2.0 vs பாகுபலி 2: ஜெயிக்கப்போவது எது?

இந்திய சினிமா வரலாற்றில் ஒரே வருடத்தில் இரு மாபெரும் படங்கள் சில மாதங்கள் இடைவெளியில் வெளிவருவது...
2.0 vs பாகுபலி 2: ஜெயிக்கப்போவது எது?

2017-ல் மிகப்பெரிய இரு படங்கள் வெளியாகவுள்ளன.

ராஜமெளலியின் பாகுபலி 2, 250 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் - ரஜினி கூட்டணியில் உருவாகும் 2.0-வின் செலவு 350 கோடி ரூபாய். இந்திய சினிமாவில் அதிக செலவில் உருவாகிவரும் படம் இது. இந்திய சினிமா வரலாற்றில் ஒரே வருடத்தில் இரு மாபெரும் படங்கள் சில மாதங்கள் இடைவெளியில் வெளிவருவது இதுவே முதல்முறை என்றுகூட கூறலாம். இதனால் இவ்விரு படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.

2.0 படத்தின் முக்கியமான காட்சியைப் படமாக்கியுள்ளோம். இன்னும் ஒரு பாடல் மற்றும் சில சின்ன வேலைகள் மட்டும் உள்ளன என்று ஷங்கர் சமீபத்தில் ட்வீட் செய்துள்ளார். முழுப் படப்பிடிப்பும் முடிவடைந்த பிறகு இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் 2.0 படத்தின் டீசரே வெளியிடப்படாத நிலையில் (ஏப்ரல் 14 அன்று டீசர் வெளியிடப்படுகிறது), படம் தொடர்புடைய வியாபாரங்கள் ஆரம்பித்துவிட்டன.

கபாலி படத்தின் தொலைக்காட்சி உரிமமே இன்னும் விற்கப்படவில்லை. ஆனால், தீபாவளிக்கு வெளிவரவுள்ள 2.0 படத்தின் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளுக்கான முதல் 15 வருட தொலைக்காட்சி உரிமம், ஜீ குழுமத்துக்கு ரூ. 110 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. 

இது தொலைக்காட்சி உரிமம் மட்டும்தான். அதுவும் 15 வருடங்களுக்கு மட்டும்தான். டிஜிடல் உரிமங்களுக்காக அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது என்று லைக்கா நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜூ மகாலிங்கம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக், கடந்த நவம்பர் மாதம் மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் பிரமாண்டமான நிகழ்ச்சியுடன் வெளியிடப்பட்டது. ரஜினி, ஷங்கர், அக்‌ஷய் குமார், ஏ.ஆர். ரஹ்மான், ஏமி ஜாக்சன், சல்மான் கான் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், இந்த விழாவைத் தொகுத்துவழங்கினார். விழாவில் பேசிய ரஜினி, அக்‌ஷய் குமாரை மிகவும் புகழ்ந்து பேசினார். சமூகவலைத்தளத்தில் ரஜினியின் பேச்சு வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது.

ரஜினி பேசியதாவது: இந்தப் படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் கதை மிகவும் தனித்துவமானது. இந்தப் படம் இதன் தயாரிப்பாளர்களுக்கோ, இயக்குநர் ஷங்கருக்கோ, அல்லது படக்குழுவுக்கோ மட்டும் பெருமை சேர்ப்பதல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் பெருமை சேர்க்கும் படம். தொழில்நுட்ப ரீதியிலும் பட்ஜெட் ரீதியிலும் நாம் முன்னேற்றம் கண்டாலும் இன்னமும் ஹாலிவுட்டை நம்மால் எட்டிப்பிடிக்கமுடியவில்லை. ஆனால் இந்தப் படம் ஹாலிவுட் தரத்தை எட்டும் என நம்புகிறேன். நம் இந்தியத் திரையுலகம் பெருமைகொள்ளும் படமாக இது இருக்கும். எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், அக்‌ஷய் குமார் நடித்துள்ள வேடத்தில் நான் நடித்திருப்பேன். அவர் தான் இந்தப் படத்தின் நிஜமான கதாநாயகன் என்றார்.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படத்தின் இயக்குநர் ராஜமெளலி, ஒரு பேட்டியில் கூறியதாவது:

பாகுபலியின் முதல் பாகத்தில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தினோம். அதனால் கதைக்குள் அந்தளவுக்குப் போகமுடியவில்லை. முதல் பாகம் ஸ்டார்ட்டர்தான். இரண்டாம் பாகம்தான் படையல் விருந்து அளிக்கப் போகிறது. 

என் எல்லா சக்தியும் இந்தப் படத்துக்காக செலவழிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடியையும் ரசித்துச் செய்கிறோம்.

பாகுபலியுடன் தொடர்புடைய நாவல்கள், அனிமேஷன் தொடர்கள் போன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறோம். பாகுபலி போன்ற ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று நீண்ட நாளாகக் காத்திருந்தேன். கதை என்னை ஈர்க்கும்போது சிறிய படங்களையும் இயக்குவேன் என்று கூறினார். 

ராணா டகுபதி ஒரு பேட்டியில் பாகுபலி படத்தின் விஎஃப்எக்ஸ் கிராபிக்ஸுக்கான செலவு குறித்து கூறியதாவது: பாகுபலி படத்தின் முதல் பாக விஎஃப்எக்ஸ் செலவு ரூ. 26 கோடி ஆனது. பாகுபலி இரண்டாம் பாகத்தின் விஎஃப்எக்ஸ் செலவு மட்டுமே ரூ. 40 அல்லது 45 கோடி ஆயிருக்கும். பாகுபலியின் இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கும். போர்க் காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் இதில் இன்னும் அதிகமாக இருக்கும். ரசிகர்களுக்கு ஒரு நல்ல காட்சி விருந்தாக அமையும். முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றது அழுத்தத்தைத் தரவில்லை. அதற்குப் பதிலாக எங்களுக்கு அது மேலும் பலத்தையே அளித்தது என்று கூறினார். 

பல மர்ம முடிச்சுகள் அவிழும் படமாக பாகுபலி 2 பார்க்கப்படுகிறது. எந்திரனுக்கு வேறு என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படுகின்றன என்கிற வகையில் 2.0 படம் உருவாக்கப்பட்டுள்ளது. 2.0 படம் ஹீரோ - வில்லன் மோதலை தொழில்நுட்பத்தின் உதவியுடன் சொல்கிறது. பாகுபலி 2-வில் பல உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு இடமுண்டு.

இந்த இரு படங்களும் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் அடிப்படையில் தென்னிந்தியப் படங்கள். அந்தளவில் தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சியை எடுத்துரைக்கும் படமாக உள்ளன. ஷங்கர், ராஜமெளலி என இரு தென்னிந்திய இயக்குநர்களின் கற்பனையில் உருவான படைப்புகள்.

இரு படங்களும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகின்றன. 

இந்த இரு படங்களும் வசூலில் வரலாற்றுச் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது சொல்லுங்கள்? 2.0 vs பாகுபலி போட்டியில் ஜெயிக்கப்போவது எது? ஆர்வத்துடன் காத்திருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com