'என் அறுபது வருட சினிமா வாழ்க்கையில் சில அழகிய தருணங்கள்' இந்தி நடிகர் தர்மேந்திரா பேட்டி!

பாலிவுட்டின் வெள்ளித் திரையை அலங்கரித்த பல நட்சத்திரங்களுள் ஒரு தனித்துவமான
'என் அறுபது வருட சினிமா வாழ்க்கையில் சில அழகிய தருணங்கள்' இந்தி நடிகர் தர்மேந்திரா பேட்டி!

பாலிவுட்டின் வெள்ளித் திரையை அலங்கரித்த பல நட்சத்திரங்களுள் ஒரு தனித்துவமான நட்சத்திரமாக திகழ்ந்தவர் தர்மேந்திரா. அவருடைய காலத்தில், இந்தி திரையுலகின் ஹீ-மேனாகவும் ஆக்‌ஷன் கிங் எனவும் போற்றப்பட்டவர். அதை விட உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஹீரோ என்றும் புகழப்பட்டவர்.

பழம்பெரும் நடிகரான தர்மேந்திரா, 'நான் திரைத்துறையில் நடிக்க வந்து ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டது. இவ்வளவு பெரிய காலகட்டம் இவ்வளவு சீக்கிரமாக கடந்துவிட்டதே என ஆச்சரியமாக இருக்கிறது’ என்று கூறினார்.  

நினைத்துப் பார்க்கும் போது அது நீண்ட பயணம்தான். ஆனால் அது கண் இமைக்கும் நொடிகளுக்குள் இத்தனை சீக்கிரம் முடிந்துவிட்டது போலத் தோன்றுகிறது. அவ்வளவு அழகான பயணமது. இந்தப் பயணத்தில் என் சக நடிகர்கள், திரைச் சூழல் எனப் பலவற்றை நான் இப்போது இழந்து விட்டேன், அது வருத்தமாக உள்ளது’ என்றார் நெகிழ்ச்சியுடன் பேட்டியைத் தொடங்கினார் தர்மேந்திரா.

1960-ல் ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அடியெடுத்து வைத்தவர் பஞ்சாபைச் சேர்ந்த தரம் சிங் தியோல். சினிமாவுக்காகத் தன் பெயரை தர்மேந்திரா என்று மாற்றிக் கொண்டார். பலராலும் அன்புடன் தரம்ஜி என்று அழைப்படுகிறார். தாரா சிங்கைத் தொடர்ந்து நல்ல உடற்கட்டுடன் திகழ்ந்தவர் என்பதால் பாலிவுட்டின் ஹீ-மேனாக போற்றப்பட்டார்.

இந்திய திரையுலகின் சீனியர் நடிகரான தர்மேந்திரா இத்துறையில் தனது 60-வது வருட பூர்த்தியை விரைவில் எட்டப்போகிறார். அவரது பல திரைப்படங்கள் ரசிகர்களின் பெரும் வரவேற்பையும் போற்றுதலையும் நிகறற்ற புகழையும் அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. ‘பாந்தினி’, சத்யகம், ‘ராஜா ஜானி’, பிரதிக்யா, ஷோலே, சுப்கே சுப்கே போன்ற படங்களில் அவர் ஏற்று நடித்த வெவ்வேறு கதாபாத்திரங்களே அதற்குச் சான்று. 

அனுபமா மற்றும் யகீன் போன்ற திரைப்படங்கள் அவரை நல்ல நடிகராக அடையாளம் காட்டியது. சமீபத்தில் வெளியான ‘எ லைஃப் இன் அ மெட்ரா, அப்னே, மற்றும் யம்லா, பக்லா, தீவானா போன்ற படங்களிலிலும் கவனம் பெற்றார்.

தர்மேந்திரா எளிமைக்கும், பணிவுக்கும் பாரம்பரியத்தைப் போற்றுவதற்கும் பெயர் பெற்றவர். சூப்பர் ஸ்டாராக இருப்பதை விட சூப்பர் மனிதராக இருப்பதையே விரும்புவதாக சொல்பவர். அவரது மகன்கள் சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் இருவருமே அப்பாவைப் போன்ற குணம் உடையவர்கள். 

