பாகுபலி 2: விமர்சனம்

சூழ்ச்சி வலையில் உயிர் நீத்த பாகுபலியின் மகன் படை திரட்டி, பழி தீர்த்துப் பேரரசன் ஆகும் கதை.
பாகுபலி 2: விமர்சனம்

சூழ்ச்சி வலையில் உயிர் நீத்த பாகுபலியின் மகன் படை திரட்டி, பழி தீர்த்துப் பேரரசன் ஆகும் கதை.

ஒரு சாம்ராஜ்யம்... இரு வாரிசுகள்... காதல், அரியணை, பகை. ஓர் வாரிசு கொல்லப்பட, அவருடைய குழந்தை எங்கோ வளர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பின் பழிவாங்கும் படலத்தின் அத்தியாயம்தான் படம்.

"பாகுபலி' முதல் பாகத்தின் முடிவிலிருந்துதான் தொடங்குகிறது படம். கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்? என்ற கேள்விக்கான விடை தேடும் வேகத்தோடு தடதடக்கிறது காட்சிகள். தடதடத்து ஓடும் ஒவ்வொரு காட்சியும் எப்படி ரசிகனை ஈர்க்கிறது என்பதெல்லாம் விறு விறு சினிமா...!

ஹாலிவுட்டில் இது போல் எண்ணிக்கையில் அடங்காத படங்கள் வந்திருந்தாலும், தமிழுக்கு இதுதான் முதன் முறை. படமாக்கப்பட்ட தரத்திலும், கதை சொல்லும் விதத்திலும், தொழில்நுட்பத்திலும் இது இந்திய சினிமாவின் அடுத்தகட்ட அபாரப் பாய்ச்சல்!

ஏற்கெனவே நம் தமிழ் சினிமாக்களில் சொல்லப்பட்ட கதைதான்... ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்து வியந்த பிரம்மாண்டம்தான். ஆனாலும், காட்சிக்குக் காட்சி அசரடித்து ஆச்சரியம் கொள்ள வைக்கிறது "பாகுபலி 2.' காட்சிகள்தான் கதையின் முழு பலம்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்துக் கதை. அதில் மகிழ்மதி அரசாங்கத்தின் பிரம்மாண்டம், மலை அருவிகள், விரிந்து பரந்த சாம்ராஜ்ஜியம், வீர தீர சூர பிரபாஸ், நிறைவான ராணா, விசுவாச சத்யராஜ், நஞ்சக நாசர், ராஜமாதா ரம்யாகிருஷ்ணன், அழகு அனுஷ்கா, பன்றி வேட்டை பரபரப்பு, போர் கலவரம், தாய்ப்பாசம், பகை தீர்க்கும் படலம், மனம் நிறைக்கும் மகிழ்மதி மக்கள், கண்ணீரில் கரையும் காட்சிகள் என இந்தியப் படங்களிலேயே இது முற்றிலும் புதிய அனுபவம்!

பிரபாஸுக்கு இது லைஃப் டைம் படம். ஒரு கண்ணில் காதல், இன்னொரு கண்ணில் பாசம் மிதக்க வெகுளியும், வீரமுமாக அபாரமாக உழைத்திருக்கிறார். அனுஷ்கா காட்டும் காதல் சாடையில் வெட்கம், துயரத்திலும் விவேகம், எங்கெங்கு காணினும் வீரம்... வீரம்... வீரம்... அற்புதம் பிரபாஸ்!
எதிரிகளிடம் விழுந்து விடக் கூடும் என நம்பும், அடுத்த நொடியில் அத்தனை பேரையும் உயிர்த்தெழும் அதிரடி அவதாரம்... பிரபாஸþக்கு ஒரு மைல்கல் ஆக்ஷன்.

