாபாத்திர வார்ப்புகள்.

மணி ரத்னத்தின் மிகப் பெரிய வெற்றி அவர் கதாபாத்திரங்களை மிகவும் ஸ்திரமாகத் திரைப்படுத்திவிடுவார். மிகக் குறைந்த வசனங்களாக இருந்தாலும் அவை தீவிரத்தன்மையுடன் இருக்கும். இத்திரைப்படத்தில் ரேவதி மோகனிடம் நீங்க தொட்டா மேல கம்பளிப் பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு என்ற ஒற்றை வசனம் படம் வெளிவந்து 32 வருடங்கள் ஆன நிலையிலும் ரசிகர்களின் மனத்திலிருந்து நீங்குவதில்லை. இளையராஜா இந்தப் படத்துக்கு செய்திருக்கும் பங்களிப்பை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. நம் மனங்களை உருக்கிப் பிசைந்து உன்னத பித்து நிலைக்கு இட்டுச் சென்றுவிடும் மற்றொரு மாயக்காரர் அவர். இன்று பலரும் பிஜிஎம் பற்றி பேசக் காரணமான முதல் திரைப்படம் அதுவே.

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ மற்றும் நிலாவே வா ஆகிய பாடல்கள் மறக்க முடியாத திரை அனுபவங்களை ரசிகர்களுக்கு அள்ளித் தந்தது. நாயகன், தளபதி, இருவர் ஆகிய படங்களும் ஒவ்வொரு வகையில் என் தனிப்பட்ட ரசனையை வளர்த்தெடுத்தது. நாயகனை காட்ஃபாதரின் தழுவல் என்று பலரும் விமரிசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் நான் என்னுடைய டைரியில் எழுதியிருந்தத ஒரு வரி காட்ஃபாதரைப் பார்க்காதவர்கள் கூட நாயகனைப்  போல் ஒரு படம் எடுத்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். It's totally a Mani Ratnam Movie என்று எழுதியிருந்தேன்.

ஏப்ரல் 14 ஆம் தேதி 2000 என்னால் மறக்க முடியாத ஒரு நாள். அன்று அலைபாயுதே வெளிவந்த தினம். மில்லினியம் வருடத்தில் வெளிவந்த அந்தப் படம் அந்த வருடத்தில் வெளிவந்திருந்த மற்ற எல்லாத் திரைப்படங்களை விடவும் இளமைத் துள்ளலுடன் திரையில் ஒரு மாயஜாலத்தை உருவாக்கியிருந்தது. இத்தனை அழகாக, இத்தனை புத்துணர்வுடன் திரையை வண்ணங்களால் ஒளிரச் செய்த ஒரு படம் அலைபாயுதே எனலாம். காதல், காமம், மரணத்தையொத்த ஒரு பிரிவு என்று மெல்லிய இழையில் கதை அதனுடன் இசை, அழகியல் ஆகியவற்றைக் கோர்த்து ரசிகர்களுக்கு மறக்கவியலாத ஓர் திரை விருந்தாக அலைபாயுதே இருந்தது என்றால் மிகையில்லை. இந்தப் படம் என்னை மிகவும் வசீகரித்துவிட்டதால் அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் என தொடர்ந்து மூன்று நாட்கள் வெவ்வேறு திரையரங்குக்குச் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ரசித்தேன். இன்றும் கூட ஜெயா டிவியில்  இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டால் என்னுடைய தோழிகள் எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவார்கள். என்றென்றும் இருக்கக் கூடிய விருப்பப்பட்டியலில் இப்படம் எனக்கே எனக்காக பிரத்யேகமாக இருந்து வருகிறது.

