நட்பின் அடிப்படையில் இது சரியான நடவடிக்கையல்ல: மதன் கார்க்கி கருத்து

ஒரு பாடல் என்பது இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ஆகியோருக்குச் சொந்தமானது
நட்பின் அடிப்படையில் இது சரியான நடவடிக்கையல்ல: மதன் கார்க்கி கருத்து

ஒரு பாடல் என்பது இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ஆகியோருக்குச் சொந்தமானது என பாடலாசிரியர் மதன் கார்க்கி கருத்து கூறியுள்ளார்.

திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையொட்டி சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கி ஃபேஸ்புக்கில் கூறியதாவது:

சட்டத்தின்படி ராஜா சார் செய்வது சரி. ஒரு பாடல் - இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ஆகியோருக்குச் சொந்தமானது.

ஆனால் நட்பின் அடிப்படியில் இந்த நடவடிக்கை சரியானதாகத் தோன்றவில்லை. நோட்டீஸுக்குப் பதிலாக ஒரு தொலைப்பேசி அழைப்பு பிரச்னையைச் சுமூகமாக்கியிருக்கும்.

திரையரங்கைத் தவிர ஒரு பாடல் பொதுமக்களிடம் செல்லும்போது அதற்குரிய உரிமத் தொகை இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ஆகியோருக்குச் செல்லவேண்டும். உரிமத்தொகை தொடர்புடைய அமைப்புகளான ஐபிஆர்எஸ் போன்றவை அந்தத் தொகையை வசூலித்து உரியவருக்கு வழங்கும்.

ராஜா சார், தன்னுடைய உரிமத் தொகையைப் பெற ஐபிஆர்எஸ் அமைப்பை நாடாமல் தானே அதை நிர்வகித்துக்கொண்டால், அப்போதும் அவர் ஒரு பாடலுக்கு முழுசாகச் சொந்தம் கொண்டாடமுடியாது.

பொதுமேடைகளில் அவர் இசை நிகழ்ச்சி நடத்தும்போது உரிமத் தொகை தயாரிப்பாளர், பாடலாசிரியர் ஆகியோருக்கு வழங்கப்படவேண்டும்.

எழுத்தாளர்களும் தயாரிப்பாளர்களும் ராஜா சாருக்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்பினால் அவரால் உரிய அனுமதியின்றி மேடைகளில் அவர் பாடல்களைப் பாடமுடியாது.

உரிமத் தொகை விவகாரத்தை ஒரு பெரிய தளத்துக்கு ராஜா சார் கொண்டு செல்வதில் நான் மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com