ஜிஎஸ்டி வரிவிதிப்பு: கோலிவுட்டில் தொடரும் விவாதங்கள்!

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது...
ஜிஎஸ்டி வரிவிதிப்பு: கோலிவுட்டில் தொடரும் விவாதங்கள்!

நீங்கள் இதுவரை ஒரு டிக்கெட்டுக்குத் தோராயமாக ரூ. 120 வழங்கி வந்தீர்கள். அதில் ரூ. 1 பராமரிப்புக்கும் ரூ. 83.30 நுழைவுக் கட்டணமாகவும் மீதமுள்ள ரூ. 37.70 அரசுக்கு வரியாகவும் செல்லும். ஆனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு இந்த நிலை மாறப்போகிறது. 

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில், சினிமாவுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா டிக்கெட் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி விதிப்புக்கு திரைத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தமிழ் சினிமா எப்படிப் பார்க்கிறது?

தயாரிப்பாளர் தனஞ்செயன்: டிக்கெட் கட்டண விலையை அரசு நிர்ணயிக்கும் முன்பு, முதல் இரு வாரங்களுக்கு திரையரங்குகள் எவ்வளவு வேண்டுமானாலும் விலை வைத்துக்கொள்ளலாம். ஆந்திராவில் பாகுபலி படத்தின் ஆரம்ப நாள்களின் டிக்கெட்டுகள் ரூ. 300க்கு விற்கப்பட்டுள்ளன. பிவிஆர் திரையரங்கின் விளம்பரத்தில் 60 லட்சம் டிக்கெட்டுகள் மூலமாக ரூ. 140 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது. எனில், ஒரு டிக்கெட்டுக்குக் கட்டணமாக ரூ. 233 வருகிறது. 

சத்யம் சினிமாஸின் நிர்வாகி மாதவன்: டிக்கெட் விலை கூடுவதால் அது உணவுகளின் விற்பனையையும் பாதிக்கும். டிக்கெட் கட்டணம் மூலமாக 80 சதவிகித வருமானம் கிடைக்கிறது. பெப்சி குளிர்பானத்தை 40 சதவிகித வரியுடன் விற்கவேண்டியிருக்கும். வரிவிதிப்பில் பாப்கார்னைக் காணமுடியவில்லை. இதுகுறித்த தெளிவை எதிர்பார்க்கிறோம்.

*

பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்கிற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஆயிரம் திரையரங்குகள் மட்டும் உள்ள தமிழ்நாட்டில் இன்னும் அதிக திரையரங்குகள் தேவைப்படுகின்றன. குறைந்தபட்சம் 5000 திரையரங்குகள். ஆனால் ஒரு திரையரங்கை ஆரம்பிப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு.

திரையரங்கில் கட்டணம் உயரும் என்பதால் இணையத்திலும் டிவிடி வழியாகவும் படங்கள் பார்ப்பது இன்னும் அதிகமாகும். இதுகுறித்து தனஞ்செயன் கூறியதாவது: அம்மணி, மெட்ரோ ஆகிய படங்கள் வீடியோ ஆன் டிமாண்டில் அதிக வரவேற்பைப் பெற்றன. ஆனாலும் ஒரு படம் திரையரங்கில் வெளியானால் தான் இதர அம்சங்களும் எடுபடும். திரையரங்கில் வெளியாகாத படங்களைப் பார்க்க யார் ஆர்வம் செலுத்துவார்கள் என்று கேள்வி எழுப்புகிறார். 

ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்த கோலிவுட்டின் கருத்துகளும் விவாதங்களும் மேலும் தொடரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com