பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் சார்பாக மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவல வாழ்வைப் பேசும் ‘மஞ்சள்’ நாடகம்!

கீழ் மட்டத்திலிருந்து மேலேறி வர விரும்பும் மனிதர்களை தொழில் ரீதியாக கீழ் நிலையில் அழுத்தி வைத்து அவர்களை முன்னேற விடாமல் தடுக்கும் மிகக் கொடுமையான சமூக அமைப்பின் அங்கத்தினர்களாக இருக்கிறோம் நாம்.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் சார்பாக மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவல வாழ்வைப் பேசும் ‘மஞ்சள்’ நாடகம்!

மலம் அள்ளும் தொழிலாளர்களின் நலன் சார்ந்த போராட்டங்களில் தீவிர ஈடுபாடு காட்டி வரும் திரைக்கலைஞர்களில் இயக்குனர் பா. ரஞ்சித்தும் ஒருவர். அவரது  ‘நீலம் புரொடக்சன்ஸ்’ மற்றும் ‘ஜெய்பீம் மன்றம்’ சார்பாக ‘மஞ்சள்’ என்ற தலைப்பில் நாடக நிகழ்வு ஒன்றை பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான ஜெயராணியுடன் இணைந்து நடத்தவிருக்கிறார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி, தொல், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், சு.திருநாவுக்கரசர், கொளத்தூர் மணி, சுப.வீரபாண்டியன், கு.ஜக்கையன், ம.மதிவண்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சத்யராஜ், ராம், வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட திரை ஆளுமைகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மேலை நாடுகளில் இயந்திரம் மூலம் நிறைவேற்றப் படும் மலம் அள்ளும் வேலை இந்தியாவில் மட்டும் எத்தனை வலிமையான பிரச்சாரங்கள் மேற்கொண்ட போதிலும் மனிதக் கைகளால் அள்ளப்படும் அவலம் தீருவதாக இல்லை.

இதற்கு காரணம் நமது இந்திய சமூகத்தில் தொன்று தொட்டு நிலவி வரும் சாதிப் பிரிவினைகளே! சமுதாயத்தின் கீழ் மட்டத்திலிருந்து மேலேறி வர விரும்பும் மனிதர்களை தொழில் ரீதியாக கீழ் நிலையில் அழுத்தி வைத்து அவர்களை முன்னேற விடாமல் தடுக்கும் மிகக் கொடுமையான சமூக அமைப்பின் அங்கத்தினர்களாக இருக்கிறோம் நாம்.

இந்த அவலத்தை முன்னிறுத்தி இந்தியா முழுதும் உள்ள மலம் அள்ளும் தொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பதிவு செய்யும் வகையில் உருவான ‘தவிர்க்கப் பட்டவர்கள்’ எனும் நூலைத் தழுவி உருவானதே மஞ்சள் நாடகம். களப்பணியாற்றி நூலை எழுதியவர் லஷ்மி பாட்ஷா சிங். தற்போது இதை நாடகமாக ஒருங்கிணைக்கவிருப்பது ஜெயராணி, பாரதி செல்வா மற்றும் சரவணன் குழுவினர். பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷனுக்காக மேடையில் இதை நிகழ்த்தப் போவது ஸ்ரீஜித் சுந்தரத்தின் ‘கட்டியக்காரி’ நாடகக் குழுவினர்.

நிகழ்வு நடைபெறவிருக்கும் இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை.

நாள்: 30.06.2017
நேரம்: மாலை 5 மணி

சமூக மாற்றத்திற்கான மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தின் நர்வுகளில் ஒன்றான இதன் மூலம், நிகழ்வில் கலந்து கொள்வோர் ஒவ்வொருவரும்;

“சாதியை ஒழிப்போம் கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்”

எனும் உறுதிமொழியை எடுக்க வேண்டும். என்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com