கனமான பாத்திரம் அனுஷ்காவுக்கு. முரட்டுத்தனமாகட்டும் பிரபாஸின் காதலைப் புரிந்துகொண்டு மெüனமாகப் புன்னகைப்பதாகட்டும், பேரரசி என்று கூடப் பார்க்காமல் ரம்யாகிருஷ்ணனிடம் ஆத்திரப்படுவதாகட்டும், தைரியமும் துயரமும் அலைக்கழிக்கும் பெண்மைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் அனுஷ்கா!

அரியணையில் "அசால்ட்' காட்டும் ரம்யாகிருஷ்ணன், படம் முழுவதும் வியாபித்திருக்கும் சத்யராஜின் விசுவாசம், அனுபவ நடிப்பை அள்ளித் தந்திருக்கும் நாசர், பொருத்தமான ராணா, அணை உடைத்து எதிரிகளைத் தாக்கும் போர் வியூகம் என கொஞ்சம் கூட உறுத்தாத சி.ஜி.க்களால் நம் இமைகளைப் படபடக்க வைக்கிறது அந்த பிரம்மாண்ட உழைப்பு.
பனைமரத்துத் தந்திரம் முதல், ராணாவின் தேர் முகப்பாக மிரட்டும் சிங்கமுகம் வரை கிராபிக்ஸ்களிலும் கலை இயக்கத்திலும் அவ்வளவு உழைப்பு.
படத்தின் மிகப் பெரிய பலம் மதன் கார்க்கியின் வசனங்கள். அதை கதாபாத்திரத்தின் வார்த்தைகளாகவே காட்சிகளை உலவ விட்டிருக்கிறார் ராஜமௌலி. அந்தக் கற்பனையின் காலமும் இயல்பும் அப்படியே பதிவாகியிருக்கின்றன. ""மூச்சைப் படைப்பவன் தேவன்... மூச்சை நீட்டிப்பவன் வைத்தியன்... மூச்சைக் காப்பவனே சத்ரியன்...'' என்ற கார்க்கியின் எழுத்துகளில் தெரிகிறது வைரமுத்துவின் சாயல். ""நான் நாய் என்பதால் மோப்பம் பிடித்தேன்...'' என முதல் பாதியில் குறும்பு கொப்பளிக்கும் வசனங்களில் தொடங்கி, ""காரிருளின் கருவில் இருந்து ஒளியைப் பிரகாசிக்கும் மதி கொண்டவரடா உன் தந்தை...'' என நெகிழ வைத்துக் கலங்கடிக்கின்றன கார்க்கியின் வசனங்கள்.

மகிழ்மதி பேரரசின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்படும் ஆரம்பக் காட்சி முதல் மரணம் உறைந்திருக்கும் போர்க் காட்சியின் விஸ்தாரப் பரப்பைச் சுற்றிச் சுழலும் இறுதிக் காட்சி வரை கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, படத்தின் ஆகப் பெரும் பலம்.

மரகதமணியின் இசையில் மதன்கார்க்கியின் வரிகளில், பாடல்களுக்கு இன்னும் பலம் சேர்த்திருக்கலாம். பின்னணி இசையில் இன்னும்கூட மெனக்கெட்டு இருக்கலாம் மரகதமணி! கலை, எடிட்டிங், ஒப்பனை, ஆடை வடிவமைப்பு என படத்தின் ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கின்றன. எடிட்டிங்கில் குழப்பம் இருப்பது தெரிகிறது. இன்னும் நீண்டிருக்க வேண்டிய காட்சிகள், சட்டென முடிக்கப்படுவது "உச்' கொட்ட வைக்கிறது. இடைவேளைக்கு முன்பு இருக்கும் வேகம், அதன் பின்னும் இருந்திருந்தால் மறுபாதி இன்னும் தடகள வேகத்தில் பயணித்திருக்கும்.

இதுவரையிலான இந்திய சினிமா தொடாத பிரம்மாண்ட உச்சம் இந்தப் பாகுபலி 2. அதற்காக ராஜமௌலியை உச்சி முகர்ந்து பூங்கொத்து தருகிறது "தினமணி.'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com