5 வயதுப் பையனுக்கு அம்மாவென்றால் ஓகே. ஆனால் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதிக்கெல்லாம் அம்மா என்றால்?!

சில நாட்களுக்கு முன்  பேய்ப் படத்தில் நடிக்க முடியுமா? என்று கேட்டு ஒரு இயக்குனர் வந்தார். சரிதான் என்னையும் பேய் ஆக்கப் போறாங்க சினிமால!” என்று சிரிக்கிறார் கஸ்தூரி.
5 வயதுப் பையனுக்கு அம்மாவென்றால் ஓகே. ஆனால் சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதிக்கெல்லாம் அம்மா என்றால்?!

கடந்த வாரம் ரஜினியின் அரசியல் நுழைவு பற்றி விமர்சித்த சூட்டோடு, ரஜினியை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து விட்டு வந்ததில் இருந்து இத்தனை நாள் எங்கே போனார்? என்று தேடிக் கொண்டிருந்த நிலையிலிருந்த நடிகை கஸ்தூரி இப்போது மீண்டும் லைம்லட்டுக்கு வந்திருக்கிறார். நடிகை என்பதைத் தாண்டி கஸ்தூரி தனது தனிப்பட்ட வாழ்வில் தனது பொது அறிவு மற்றும் மல்ட்டி டேலண்ட் புத்திசாலித்தனம் உள்ளிட்ட விசயங்களில் பிற நடிகைகளைக் காட்டிலும் கொஞ்சம் கவனம் ஈர்க்கக் கூடியவரே! பலருக்கும் கஸ்தூரியை என்றதும்,  ‘சின்னவர்’ திரைப்படத்தில் ‘அந்தியிலே வானம்... தந்தனத்தோம் பாட அலையோடு சிந்து படிக்க’  என்ற பாடலில் ஆடும் தாவணிப்பெண் நினைவுக்கு வரலாம். அல்லது கஸ்தூரி ராஜாவின் அறிமுகம் என்ற வகையில் கிராமத்து திரைப்படம் ஒன்று நினைவில் வரலாம். பெரும்பாலானோருக்கு அமைத்திப்படை அல்வாப் பெண் நினைவுக்கு வரலாம். சிலருக்கு ‘இந்தியன்’ திரைப்படத்தில் பேனா மூடியில் வண்டை அடைத்து மூடி, பேனாவைப் பறக்க வைக்கும் சிற்றாடைப் பெண் நினைவுக்கு வரலாம். இந்த ஞாபகங்கள் அனைத்தும் 90 களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே சொந்தம். ஏனெனில் இன்றைய தலைமுறையினருக்கு கஸ்தூரி என்றால் தெரியாமலும் இருக்கலாம். 

கஸ்தூரி பற்றி இதைத் தாண்டியும் தெரிந்து கொள்ள மதிப்பிற்குரிய சில விசயங்கள் உண்டு. 

  • கஸ்தூரி, தூர்தர்ஷனில் சித்தார்த் பாஸு நடத்திய ‘மாஸ்டர் மைண்ட்’  குவிஸ் நிகழ்ச்சியில் 2000 ஆண்டில் இறுதிச் சுற்று வரை வெல்லும் அளவுக்கு பல்துறை சார்ந்த அறிவு நிறைந்த பெண்.
  • பள்ளிக் காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் முதலிடம் பெற்று கோல்டு மெடல் வாங்கிய டிஸ்டிங்ஷன் மாணவி. 
  • பள்ளிக்காலத்தில் தமிழகம் சார்பில், மாநில அளவில் விளையாடும் அளவுக்கு தேர்ச்சி பெற்ற ஹாக்கி பிளேயர்.
  • 1992 ல் மிஸ். சென்னை பட்டம் வென்றவர்.
  • 1994 ல் மிஸ். இந்தியா பட்டத்துக்காக போட்டியிட்டவர்.

இத்தனை திறன்களுடன் தான் ‘ஆத்தா உன் கோயிலிலே’ திரைப்படம் மூலம் கஸ்தூரி ராஜாவால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார் கஸ்தூரி. இவரது இயற்பெயர் ‘ஷண்மதி’ (பழைய வாரமலரில் எப்போதோ வாசித்த ஞாபகம். ஒரு வேளை பெயர் தவறாக இருந்தால்... தெரிந்தவர்கள் குறிப்பிடலாம்) கஸ்தூரி என்பது அவரது திரைப்பெயர். கஸ்தூரி ராஜாவால் அறிமுகப் படுத்தப் பட்டதால் அவர் தனது குல தெய்வமான கஸ்தூரி அம்மனின் பெயரை தனது அறிமுக நடிகைக்கு வைத்ததாக அப்போது நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. அறிமுகப் படத்தைத் தொடர்ந்து கஸ்தூரி நடித்ததில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான படங்கள் எனில் பிரபுவுடன் நடித்த ‘சின்னவர், அபிராமி, செந்தமிழ் பாட்டு, இந்தியன், அமைதிப்படை, ஆத்மா’ உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. தெலுங்கில் சில படங்கள் நடித்தார். அவற்றுள் உருப்படியாக நினைவிலிருப்பது நாகார்ஜுனாவுடன் நடித்த ‘அன்னமய்யா’ மட்டுமே!

