இளையராஜாவுக்கு என்ன ஆச்சு?: நோட்டீஸ் விவகாரம் குறித்து கங்கை அமரன் கடும் கண்டனம்!

பேசாமல் தன் பாடல்களை அவர் லாக்கரில் வைத்துப் பூட்டிக்கொள்ளலாம். இந்தப் பணம் இல்லாமல் நாம் என்ன கஷ்டமா படுகிறோம்?
இளையராஜாவுக்கு என்ன ஆச்சு?: நோட்டீஸ் விவகாரம் குறித்து கங்கை அமரன் கடும் கண்டனம்!

திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையொட்டி சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இளையராஜாவின் பாடல்களுக்கு மக்கள் மதிமயங்கிக் கிடக்கிறார்கள். நாளைக்கு என் பாடல்களை டிவியில் போடாதீர்கள். போட்டால் காப்புரிமை கொடுக்கவேண்டும் என்று இளையராஜா கேட்டால் அசிங்கம் இல்லையா? காப்புரிமை என்பது பணம் தொடர்புடைய விஷயம். மக்கள் இலவசமாகப் பாடட்டுமே. மெல்லிசைக் குழுக்கள் கச்சேரி இல்லாமல் தவிக்கிறார்கள். இந்தப் பாடல்கள்தான் அவர்களுக்கு கச்சேரி வாய்ப்பை அளிக்கிறது. அவர்களிடம் பணம் கேட்கிறீர்களா? அந்தப் பணத்தை வாங்கித்தான் நாம் பிழைக்கவேண்டுமா? அவ்வளவு பஞ்சத்திலா நாம் இருக்கிறோம்? எஸ்பிபி, ஜேசுதாஸ் போன்றவர்களின் பாடல்களைக் கேட்க மக்கள் கச்சேரிக்குச் செல்கிறார்கள். அவர்களிடம் சென்று பாடாதே என்றால் என்ன அர்த்தம்?

இளையராஜா ஏற்கெனவே பாடிய தியாகராஜர் கீர்த்தனைக்கோ எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களுக்கோ உரிமை வாங்கினாரா? இது என்ன விளையாட்டு? மெல்லிசைக் குழுக்கள் தனது பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வதற்கு அவர் யார்? அதற்குரிய சம்பளத்தை அவர் பெற்றுவிட்டார். அப்போது அவை எல்லாம் மக்களின் சொத்தாகிவிட்டன.

நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணும்தான் பாடலை எல்லாத் திருமணங்களிலும் பாடுகிறார்கள். அதற்குப் பணம் வேண்டுமா? அப்படி வேண்டும் என்றால் அந்தப் பணத்தை நான் தருகிறேன்.

அவர் கேட்பது அசிங்கமாக, கேவலமாக உள்ளது. இசையைக் கேட்க மக்களிடம் பணம் கேட்கவேண்டுமா?

எம்.எஸ். விஸ்வநாதன் பாடல்களை நிறைய காப்பி அடித்துள்ளோம். அவருக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஜி.ராமநாதன் பாடல்களை மாற்றி பல பாடல்களைக் கொடுத்துள்ளோம். அவரோட குடும்பத்துக்கு நீங்கள் உதவி செய்தீர்களா? இளையராஜாவுக்குப் பண ஆசை வரக்கூடாது. நாம் சொன்னால் கேட்கவேண்டும் என்று நினைப்பது அகங்காரம்.

இளையராஜாவை எல்லோரும் இசைக்கடவுளாகப் பார்க்கும்போது என் பாட்டைப் பாடாதே என்பதுபோல அபசகுணம் வேறொன்றும் இல்லை. என்னுடைய பாடல்களைப் பாடக்கூடாது என்று அவர் சொல்லக் கூடாது. பணம் கொடுத்தால் பாடவிட்டுவிடுவாராம். அப்படிப் பணம் சம்பாதிக்க வேண்டுமா? சம்பாதித்தது போதாதா?

எஸ்பிபி ஒரு நிகழ்ச்சிக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தால் திருப்தியா? அந்தக் காசு நமக்கு வேண்டுமா?

இளையராஜா சாப்பிடுவது கொஞ்சம் சோறு, கொஞ்சம் இட்லி, கொஞ்சம் சப்பாத்தி. அதற்கு எதற்கு இவ்வளவு பணம்? சட்டங்களைக் கொண்டு மக்களின் உரிமையைத் தடுக்கவேண்டாம். தென்றல், மழை, வெயில் போல இயற்கையாகக் கிடைக்கும் இளையராஜாவின் பாடல்களைக் கச்சேரிகளில் பாடுவதைத் தடுக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? டவுன்லோட் உள்ளிட்ட மற்ற விஷயங்களுக்கு வேண்டுமானால் பணம் வாங்கிக்கொள்ளுங்கள்.

கிளப்களில் மேற்கத்தியப் பாடல்களை ஒலிபரப்புகிறோம். அதற்கு யாராவது பணம் தருகிறோமா? எதற்கு இந்த புதிய முயற்சி? மக்கள் விரும்பிய பாடலை, நிகழ்ச்சியில் பாடுவதற்குத் தடை விதிப்பது தவறு.

இளையராஜா இதுபோல இருக்கக்கூடாது. அவர் எப்போது திருந்துவார் எனத் தெரியவில்லை. அவருக்கு என்ன ஆச்சு?

தன் பாடலை எஸ்பிபி பாடக்கூடாது என்று நினைக்கிறாரா அல்லது யாருமே பாடக்கூடாது என்று நினைக்கிறாரா? பேசாமல் தன் பாடல்களை அவர் லாக்கரில் வைத்துப் பூட்டிக்கொள்ளலாம்.

இந்தப் பணம் இல்லாமல் நாம் என்ன கஷ்டமா படுகிறோம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com