பாகுபலி 1, டங்கல் படங்களின் ஒட்டுமொத்த வசூலை ஆறே நாளில் தாண்டிய பாகுபலி 2

அடுத்ததாக ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்கிற இமயத்தை எட்டும் முயற்சியில் பயணித்து வருகிறது...
பாகுபலி 1, டங்கல் படங்களின் ஒட்டுமொத்த வசூலை ஆறே நாளில் தாண்டிய பாகுபலி 2

பாகுபலி 2 படத்தின் வசூல் நிலவரம் நாளுக்கு நாள் பிரமிப்பூட்டும் விதத்தில் உள்ளன.

முதல் நாள் ரூ. 121 கோடி வசூலித்து சாதனை செய்த இந்தப் படம், தற்போது ஆறு நாள்களில் ரூ. 785 கோடியைத் தொட்டுள்ளது. அதாவது இந்தியாவில் ரூ. 495 கோடி, இதர நாடுகளில் ரூ. 155 கோடி. இதன் அடிப்படையில் அதிகம் வசூல் செய்த இந்தியப் படம் என்கிற பெருமையை விரைவில் பெறவுள்ளது. 

ஆறு நாள்களில் ஹிந்தியில் மட்டும் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் ரூ. 50 கோடி. கேரளாவில் ரூ. 30 கோடி. தற்போது அதன் வசூல் நேரடி மலையாளப் படங்களுக்கு நிகராக உள்ளது. 

அமீர் கானின் பிகே படம் ரூ. 792 கோடி வசூலித்து இந்திய சினிமாக்களில் முதலிடத்தில் உள்ளது. டங்கல் ரூ. 744 கோடி வசூலித்ததை நேற்று முறியடித்த பாகுபலி 2, இன்று எப்படியும் பிகே படத்தின் வசூலைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி 1 படம் ஒட்டுமொத்தமாக ரூ. 650 கோடி வசூலித்தது. ஆனால் அதன் வசூலை ஒருவாரத்துக்குள் தூக்கிச் சாப்பிட்டுள்ளது பாகுபலி 2 வசூல்.

ஹிந்தி பாகுபலி 2, முதல் மூன்று நாள்களில் சுல்தான், டங்கல் வசூலைத் தாண்டியது. அந்தப் படங்கள் முறையே ரூ. 105 கோடி, ரூ. 107 கோடி வசூலித்தன. ஆனால் ஹிந்தி பாகுபலி 2, மூன்று நாள்களில் ரூ. 128 கோடி வசூலித்து மகத்தான சாதனை செய்தது. இத்தகைய வசூல் வேகம் இன்னும் நிற்காமல் இருப்பதுதான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. 

ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. ரூ. 180 கோடி பட்ஜெட்டில் உருவான பாகுபலி 1, ரூ. 650 கோடி வசூலித்தது. இந்நிலையில் ரூ. 250 கோடி செலவில் உருவான பாகுபலி 2, அதன் முதல் பாகம், டங்கல் பட வசூல்களைத் தாண்டி, விரைவில் பிகே படத்தையும் பின்னுக்குத் தள்ளி, அடுத்ததாக ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்கிற இமயத்தை எட்டும் முயற்சியில் பயணித்துவருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com