சங்கமித்ராவிலிருந்து விலகல்: விமரிசனங்களுக்கு ஷ்ருதி ஹாசன் பதில்!

எனக்குச் சம்மதம் என்றால் அந்தக் கலைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்...
சங்கமித்ராவிலிருந்து விலகல்: விமரிசனங்களுக்கு ஷ்ருதி ஹாசன் பதில்!

சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் "சங்கமித்ரா'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 24' படத்துக்காக தேசிய விருது வென்ற திரு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் உருவாகவுள்ளது. இப்படத்துக்கு இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பிரதான கதாநாயகியாக ஷ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தவிர்க்கமுடியாத காரணங்களால், சங்கமித்ரா படத்தில் ஷ்ருதி ஹாசனுடன் பணியாற்ற முடியவில்லை என்று அறிவித்துள்ளது. ஷ்ருதி ஹாசனைக் கொண்டு முதல் பார்வை சுவரொட்டிகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. படத்திலிருந்து விலகியது குறித்து ஷ்ருதி ஹாசன் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

சங்கமித்ரா படத்தில் பணியாற்ற வேண்டாம் என்கிற முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகப் பெரிய படம், 2 வருடங்கள் தேதிகள் ஒதுக்க வேண்டும் என எல்லாம் தெரிந்தே ஷ்ருதி ஹாசன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தின் மீதிருந்த ஆர்வம், அர்பணிப்பு தாண்டி இந்த முடிவை எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. முழுமையான திரைக்கதை வடிவம் அவருக்குத் தரப்படவில்லை. படப்பிடிப்புத் தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே விலகலுக்குக் காரணம். இப்போது அவர் நடித்துள்ள பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் உள்ளார். அடுத்ததாக சபாஷ் நாயுடு படத்துக்காகத் தயாராகி வருகிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ஷ்ருதி ஹாசன் மீது விமரிசனங்கள் எழுந்தன. கேன்ஸ் படவிழாவில் படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிறகு இதுபோல முடிவெடுத்தது சரியல்ல என்று ஷ்ருதி மீது விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு ஷ்ருதி அளித்த பேட்டியில் தன் மீதான விமரிசனங்களுக்குப் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

சங்கமித்ரா படத்துக்காக இரண்டு வருடங்கள் ஒதுக்க வேண்டும் என்பதற்காக நான் விலகவில்லை. முழுமனதுடன் நடிக்கவே சம்மதித்தேன். எனக்குச் சம்மதம் என்றால் அந்தக் கலைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். திரைக்கதையும், தேதிகள் குறித்த விவரங்களையும் கேட்பது அடிப்படையான விஷயம். இதை விமரிசித்தால் அப்படியே இருக்கட்டும். பிடிவாதம் பிடிப்பதாகச் சுலபமாகக் குற்றம் சுமத்தமுடியும். ஆனால் ஒரு தெளிவு இல்லாமல் ஒரு படத்தில் பணியாற்ற முடியாது என்று பதில் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com