மறக்க முடியாத சத்யஜித் ரே!

இரண்டு  வாரங்களுக்கு சுமாராக ஓடிய படம் அடுத்த 6 வாரங்களுக்கு  ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.
மறக்க முடியாத சத்யஜித் ரே!

சத்யஜித் ரே, இந்திய சினிமாவை இருபதாம் நூற்றாண்டிலேயே உலகத் தரத்துக்கு எடுத்துச்சென்ற இணையற்ற இயக்குநர். அவரைப் பற்றிய சில தகவல்கள்:

சத்யஜித் ரேயின் தாத்தா மிகச் சிறந்த ஓவியர், கவிஞர் மற்றும் விஞ்ஞானியாக இருந்தவர். தந்தை மிகச் சிறந்த எழுத்தாளர்.

சத்யஜித் ரே, பள்ளிப் படிப்புக்குப்பிறகு, கல்கத்தா பல்கலைக்கழகத்தில், அவருக்குப் பிடித்த பாடங்களான  பௌதிகம் மற்றும் பொருளாதாரத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். கல்கத்தாவில் உள்ள சாந்தி நிகேதனுக்குச் சென்ற பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அங்கு, அவர் படங்கள் வரைய கற்றுக்கொண்டார். ஆனால், சாந்திநிகேதனில் ஓவியப் படிப்பை முழுமையாக முடிக்கமுடியவில்லை. அதன்பிறகு 1943ல் கல்கத்தாவில் இருந்த விளம்பர கம்பெனியில் ஆர்ட் டைரக்டராக வேலைக்குச் சேர்ந்தார்.

ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கம்பெனியில் வேலை பார்த்தார். 1931ல் மேற்கு வங்காள கிராமத்தில் நடக்கும் கதை ‘பதேர் பஞ்சாலி’ என்கிற தலைப்பில் தொடராக பேப்பரில் வெளிவந்தது. மிகவும் பிரபலமான கதை. அந்தக் கதையை புத்தகமாக வெளியிட தீர்மானித்து, கதைக்குப் படங்கள் வரைகிற வேலை சத்யஜித் ரேயிடம் வந்தது. ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கப் படிக்க இக்கதையைப் படமாக எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் அவர் மனத்தில் ஓடுகிறது. இதற்கிடையே வேலை நிமித்தமாக சத்யஜித் ரே இங்கிலாந்து செல்ல வேண்டிய சூழ்நிலை. அங்கு 30 நாள்கள் தங்கியிருந்தார். தங்கியிருந்த 30 நாள்களில், 90-க்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களைப் பார்த்துள்ளார்.

இந்தியா திரும்பிய பிறகு படம் இயக்குவதற்கான வேலையைத் தொடங்கினார். அவர் சந்தித்த 30க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னார். ஆனால் யாரையும் சம்மதிக்க வைக்க முடியவில்லை. இப்படியாகப் பல கஷ்டங்களுக்குப் பிறகு, 1952ல் சில அமெச்சூர் நடிகர்கள் மற்றும் இரு தொழில் முறை நடிகர்களைக்கொண்டு படத்தை ஆரம்பிக்கிறார். இத்தருணத்தில், இப்படத்தில் வேலை செய்த அனைவரும், இப்படத்துக்காக அதுவரை பார்த்து வந்த வேலையை விடுவது முட்டாள்தனம் என்று எண்ணி படப்பிடிப்பை சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வைத்துக்கொண்டார்கள். ஒரளவு படம் வளர்ந்த பிறகும்கூட எடுத்த படத்தை தயாரிப்பாளர்களுக்குப் போட்டுக் காண்பித்தும் யாரும் நிதியுதவி செய்ய முன்வரவில்லை. அதன்பின் 1-1/2 வருடங்கள் கழித்து மேற்கு வங்காள அரசாங்கத்தை அணுகினார். அரசாங்கமும் படத்தை முடிக்க நிதியுதவி செய்வதாக பச்சைக்கொடி காண்பித்தது.

