ஹாலிவுட்டில் ராட்சத பலூன்: அசத்தும் 2.0 விளம்பர உத்திகள்!

2.0 படத்தை நாங்கள் இந்தியப் படமாக மட்டும் எண்ணவில்லை. ஹாலிவுட் படமாகக் கருதி...
ஹாலிவுட்டில் ராட்சத பலூன்: அசத்தும் 2.0 விளம்பர உத்திகள்!

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை ரூ. 400 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. 

ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள். 

2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் விளம்பரப் பணிகளை முடுக்கியுள்ளது லைக்கா நிறுவனம். இப்படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் சமீபத்தில் அறிவித்தார். 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட் திரையுலகப் பகுதியில் ரஜினி, அக்‌ஷய் குமார் புகைப்படங்களைக் கொண்ட ராட்சத 100 அடி பலூனைப் பறக்கவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை எந்தவொரு இந்தியப் படத்துக்கும் இதுபோன்ற விளம்பர உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டதில்லை. ஹாலிவுட்டில் 2.0 படம் குறித்து கவனம் ஈர்க்க இதுபோன்ற விளம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே ராட்சத பலூன் தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. நாளை லாஸ் ஏஞ்சல்ஸில் இந்தப் பலூன் பறக்கவிடப்பட்டு 2.0 படத்தின் விளம்பரப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. ஹாலிவுட்டை அடுத்து இந்த ராட்சத பலூன் உலகம் முழுக்க கொண்டு செல்லப்பட்டு விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளன. இதையடுத்து லண்டன், துபாய், சான் பிரான்சிஸ்கோ, தென் கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலிய என இந்த 2.0 விளம்பர ராட்சத பலூன் உலகம் முழுக்கப் பறக்கவுள்ளது. 

2.0 படத்தை நாங்கள் இந்தியப் படமாக மட்டும் எண்ணவில்லை. ஹாலிவுட் படமாகக் கருதி விளம்பரம் செய்யத் தயாராகியுள்ளோம் என்கிறார் ராஜூ மகாலிங்கம்.

ரஜினி - ஷங்கரின் 2.0 படம் முதலில் தீபாவளிக்கு வருவதாக இருந்தது. ஆனால் தற்போது அந்தப் படம் ஜனவரி 25 அன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com