அலைபாயுதே எனக்கு மிகவும் பிடித்திருப்பதன் காரணம் என்ன என்று என் உளவியலையும் யோசித்துப் பார்க்கையில், அத்திரைப்படத்தின் நாயகியின் பாத்திரப்படைப்பு எனக்கு மிகவும் தெரிந்த ஒரு பெண்ணாக இருந்தது தெளிவாகியது. மணி ரத்னத்தின் பெரும்பாலான திரைப்படங்களில் அவரது நாயகிகள் சுதந்திரமாக வளர்ந்த பெண்கள், சுயத்தை கண்டு அடையும் பெண்கள். அவர்களின் விருப்பு வெறுப்பு அவர்களைச் சார்ந்தே இருந்தது. எவ்வித கட்டுப்பாட்டுகளுக்குள்ளும் வரையறைக்குள்ளும் சிக்காதவர்கள். காதல் எனும் மென் உணர்வு மட்டுமே அவர்களைப் புரட்டிப் போடக் கூடியதாக இருந்தது. தொடர்ந்து திரையில் இப்பெண்களைப் பார்த்து வளர்ந்த நானும் அதே போலொரு பெண்ணாக வளர்ந்திருப்பதை அலைபாயுதே திரைப்படத்தில் பார்க்கையில் ஆச்சரியப்பட்டேன். சில புதினங்களைப் படிக்கும் போது அக்கதையின் பாத்திரப் படைப்பு நம்மைப் போன்றே இருப்பதை தொடர்ந்து படிக்கையில் உணர்வோம். அதே போல திரையிலும் நிகழக் காண்கையில் பெரும் திகைப்பு ஏற்பட்டு விடும். அலைபாயுதேவில் ஷாலினி ஏற்று நடித்த சக்தி எனக்கு மிகவும் தெரிந்தவள். என் போன்றவள். சிலசமயம் கண்ணாடியில் தெரியும் நானே கூட அவளாகத் தோன்றியிருக்கிறேன். இப்படி எனக்கேயான தனிப்பட்ட ஒரு திரைக்கதையை மணி ரத்னம் என்பவர் எழுதியிருக்கிறார் என்று நினைப்பின் ஆழம் அவரை சந்திக்கவும் அவரிடம் பணி புரியவும் வைத்துவிட்டது.

உண்மையில் எனக்கு நினைவுகள் தோன்றும் காலகட்டத்தில் தான் மணி ரத்னத்தின் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். மெளன ராகம் முதல் அலைபாயுதே வரை அனைத்துப் படங்களையும் நான் திரையரங்குகளில் படம் வெளிவந்த அன்றே முதல் காட்சி பார்த்துவிடும் பழக்கம் கொண்டிருந்தேன். மெட்ராஸ் டாக்கீஸில் பணி புரிந்த காலகட்டத்தில் வெளிவந்த ஆய்த எழுத்து, குரு, ராவணா ஆகிய நான்கு படங்களும் படம் வெளிவருவதற்குச் சில தினங்கள் முன்பே பார்த்துவிட்ட அனுபவம் மறக்க முடியாதது.  

மணி ரத்னம் திரைப்படங்களைப் பற்றி பலருக்கு பலவிதமான விமரிசனங்கள் இருந்த போதிலும் என்னைப் பொருத்தவரைக்கும் அடிசறுக்கினால் யானை என்ன யானை இல்லாமலாகிவிடுமா என்றே நினைப்பேன். ஒரு தடவை என் முகநூல் பக்கத்தில், ‘ஓகே கண்மணி’ படத்தைப் பற்றி நான் எழுதிய பதிவுக்கு எதிர் விமரிசனமாக பத்திரிகையாளர் ஞானி, ’நீங்கள் உங்கள் பழைய குருவுக்கான விசுவாசத்தை, அவரது அலுவலகத்தை விட்டு வெளியேறிய இவ்வளவு காலத்துக்குப் பிறகும் காண்பித்துக் கொண்டிருக்க வேண்டாம்’ என்று எழுதியிருந்தார். அதற்குப் பதிலாக அவர் பழைய குரு இல்லை, என்றென்றும் அவர் தான் குரு. மானசீகமாக அவரிடம் நான் கற்றவை மற்றும் பெற்றவை ஏராளம்.