படங்கள் சரியாக அமையாத நிலையில் இடையில் பிரஷாந்துடன் ‘காதல் கவிதை’ என்றொரு படத்தில் காதல் கோட்டை ஹீராவை ஞாபகப் படுத்தும் கதாபாத்திரமொன்றில் கிளாமராக நடித்துப் பார்த்தார். தமிழ் ரசிகர்களுக்கு கஸ்தூரியை அத்தனை கிளாமராகப் பார்க்கப் பிடிக்கவில்லை என்பதா? அல்லது கஸ்தூரிக்கு கிளாமர் ஒத்து வரவில்லை என்பதா? ஏதோ ஒன்று சறுக்கியதில் அப்படியான வேடங்கள் அவருக்குப் பொருந்தவில்லை. நடுவில் சில வருடங்கள் தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலுமாகத் தன்னை துண்டித்துக் கொண்டு திருமணம், குழந்தை என்று நிம்மதியாக இருந்தார். பின்பு மீண்டும் சினிமா ஆர்வம் மேலெழ தமிழிலும், தெலுங்கிலுமாக வடகறி, டான் சீனு உள்ளிட்ட சில படங்களில் அண்ணி, அக்கா கேரக்டர்களில் நடித்தார். மீண்டும் ஒரு சின்ன பிரேக்... காரணம் கஸ்தூரிக்கு அண்ணி, அக்கா வேடங்களில் நடிப்பதில் சிக்கல்கள் இல்லை. ஆனால் சிலர் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, போன்றவர்களுக்கு அம்மாவாக நடிக்க முடியுமா? என்று கேட்டு வந்ததில் கஸ்தூரிக்கு விருப்பமில்லை. ஏன் என்றால் 5 வயதுக் குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதற்கு தான் தயார், ஆனால் வளர்ந்த நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் இப்போதைக்கு தனக்கு விருப்பமில்லை என்கிறார்.  

நாளை  வெளிவரவிருக்கும் சிம்புவின் ‘அன்பானவன், அசரதவன், அடங்காதவன்’ படம் மூலம் கஸ்தூரி மீண்டும் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆகிறார். இந்தப் படத்தில் விசாரணை அதிகாரியாக வரும் கஸ்தூரியின் கதாபாத்திரம் வழக்கமான பெண் விசாரணை அதிகாரிகளைப் போலல்லாது கேஷுவலான உடைகளில்  உலவும்படியாக அமைந்திருக்கிறதாம். படம் வெளிவந்தால் தெரியும், இந்தப் படத்தின் மூலமாகவாவது கஸ்தூரிக்கு தென்னிந்திய திரைப்பட உலகின் கதவுகள் விரியத் திறக்கப் படுமா? இல்லையா? என. 

கஸ்தூரி நடிக்க விரும்பிய கதாபாத்திரங்கள்...

தேவராகம் படத்தில் இயக்குனர் பரதன் முதலில் அணுகியது தன்னத்தான் என்கிறார் கஸ்தூரி. தேவராகத்தில் யாருடைய வேடத்தில் என்பதைக் குறிப்பிடவில்லை. அதில் ஸ்ரீதேவி, ரவளி என இரு நாயகிகள். அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் தனக்கு வருத்தமே என்று தனது பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார் கஸ்தூரி. இது தவிர தமிழில் ரம்பா அறிமுகமான முதல் படத்திலும் முதன்முதலில் அணுகப் பட்டவர் கஸ்தூரி தான். ஆனால் என்ன காரணத்தாலோ அந்த வாய்ப்பும் தவறிப் போனது எனக் குறிப்பிட்டுள்ளார். அதே பேட்டியில் ’ரோஜா’வில் மதுபாலா ஏற்று நடித்த கதாபாத்திரம், ‘பாகுபலியில்’ ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த கதாபாத்திரம், ’மின்சாரக் கனவில்’  காஜோல் நடித்த கதாபாத்திரம் உள்ளிட்டவை எல்லாம் கஸ்தூரி தான் நடிக்க விரும்பிய கதாபாத்திரங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து விட்டு வந்ததைப் பற்றிப் பேசுகையில்; நான் எனது பிறந்த நாளன்று அவரைச் சந்தித்தேன். நாங்கள் பல விசயங்களைப் பற்றி அன்று பேசினோம். பெரும்பாலான மக்கள் நினைப்பதைப் போல அவர் ஒன்றும் முடிவெடுக்கத் தெரியாதவர் அல்ல. ஒரு முறை அரசியலில் இறங்கி விட்டால் மீண்டும் அதிலிருந்து பின் வாங்கக் கூடாது என அவர் தெளிவாக யோசித்து முடிவெடுத்திருக்கிறார். அதற்கு காலம் பதில் சொல்லும் என்று புன்னகைக்கிறார்.

