தமிழனை ஏன் அடிக்கிறாய் என கர்நாடகாவில் கேள்வி எழுப்பினேன்: பிரகாஷ் ராஜ்

என்னைக் கன்னடர் என சேரன் எப்படிக் கூறலாம்? நான் ஒழுங்காகத் தமிழ் பேசுவதில்லையா? தமிழ்த் திரைக்குப் பெருமை சேர்த்ததில்லையா?
தமிழனை ஏன் அடிக்கிறாய் என கர்நாடகாவில் கேள்வி எழுப்பினேன்: பிரகாஷ் ராஜ்

என்னைக் கன்னடர் என சேரன் எப்படிக் கூறலாம்? நான் ஒழுங்காகத் தமிழ் பேசுவதில்லையா? தமிழ்த் திரைக்குப் பெருமை சேர்த்ததில்லையா? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இதுவரை கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகம் சங்கத்தின் நிர்வாகப் பணிகளை கவனித்தது. அந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. 

நிர்வாகப் பதவிகளை கைப்பற்ற பலர் போட்டியிடவுள்ளனர். இதற்கான மனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் சென்னையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கேயார், ராதாகிருஷ்ணன், டி.சிவா, விஷால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு கௌதம் வாசுதேவ் மேனன், பவித்ரன், பிரகாஷ்ராஜ், ஏ.எம்.ரத்னம், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட 8 பேர் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு பாபு கணேஷ், எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஆர்.பிரபு, விஜயமுரளி ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. இதைத் தவிர கௌரவச் செயலாளர்கள் பதவிக்கு ஏ.எல்.அழகப்பன், ஞானவேல்ராஜா, சிவசக்தி பாண்டியன் உள்ளிட்ட 7 பேர் போட்டியிடுகின்றனர். இதே போல் செயற்குழு உறுப்பினர்களுக்கும் பல முனைப் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலின் மேற்பார்வை அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் தேர்தலை முன்வைத்து நடிகர் விஷாலுக்கு இயக்குநர் சேரன் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இன்று செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த நடிகர் பிரகாஷ்ராஜ், தன்னை கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று விமரிசனம் செய்ததற்காக இயக்குநர் சேரனுக்குக் கண்டனம் தெரிவித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது: 

என்னை எப்படி சேரன் கன்னடர் என்று கூறலாம்? நான் இந்தப் பூமிக்குப் பிறந்தவன். நான் ஒழுங்காகத் தமிழ் பேசுவதில்லையா? தமிழ்த் திரைக்குப் பெருமை சேர்த்ததில்லையா? நல்ல படங்களைத் தயாரித்ததில்லையா? இதில் மொழி எங்கு வருகிறது? இதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

அவர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஆதரவளிக்கும் கேஆர் தமிழரா? ஏஎம் ரத்னம் தமிழரா? எந்தத் தலைமுறையில் சேரன் இருக்கிறார்? அவர் பரபரப்பு செய்யவேண்டும் என்பதற்காகப் பேசுகிறார். இதில் வேறு என்ன இருக்கிறது? தலைமைப் பதவியை ஒரு தமிழர் தான் வகிக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். தகுதியுள்ளவன் யாராக இருந்தாலும் தலைவன் ஆகலாம். அப்படி உனக்கு அதில் கருத்துவேறுபாடு இருந்தால் மோதிப் போர். 

காவிரிப் பிரச்னையில் என் நிலைப்பாடு குறித்தும் கர்நாடகாவில் நடைபெற்ற கலவரம் குறித்தும் கேள்வி எழுப்பினார்கள். காவிரி விவகாரம் தண்ணீர் பிரச்னை மட்டுமல்ல. அது விவசாயிகளின் பிரச்னையும்கூட. வண்டியில் டிஎன் என்று இருந்தால் அது தமிழ் பேசுகிறதா? இதற்கு ஏன் தமிழனை அடிக்கிறாய் என்று கர்நாடகாவில் கேள்வி எழுப்பியிருக்கிறேன் என்று பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com