நேர்ப் பழக்கத்தில் மணி ரத்னம் மிகவும் எளிமையானவர். என்னைப்பொருத்தவரை அவர் எனக்கு ஒரு காட்ஃபாதர். அழகியலையும் ரசனையும் ஊட்டி வளர்த்த ஒரு ஞானத் தகப்பன். அவருடன் அலுவலக நிமித்தமாக பேசக் கூடிய சிற்சில சந்தர்ப்பங்களில் அவர் எதிரே நிற்கும் போது சேரைக் காண்பித்து உட்காரச் சொல்வார். உட்கார மறுத்து நின்று கொண்டிருந்தால் முறைத்தபடி ப்ளீஸ் என்பார். அதன் பின் மந்திரத்துக்கு கட்டுண்டது போல் எதிரே உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேட்பேன். ஒரு ஒரு தருணத்தில் மட்டும் சற்று நீண்ட உரையாடல் அவருடன் வாய்க்கப் பெற்றது. அது என் நினைவுக் கிடங்குக்குள் பத்திரமாக சேமிக்கப்பட்டு எப்போது வேண்டுமோ அப்போது மீள் உருவாக்கம் செய்து கொள்ளும்.

நான் நீண்ட நாள் விடுப்பில் சென்றுவிட்டு பணிக்கு திரும்பும் போதெல்லாம் புதிய ஒருவரைப் பார்ப்பது போல பார்த்து, புருவத்தை உயர்த்தி எப்படி இருக்கிறாய் என்று சிறு புன்னகையுடன் கேட்பார். என்னுடைய கணிப்பில் அவருக்கு சிலர் பிடித்துவிட்டால் அவர்களை அவர் எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார். அவருடைய குட் புக்கில் நானும் இருந்திருக்கிறேன் என்பதை அறிந்து மகிழ்வேன். நான் ஆங்கிலத்தில் பேசினால் ஆங்கிலத்தில் பதிலும், தமிழில் பேசினால் தமிழிலும் பதில் சொல்லுவார். போலி மரியாதையை விரும்பாதவர்.

மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் எனக்கான சுதந்திரம் இருந்ததற்குக் காரணம் யவரையும் அதிகாரத்துக்கு உட்படுத்தாமல் ஒரு குடும்பமாகப் பழகியவர்கள் மணி ரத்னம் மற்றும் சுஹாசினியும். ஒவ்வொரு வருடம் தீபாவளி தினத்தன்று தங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் விருந்து கொடுப்பார்கள். மணி ரத்னம் பரிமாறிய ஒரு பாயாச தினம் அவ்வருட தீபாவளியை எனக்கு மேலும் ஒளியூட்டியது. படங்கள் இல்லாத சமயங்களில் ஏதேனும் புத்தகத்தை எடுத்து மேஜையின் மீது வைத்துப் படித்துக் கொண்டிருந்தாலும் அவர் எதுவும் சொல்ல மாட்டார். அலுவலக நேரத்தை எனது நேரமாக்கிக் கொண்டிருந்தது சாத்தியப்பட்டது டாக்கீஸில் மட்டுமே. தவிர மணி சார் யாரையும் தொந்திரவு படுத்தாதவர். எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அலுவலகத்துக்கு அமைதியாக வந்துவிட்டு அதே அமைதியுடன் கிளம்பிச் செல்வார்.

அவர் பார்த்து ரசித்த திரைப்படங்களும், சினிமாவைப் பற்றி அவர் படித்த புத்தகமும் அவரை ஒரு திரை கலைஞனாக மாற்றியிருந்ததை அறிந்தேன். அந்த அலுவலகத்தில் அவர் எழுதிய தளபதி, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல திரைக்கதைகளைப் படிக்க முடிந்ததும், ஒரு பட உருவாக்கத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் பங்கேற்க முடிந்ததும் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறுகள். ‘ உமா பார்வதி’ என என்னுடைய பெயர் வெள்ளித்திரையில் முதன்முதலில் உருண்டோடியதைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்தேன். ஒரு காலகட்டத்தில் நான் ரசித்து மகிழ்ந்த மணி ரத்னத்தின் அதே திரைப்படங்களை என் கரங்களால், அமெரிக்கா, துபாய், பெர்லின், ஸ்பெயின், எடின்பர்க் எனப்  பல்வேறு உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிய நாள்களும் மறக்க முடியாதவை. கேசவபெருமாள்புரத்தில் உள்ள அவர் அலுவலகத்தில் எத்தனை வெயில் பொழுதுகள், எத்தனை மழை நாட்கள், எத்தனை எத்தனை மகிழ்வுறும் தருணங்களைக் கடந்திருப்பேன் என்று நினைத்துப் பார்க்கும் போது நிறைவான ஒரு திரைப்படத்தைப் பார்த்த அனுபவம் இப்போதும் எனக்குக் கிடைக்கிறது.