நடிகர் கமல் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகக் கலந்து கொள்ளும்படி தனக்கு அழைப்பு வந்ததாகவும்... ஆனால் 100 நாட்கள் தன்னால் ஒரே அறையில் அடைந்து கிடக்க முடியாது என்பதால், தான் அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாகவும் கூறும் கஸ்தூரி ‘லுக்கீமியா’ பாதிப்பில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் தனது மகளின் எதிர்காலத்திற்காக தொடர்ந்து தென்னிந்திய சினிமாக்களில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ரஜினியுடனான சந்திப்பு குறித்துப் பேசும் போது; ‘காலா’ திரைப்படத்தில் கஸ்தூரிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமொன்று தரப்படவிருப்பதாக ஒரு பேச்சிருந்ததே என்ற கேள்விக்கு; இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினியோடு ஒப்பிடும் போது தான் மிகவும் இளையவராகத் தெரிவதாகக் கூறி மறுத்து விட்டதாகத் தெரிவித்தார். அதுசரி விஜய்க்கு ஜோடியாக வேண்டுமானால் நான் மிகவும் மூத்தவராகத் தெரிகிறேன். ரஜினிக்கு ஜோடியாக வேண்டுமானால் நான் மிகவும் இளையவராகத் தெரிகிறேன். என்ன செய்ய? என்பது போலிருக்கிறது கஸ்தூரியின் பதில். சினிமா எப்போதும் இப்படித் தான்.

கடந்த வருடம் ஒரு பிரபல பற்பசை கம்பெனி விளம்பரத்தில் மாடலாக நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டார் கஸ்தூரி. ஆனால் பாருங்கள் இப்போது கஸ்தூரி அந்த விளம்பரத்தில் இல்லை. அவருக்குப் பதில் வேறு யாரோ அதில் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் விதி என்று தான் சொல்லத் தோன்றுகிறது என்கிறார் கஸ்தூரி. ஏனெனில் 4 வருடங்களுக்கு முன்பு பிரபல செய்திச் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தலைமை பொறுப்பில் பணியிலமரத் தேர்வாகி இருந்தார் கஸ்தூரி. ஆனால் அந்தப் பணியை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு வாரம் முன்னதாக வாழ்வில் விதி விளையாடியது. பணியேற்க வேண்டிய நேரத்தில் நான் என் மகளுடன் மருத்துவமனையில் இருந்தேன். இப்படிப் பலமுறை என் வாழ்வில் விதி விளையாடியிருக்கிறது. மூன்று முறை சாவின் விளிம்பு வரை சென்று மீண்டிருக்கிறேன் நான். நமது நேரம் சரியாக அமையாவிட்டால் நாம் எடுக்கும் முக்கியமான சில முடிவுகள் கூட நம்மை மோசமாகத் திருப்பி தாக்கக் கூடியதாக மாறிவிடும் என்கிறார் கஸ்தூரி.

“இது வரை நான் நடித்த கதாபாத்திரங்களில் ஒன்று பணிவான பெண்ணாக என்னைக் காட்டியிருப்பார்கள் அல்லது கிளாமராகக் காட்டியிருப்பார்கள். ஆனால் நிஜமான கஸ்தூரி எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் விதமான படங்கள் எதுவும் இதுவரை எனக்கு அமைந்ததில்லை. இந்த நிலையில்... சில நாட்களுக்கு முன்  பேய்ப் படத்தில் நடிக்க முடியுமா? என்று கேட்டு ஒரு இயக்குனர் வந்தார். சரிதான் என்னையும் பேய் ஆக்கப் போறாங்க சினிமால!” என்று சிரிக்கிறார் கஸ்தூரி.

Concept courtsy: S subhakeerthana, The newindian express

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com