1955ல், முதல் படத்தை இயக்கி முடித்தார். இப்படத்துக்குப் பின்னணி இசைக்கு ரேயின் நெருங்கிய நண்பரான மறைந்த சிதார் மேதை ரவி சங்கரை அழைத்தார். ரவி சங்கருக்கு நேரமில்லை. ஆனாலும் தன் வேலைக்கு நடுவே தொடர்ந்து 11 மணி நேரம் பணியாற்றி வேலையை முடித்துக்கொடுத்தார். ரேயின் ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ரா சிறந்த சிதார் இசைக் கலைஞர், இவரை வைத்து மீதமுள்ள படத்துக்குப் பின்னணி இசையை முடித்தார். இப்படியாக எல்லா வேலைகளும் முடித்தாயிற்று. 1955ல் ‘பதர் பஞ்சாலி’ படம் வெளியானது. முதல் இரண்டு  வாரங்களுக்கு சுமாராக ஓடிய படம் அடுத்த 6 வாரங்களுக்கு  ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.

‘பதர் பஞ்சாலி’ படத்துக்கு 11 சர்வதேச விருதுகள் கிடைத்தன. ஒரே படத்தில் சத்யஜித் ரே புகழின் உச்சிக்குச் சென்றார். ‘பதர் பஞ்சாலி’ வெற்றிக்குப் பிறகு, தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரத் திரைப்பட இயக்குநரானார். அதன் பிறகு அவர் இயக்கிய படங்களில் ஒருசில தவிர மற்றவையெல்லாம் வரலாறு. போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை. 

1976ஆம் ஆண்டு, National Centre for Performing Arts என்ற அமைப்பும் தமிழக அரசும் இணைந்து, நாட்டியத்தில் புகழ்பெற்ற தமிழகக் கலைஞரான பாலசரஸ்வதியைப் பற்றி  ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று சத்யஜித் ரேவுக்கு அழைப்பு விடுத்தனர். அழைப்பை ஏற்ற ரே சென்னை வந்து தங்கி பாலசரஸ்வதி வீட்டில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார். மாமல்லபுரத்துக் கடற்கரையோரம் அருகே ஒரு சில நடனக் காட்சிகளைப் படமாக்கினார். 30 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம். மிகவும் அருமையான ஆவணப்படம்.

மகாபாரதத்தை, அதிலும் குறிப்பாகப் பகடை விளையாட்டு மற்றும் அதற்குப் பிறகு வரும் கதையைப் படமாக்க விரும்பினார். பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களுக்காக விருப்பத்தைக் கைவிட்டார்.

ஹிந்தித் திரைப்பட உலகில் கொடி கட்டிப் பறந்த ஷர்மிளா தாகூரை, 1959ம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘அபுர் சன்சார்’ என்ற வங்காளப் படத்தில் அறிமுகப்படுத்தினார் சத்யஜித் ரே. 1968ல் அன்றைய பிரபல கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான மன்சூர் அலிகான் பட்டோடியை ஷர்மிளா தாகூர் திருமணம் செய்துகொண்டார்

அதேபோல் 1961ல் ‘தீன் கன்யா’ – (மூன்று மகள்கள்) என்ற படத்தில் அபர்ணா சென் என்பவரை நடிகையாக அறிமுகப்படுத்தினார்.

காலம் சென்ற தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர், படப்பிடிப்பின்போது, அடிக்கடி நகத்தைக் கடித்துக்கொண்டே இருப்பார். அதேபோல், சத்யஜித் ரே, படப்பிடிப்பின்போது தனது கைக்குட்டையைக் கடித்துக்கொண்டே இருப்பாராம். படப்பிடிப்பின்போது, தினமும் மதிய உணவில் வறுத்த மீன் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.  

ஹிந்தித் திரைப்படத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகர்-இயக்குநர் ராஜ்கபூர், சத்யஜித் ரேயின் தீவிர ரசிகர். இவர், தனக்கொரு ஹிந்தித் திரைப்படத்தை இயக்கித் தருமாறு அழைத்தார். ஆனால், கடைசிவரை ராஜ் கபூர் அழைப்பை சத்யஜித் ரே ஏற்கவில்லை.

இப்படி ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்கள் எடுத்து சர்வதேச அளவில் புகழ் பெற்றவர், சத்யஜித் ரே. மே 2, 1921-ம் ஆண்டு பிறந்தவர். அடுத்த நான்கு வருடங்களில் அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com