அவரிடம் பணி புரிந்த காலகட்டத்தில் மணி ரத்னம் எனும் இயக்குனருக்கும் எனக்கும் இருக்கும் சில குண ஒற்றுமைகளை உணர்ந்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.  ஒத்த ரசனைகளையும் எண்ணி வியந்திருக்கிறேன். எனக்குப் பிடித்த இயக்குனர்களான குரு தத் மற்றும் அகிரோ குரோசோவாதான் அவருக்கும் ஆதர்சம் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுள்ளேன். அவரைப் போலவே மழை, ரயில், மனித உறவுகள் என்றென்றும் எனக்கு சலிக்காதவை. பல உலகத் திரைப்படங்களை அவர் மூலமே நான் கண்டடைந்தேன். க்ரிஸ்டப் கீஸ்லோவஸ்கி, மார்டின் ஸ்கார்ஸலி, ஃபெலினி போன்ற உலகத் திரை மேதகைகளை அவர் மூலமே தெரிந்து கொண்டேன். ஏற்கனவே ஒரு திரைப் பித்துப் பிடித்த நான் உலக சினிமா எனும் பெரிய கான்வாஸில் என் கனவினைக் காண முடிந்தது மணி ரத்னம் என்பவரால்தான். அவர் பார்த்துத் திருப்பிக் கொடுக்கும் டிவிடிகளின் பெயர்களை எழுதி வைத்து அத்திரைப்படங்களை நானும் பார்ப்பேன். என் திரை ரசனை அடுத்த கட்டத்துக்கு மட்டுமல்லாமல் மணி ரத்னம் எனும் கலைஞரில் மட்டும் சிக்கியிருந்த நான் விடுபட்டு வெளியேறிய தருணமும் அப்படித்தான் நிகழ்ந்தது.

என் வாழ்க்கையில் சிலரை நான் மிகவும் நேசித்து மதிப்பேன். அவர்கள் என் அருகாமையில் இருந்தாலும், அவர்களிடம் அதிகம் நெருங்க மாட்டேன். அவர்களை துளியும் நம் இருப்பு அல்லது பேச்சு தொந்திரவு படுத்திவிடக் கூடாது என்று நினைத்து தொலைவிலிருந்தே அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். எழுத வேண்டும், எழுத்தில் சிறக்க வேண்டும் என்ற என்னுடைய கனவினை அவரிடம் சொல்லி அந்த வேலையிலிருந்து வெளியேற முடிவு செய்தேன். Comfort zone-ல் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டாம் என்றும் நினைத்தேன். அச்சு ஊடகத்திலிருந்து அவர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த நான் மீண்டும் அச்சு ஊடகத்துக்கு திரும்ப வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  ‘உன் கனவினை நீ பின் தொடர்ந்து செல் உமா, நீ நினைத்தது நிச்சயம் நடக்கும்’ என்று வாழ்த்தி மணி சார் அனுப்பிய தினம் நினைவில் தேங்கியிருக்கிறது. கண்ணீர் மல்க மனம் துடித்தபடிதான் அவர் அலுவலகத்திலிருந்து வெளியேறினேன். ஆனால் இன்றளவும் நான் அங்கே இன்னும் இருப்பதாகத் தான் தோன்றும். இப்படியான ஒரு நெருக்கமான தொலைவு தான் அவர் மீதான என்னுடைய அன்பு.  இன்று ஜூன் 2, அவரது 61-வது பிறந்தநாள். முன்பெல்லாம் அவரிடம் நேரில் வாழ்த்துகளை சொல்வேன். இன்று காலை அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நன்றி உமா என்று அடுத்த நொடி பதில் வந்தது. அவருடைய நினைவில் ஒரு துளியில் என் பெயர் ஒளிந்திருப்பதை நினைத்து மகிழ்கிறேன்.

#HBD Mani Ratnam

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com