புகழ் மற்றும் ஆடம்பரங்கள் எப்போதும் நிலைக்காது. பணிவும் அடக்கமும் தான் நம்மிடம் எப்போதும் இருக்கும். மற்றவர்கள் நம்மை மதிப்பதற்குக் காரணம் நம்முடைய நல்லியல்புகளால் தான். நாம் எப்படி இருக்கிறோமோ அதைப் பொருத்து தான் உலகம் நம்மை நடத்தும். நல்லவர்களாக இருந்தால் இயல்பாகவே மற்றவர்களின் நன்மதிப்பு கிடைத்துவிடும். அதற்காக தனியாக மெனக்கிட வேண்டாம். என்னுடைய பெற்றோர்களிடமிருந்து எனக்கு வந்த இந்தப்பழக்கம் என்னுடைய மகன்களான சன்னிக்கும் பாபிக்கும் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. 

நம்முடைய சாதனைகளை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதில்லை அர்த்தமில்லை.

தர்மேந்திராவும் அவரது காதல் மனைவி பாலிவுட் ட்ரீம் கேர்ள் என்று புகழப்பட்ட நடிகை ஹேமமாலினியும் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். திருமணத்துக்கு முன்னால் சீதா அவுர் கீதா, ஷோலே, ட்ரீம் கேர்ள் போன்ற படங்களில் நடித்த இந்த ஜோடி காதல் திருமணத்துக்குப் பிறகு அலிபாபா அவுர் 40 சோர், பகவத், சாம்ராட் மற்றும் ரசியா சுல்தான் ஆகிய படங்களில் நடித்து வெற்றிகரமான நட்சத்திர ஜோடியாக திரையிலும் ஜொலித்தார்கள்.

தர்மேந்திரா தன்னைப் பற்றிய பயோபிக் எடுப்பதை தவிர்த்தார். ஆனால் தன் வாழ்க்கையின் நீரோட்டமான விஷயங்களை அழகிய உருது கவிதைகளாக எழுதி வருகிறார்.

தற்போது 81 வயதாகும் தர்மேந்திரா தன் கவிதை குறித்து சொன்னது : 'நான் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவன். எனவே கவிதைகளின் மூலம் என் உணர்வுகளை வெளிப்படுத்துவதை விரும்புகிறேன். இது எனக்கு ஒரு வடிகால் போல. என்னால் எதுவும் சொல்ல முடியாமல், எதையும் செய்ய முடியாமல் போகும் தருணங்களில், மெளனமும் தனிமையும் ஒன்றுடன் ஒன்று பேசத் தொடங்கிவிடும்’.

பேரன் கரண் நடித்துள்ள முதல் படம் ‘பல் பல் தில் கே பாஸ்’ எப்போது வெளிவரும் என  ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார் தாத்தா தர்மேந்திரா. 

உங்களைப் பற்றி ஒரு சுயசரிதம் எழுதினால் என்ன? எத்தனை எத்தனை சம்பவங்களின் தொகுப்பாக அது இருக்கும் என்று கேட்டதற்கு தர்மேந்திரா பணிவுடன், 'இதற்கு மேல் எனக்கு மக்களை நெருங்க வேண்டாம் என்று தோன்றுகிறது. எவ்வளவு தூரம் முடியுமோ அந்தளவுக்கு அவர்களின் மனத்தை தொட்டுவிட்டேன். இதற்கு மேல் எதுவும் தேவை இல்லை. தகவல்களாக அவர்களுடைய புத்தியில் இருப்பதை விட ஆத்மார்த்தமாக அவர்கள் மனத்தில் இருப்பதையே நான் விரும்புகிறேன்’ என்றார்

பாலிவுட்டின் யம்லா பக்லா தீவானா (தர்மேந்திராவின் சமீபத்திய படத்தின் தலைப்பும் இதுவே) என்று கேட்டால் தர்மேந்திரா ஒருவரே பாலிவுட்டின் யம்லா பக்லா மற்றும் தீவானா என்பதுதான் பதிலாக இருக்கும். யம்லா பக்லா தீவானா திரைப்படத்தில் தர்மேந்திரா தன் மகன்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தவிர ட்ரீம் காட்சர் எனும் குறும்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இனி பாலிவுட்டில் வரப் போகும் புதிய நடிகர்களுடன் மேலும் மேலும் நிறைய படங்களில் தொடர்ந்து நடிப்பார் தர்மேந்திரா. 

சந்திப்பு - சுகந்தா ரவால், IANS

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com