ராயல்டி விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

"ராயல்டி' தொடர்பாக இளையராஜா அனுப்பியுள்ள நோட்டீஸ் விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம் என்று பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராயல்டி விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

"ராயல்டி' தொடர்பாக இளையராஜா அனுப்பியுள்ள நோட்டீஸ் விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம் என்று பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை முகநூலில் பதிவு செய்துள்ள விவரம்:
எனது நண்பர்கள், இசைப் பிரியர்கள் குறிப்பாக அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், "இளையராஜா - எஸ்.பி.பி.' விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன்.
நடந்த விஷயம் துரதிர்ஷ்டவசமானது. வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டும். கடவுளின் படைப்பில் அனைவரும் சமம். நன்றி என்று தெரிவித்துள்ளார்.
சுய மரியாதை இருக்கிறது: மேலும் அவர் தனது முகநூல் பக்கத்தில் ரசிகர் ஒருவருக்கு அளித்துள்ள பதிலில், "அமெரிக்க நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்னதாக நான் இளையராஜாவிடம் தொலைபேசி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுமதி கேட்டிருக்கலாம். இப்போது சட்டத்தை மதிக்கிறேன். அதே வேளையில் எனக்கு சுயமரியாதை இருக்கிறது. அதனாலேயே எனது முடிவை அறிவித்தேன்.
இருப்பினும், சூடான விவாதங்களை விடுத்து முன்னேறிச் செல்வோம். இளையராஜாவின் பாடல்களைப் பாடுவேன் என எதிர்பார்த்து ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவே நான் வெளிப்படையாக கருத்து கூறினேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
நல்ல நண்பர்: இளையராஜா எனது நல்ல நண்பர். அதேவேளையில் எனக்காக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று தனது ரசிகர்களுக்குப் பதிலளித்துள்ளார் எஸ்.பி.பி.

இசையமைத்தது எதற்காக...?

பாடல்கள் என்பதே மக்கள் கேட்பதற்கும், பாடுவதற்கும்தான். ஆனால், பாடாதே என்று சொன்னால், இசையமைத்தது எதற்காக என்று இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
இந்த விவகாரத்தில் இளையராஜாவின் நடவடிக்கை மிகவும் தவறு. என்னுடைய பாடல்களை யாரும் கேட்காதீர்கள். பாடாதீர்கள்.. என்று மாணிக்கவாசகர், வள்ளலார், எம்.எஸ்.விஸ்வநாதன், ஜி.ராமநாதன் சொன்னார்களா..?
எதற்கான ஆசை இது? ஆசையை விட்டெறிந்துவிட்டு போக வேண்டியது தானே. இதற்கு மேலும் சம்பாதித்து என்ன செய்யப் போகிறீர்கள்? இதனை வியாபாரம் ஆக்கக் கூடாது. இந்த இசையை ஏற்கெனவே வியாபாரம் ஆக்கி சம்பளத்தை வாங்கி விட்டோம்.
10 பேர் நம்மைப் பின்பற்றி பாடுகிறார்கள் என்றால், என்னைப் பின்பற்றாதே, பாடாதே என்று சொன்னால் என்ன அர்த்தம்? நீங்கள் பாடல்கள் போட்டதே, மக்கள் பாடுவதற்குத் தான். கேட்பதற்காகத்தான். ஆனால், பாடாதே என்று சொன்னால், இசையமைத்தது எதற்காக என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com