உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு...: காவிரி விவகாரம் பற்றி பெங்களூரில் பேசிய விஷால்! (வீடியோ)

கர்நாடகத்துக்கு எதிராகப் பேசினால் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும் என்று தமிழ்த் திரையுலகினர் அச்சப்படும் சூழலில்...
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு...: காவிரி விவகாரம் பற்றி பெங்களூரில் பேசிய விஷால்! (வீடியோ)

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று கர்நாடகத்தில் நடைபெறுகிற ஒரு விழாவில் பேசிவிடமுடியுமா? அப்படிப் பேசினாலும் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியுமா?

கர்நாடகத்துக்கு எதிராகப் பேசினால் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும் என்று தமிழ்த் திரையுலகினர் அச்சப்படும் சூழலில் விஷால் தைரியமாக கர்நாடகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழில் பேசியதோடு மட்டுமல்லாமல் காவிரி விவகாரம் பற்றித் தமிழ்நாட்டின் உரிமையை வெளிப்படுத்தியும் பேசியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரில் நடைபெற்ற ரகுவீரா என்கிற கன்னடப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் கலந்துகொண்டார். 

இந்த விழாவில் விஷால் பேசியபோது, உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு... என்று சொல்லி ஆரம்பித்தார். உண்மையில் அந்த அரங்கில் விஷாலின் இந்தப் பேச்சுக்கு எந்தவொரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் விஷாலின் பேச்சுக்குப் பலத்த பாராட்டுத் தெரிவித்து ஆரவாரம் செய்தார்கள். 

விஷால் தொடர்ந்து கூறியதாவது:

கன்னடப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவாக இருந்தாலும் தாய்மொழியான தமிழில் பேசுவதில் தமிழனாகப் பெருமைப்படுகிறேன். தமிழில்தான் பேசுவேன். தவறாக எண்ணவேண்டாம்.

தண்ணீர் கேட்பது தமிழனின் உரிமை. அதை யாரும் இல்லை என்று சொல்லமுடியாது. எங்கள் உரிமையைக் கேட்கிறோம். கர்நாடகாவில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது உங்கள் கடமை. அதேபோல தமிழகத்தில் வாழ்கிற கன்னடர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது எங்கள் கடமை. 

அனைவரும் இந்தியர்கள்தான். எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. தமிழர்கள் என எங்களை ஒதுக்கி, தண்ணீர் தர மறுப்பது ஏன்? எங்களுக்கும் உரிமையிருப்பதால்தான் கேட்கிறோம். 

தமிழ் சினிமாவை எப்படி கர்நாடகாவில் வரவேற்கிறார்கள் அதுபோல கன்னடப் படங்களையும் நாங்கள் வரவேற்போம். கர்நாடகத்திலிருந்து யார் தமிழகத்துக்கு வந்து படம் எடுத்தாலும் எங்களுடைய தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com