நயன்தாராவின் 'டோரா' திருடப்பட்ட கதையா? கோலிவுட்டில் புது சர்ச்சை!

நடிகை நயன்தாரவின் நடிப்பில் வெளிவரவுள்ள 'டோரா' திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்று உருவாகியுள்ள சர்ச்சை கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நயன்தாராவின் 'டோரா' திருடப்பட்ட கதையா? கோலிவுட்டில் புது சர்ச்சை!

சென்னை: நடிகை நயன்தாரவின் நடிப்பில் வெளிவரவுள்ள 'டோரா' திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்று உருவாகியுள்ள சர்ச்சை கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடிகை நயன்தாரா நடிப்பில்,அறிமுக இயக்குனர் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டோரா'. தனது உதவி இயக்குநருக்காக இத்திரைப்படத்தை இயக்குனர் சற்குணம் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றும், திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் டோரா திரைப்படத்தின் கதை என்னுடையது என்றும், அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதால்  தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் ஸ்ரீதர் என்பவர் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  'சேட்டிலைட்' ஸ்ரீதர் என்று அழைக்கப்படும் அவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு கார் மற்றும் பெண் கதாபாத்திரம் ஒன்றை அடிப்படையாக வைத்து நான் உருவாக்கிய 'அலிபாபாவும் அற்புத காரும்' என்ற திரைப்படத்திற்கு 2013-ஆம் ஆண்டில் சிறிது நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனால் பொருளாதார காரணங்களால் தொடர்ந்து படப்பிடிப்பு  நடத்த முடியவில்லை. எனது கதையை நான் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கூட பதிவு செய்துள்ளேன். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள 'டோரா' படத்தின் டீசரை பார்த்த பிறகு எனது கதைக்கும் இதற்கும் உள்ள ஒற்றுமைகளை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பின்னர் எனது திரைத்துறை நண்பர்கள் மூலம் விசாரித்த பொழுதுதான் இது என்னுடைய படத்தின் கதைதான் என்பது தெரிய வந்தது. 

இந்த படத்திற்காக பிரத்தேயகமாக வடிவமைக்கப்பட்ட கார் ஒன்றைக் கூட நாங்கள் உருவாக்கி இருந்தோம்.அப்பொழுது எனது அலுவலகம் வடபழனியில் அமைந்திருந்தது. இயக்குனர் சற்குணம் கூட அங்கேதான் தங்கியிருந்தார்.எனவே இதன் மூலமாக கூட என் கதை திருடு போயிருக்க வாய்ப்புகள் இருக்கிறது. எனவே உரிய அனுமதி இல்லாமல் எனது கதையை  பயன்படுத்தியதற்கும், என்னுடைய படத்தின்  செலவுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இயக்குனர் தாஸ் கூறும்பொழுது, 'படத்தையே பார்க்காமல் அவர் எப்படி தன்னுடைய கதை என்று கூறுகிறார் என்பது தெரியவேயில்லை. இருவரது கதைக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் சந்தேகப்படலாம். ஆனால் அதற்காக ஆதாரம் எதுவும் இல்லமல் இப்படி அபாண்டமான குற்றசாட்டுகளை கூறக் கூடாது.ஹாலிவுட்டில் கூட கார்களை அடிப்படையாக வைத்து நிறைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதற்காக அவை காப்பி என்று கூறுவதா? என்னுடைய கதையையும் நான் எழுத்தாளர்கள் சங்கத்தில் கொடுத்திருகிக்கிறேன். அவர்கள் இரண்டையும்பார்த்து தீர்மானிக்கட்டும்.

இவ்வாறு தாஸ் கூறினார்.

இதன் காரணமாக 'டோரா' திரைப்பட வெளியீட்டில் எதுவும் பிரச்சினைகள் உண்டாகுமா என்பது போக போகத்தான் தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com